எனக்குப் பிடித்த வீடு: மன இன்பம் தரும் வராந்தா

By டி.செல்லப்பா ஸ்டீபன்

முன்பெல்லாம் வீடு கட்டும்போது வீட்டின் முன் புறத்தில் ஒரு திண்ணை கட்டத் தவறமாட்டார்கள். வெயில் அதிகமாக அடிக்கும் கோடைக்காலங்களில் மதியான வேளையிலும் இரவிலும் காற்று வாங்க வீட்டின் அங்கத்தினர்கள் திண்ணைக்கு வந்துவிடுவார்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சுவாரசியமாகக் கதைகள் பேசி மகிழ்வார்கள். அநேகர் அந்தத் திண்ணையிலேயே தூங்கிவிடுவார்கள். வீட்டிலுள்ள ஆண்களும் பெண்களும் பாய் விரித்துப் பயமில்லாமல் தூங்க அப்போது வாய்ப்பிருந்தது. வீட்டுக் கதவுகூட திறந்தேதான் கிடைக்கும். அதுவெல்லாம் அந்தக் காலம்.

இந்தக் காலத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் ஊரே நிசப்தம் ஆகி விடுகிறது; எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள். நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியன். என் மனைவியும் ஓய்வுபெற்ற ஆசிரியை. கடந்த 2000-ம் ஆண்டில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட ரஹ்மத் நகர் என்கிற சாதி சமயமற்ற சமத்துவபுரம் போன்ற அன்பு நிறைந்த மக்கள் காலனியில் 20-வது தெருவில் உள்ள ஒரு முச்சந்தியில் 11 செண்ட் நிலத்தை வாங்கி அதில் 1200 சதுர அடியில் ஒரு வீடு கட்டி நான், எனது மனைவி, சின்ன மகன், மருமகள், பேரன்மாரோடு கடந்த 14 வருடங்களாக ஆனந்தமாக வாழ்ந்து வந்தோம்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் என் சின்ன மகனும், மருமகளும் தங்கள் வேலையின் நிமித்