முகமது ஹுசைன்
நூறுக்கும் குறைவான வீடுகளைக்கொண்ட கிராமங்கள் பல இருக்கும் நமது மாநிலத்தில், 500-க்கும் அதிகமான வீடுகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல பெருநகரங்களில் உள்ளன.
இதிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது ஒரு சிற்றூருக்கு இணையானது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நான்கு பேர் கொண்ட வீட்டிலேயே பிரச்சினைகள் பல ஏற்படும்போது, ஒரு சிறிய இடத்தில் 500 வீடுகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரச்சினை ஏற்படாதா என்ன?
எனது வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டார், அவர் வீட்டில் நாய் வளர்க்கிறார், தூங்கும்போது சுவரில் துளை (டிரில்) போடுகிறார், குப்பைகளை காரிடாரில் கொட்டுகிறார், எனது வீட்டுக்கு முன்பாக சூடம் கொளுத்துகிறார், சர்வீஸ் ஏரியாவில் ஏசி தண்ணீர் வடிகிறது என்பது போன்ற புகார்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் எழாத நாளே இல்லையென்று சொல்லலாம். இது போதாது என்று, எதற்கும் தன்னை முன்னிறுத்தும் தனிப்பட்ட சிலரின் இயல்பாலும் புதுவிதப் பிரச்சினைகள் ஏற்படும்.
தனி வீட்டில் வசிப்பவர்கள், எப்படி அந்த ஊரின் சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ, அதேபோல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப் பவர்களும் அந்தக் குடியிருப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வது மட்டுமே இதைத் தவிர்க்கும் வழி. குடியிருப்போர் நலச் சங்கத்தின் தேவை ஏற்படும் புள்ளியும் இதுவே.
குடியிருப்போர் நலச் சங்கம் என்றால் என்ன?
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களின் உரிமையைக் காக்கவும், நலனைப் பேணவும் உருவாக்கிக்கொள்ளும் அமைப்பே குடியிருப்போர் நலச் சங்கம். குறைந்தபட்சம் ஐந்து வீட்டுக்காரர்கள் சேர்ந்தால்கூட இந்தச் சங்கத்தைத் தொடங்கிவிட முடியும். புதிதாகத் தொடங்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அனைத்து வீடுகளும் விற்ற பிறகே சங்கம் தொடங்க முடியும். தேவையென்றால், அதுவரை தற்காலிக சங்கம் தொடங்கிக்கொள்ளலாம்.
நிரந்தர சங்கம் உருவான பிறகே அனைத்து வீட்டுக்காரர்களும் இணைந்து சங்கப் பொறுப்பாளர் களைத் தேர்வுசெய்ய முடியும். அதன் பிறகு குடியிருப்புச் சங்கத்தின் விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தனிநபர் விருப்பத்திற்கேற்பவோ சங்க பொறுப்பாளர்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ விதி முறைகளைக் கண்டிப்பாக உருவாக்கக் கூடாது. அனைத்து வீட்டுக்காரர்களின் கருத்துகளையும் அறிந்து, அதன்படி விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் வாடகைக்குக் குடியிருப்பவர்களைச் சங்க பொறுப்புகளில் நியமிக்க முடியாது.
சங்கத்தின் தேவை என்ன?
நேர்மையும் வாக்குறுதிகளும் காலாவதியாகிவிட்ட காலகட்டம் இது. இது கட்டுமான நிறுவனங்களுக்கும் பொருந்தும். வீட்டை விற்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காக, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைவிட அதிகமான வாக்குறுதிகளை அவர்கள் அளிப்பது வாடிக்கையாக உள்ளது.
சில வாக்குறுதிகள் அத்தியாவசிய மானவையாக இருக்கும். உதாரணத்துக்கு, குழந்தைகள் விளையாடும் பூங்கா, கிளப் ஹவுஸ், கழிவு நீர் சுத்திகரிப்பு போன்றவை. பல கட்டுமான நிறுவனங்கள், இவற்றை வழங்குவதற்கு இயன்ற வரை காலதாமதம் செய்யும். இவற்றைக் கேட்கும் தனிநபர்களை இம்மாதிரியான நிறுவனங்கள் ஒருபோதும் சட்டை செய்வதில்லை. ஆனால், இவற்றைக் கேட்பது ஒரு சங்கமாக இருந்தால், அதற்கு அந்த நிறுவனங்கள் பதிலளித்தே ஆக வேண்டும்.
கார்பஸ் நிதி என்றால் என்ன?
இதைவிட முக்கியமாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, கார்பஸ் நிதிக்காக ஒரு தொகையைக் கட்டுமான நிறுவனங்களிடம் நாம் செலுத்தியிருப்போம். கார்பஸ் நிதி என்பது, அடுக்குமாடிக் குடியிருப்பின் பொதுச் சொத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வதற்காகச் சேகரிக்கப்படும் ஒருவித வைப்பு நிதி. இந்த கார்பஸ் நிதியைக் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்குக் குடியிருப்போர் நலச் சங்கம் அவசியம் தேவை.
மேலும், குடியிருப்பு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள், சாலை வசதி, சொத்து வரி போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிய அலுவலகங்கள் மூலம் கேட்டுப் பெறுவதற்குச் சங்கங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும். தனியொரு ஆளாக விண்ணப்பம் செய்வதைவிடவும் நிறையப் பேர் சேர்ந்து கோரிக்கை விடுக்கும்போது அது உரியக் கவனத்தைப் பெறும்தானே!
பதிவுசெய்வது அவசியமா?
ஆம். பதிவாளர் அலுவலகத்தில் உரியக் கட்டணத்தைச் செலுத்தி சங்கத்தைப் பதிவுசெய்ய வேண்டும். எந்தவொரு சங்கமும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அதற்குரிய முழுமையான உரிமைகளைப் பெற முடியும். இது ஒரு சட்டரீதியான பதிவுபெற்ற அமைப்பாகக் கருதப்படுவதால் சங்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து பதிவுசெய்வது அவசியம். உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர் நியமனம், அவர்களது பதவிக் காலம் உள்ளிட்ட சங்க விதிமுறைகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.
வங்கிக் கணக்கு
பதிவுசெய்வது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது சங்கத்துக்கு எனத் தனியாக வங்கிக் கணக்கு தொடங்குவது. வரவு செலவுகளை வங்கிக் கணக்கு மூலமாகக் கையாளுவது பாதுகாப்பானது. சங்கக் கணக்குவழக்குகளை முறையாகப் பராமரிப்பதுடன் மட்டுமல்லாமல்; ஆண்டுத் தணிக்கையும் முறையாகச் செய்ய வேண்டும்.
குறைந்த உறுப்பினர்கள் கொண்ட சங்கமாக இருந்தால் பொறுப்பாளர்களே கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்ளலாம். அதிக வீடுகள் கொண்ட குடியிருப்பாக இருந்தால், இதற்கு என்று தனி நிர்வாகிகளை அமர்த்திக்கொள்வது அவசியம். பொது நிதியின் அனைத்துச் செலவுகளையும் சங்க உறுப்பினர்கள் எப்போதும் கேட்டறியும்படி சங்கத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
உறுப்பினர்களின் சேர்க்கை
அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் ஒருவரைக் குடியிருப்போர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று எந்த வகையிலும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமாகும். ஒவ்வொருவரும் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே சங்கத்தில் சேர வேண்டும். அதைப்போல உறுப்பினர்களுக்கான பதிவுக்கட்டணத் தொகையையும் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது. பதிவுக்கட்டணம் செலுத்தாத உறுப்பினர்களின் குடிநீர், மின்சார இணைப்புகளைத் துண்டித்து அவர்களை அச்சுறுத்துவது குற்றமாகக் கருதப்படுகிறது.
உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்?
குடியிருப்போர் சங்கம் என்பது தங்களது நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதை உறுப்பினர்கள் (வீடு வாங்கியிருப்பவர்) தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு இலவசமாகச் சேவையாற்ற முன்வந்தவர்கள் என்பதைப் புரிந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை உறுப்பினர்கள் வழங்கவேண்டும். மாத பராமரிப்புக் கட்டணத்தை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செலுத்த வேண்டும்.
ஏனென்றால், நீங்கள் செலுத்தும் பணத்திலிருந்துதான் பாதுகாவலர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்ட பராமரிப்புத் தொழிலாளிகள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்படும். மேலும், இதைச் செலுத்தத் தவறும் உறுப்பினர்களின் வீடுகளுக்கான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து இணைப்புகளையும் நீதிமன்ற அனுமதியோடு சங்கத்தால் துண்டிக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்வதும் நல்லது.
நிம்மதியின் அடித்தளம்
தனி வீடு என்பதே இன்று அரிதாகி விட்டது. குறைந்த செலவு, அதிக வசதி, குறைவற்ற பாதுகாப்பு, சிக்கலற்ற வாழ்வு என்பது போன்ற காரணங்களால், இன்று பலருடைய விருப்பத் தேர்வாக அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ வேண்டுமென்றால், அங்கே வீடு வாங்கினால் மட்டும் போதாது.
அங்கே இருக்கும் குடியிருப்போர் நலச் சங்கத்தில் உறுப்பினராகி, அதற்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். நமது சுதந்திரம் எப்போதும் பிறரின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது என்ற புரிதல் வேண்டும். உங்களின் நிம்மதியான வாழ்வுக்கு இவையே அடித்தளம்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago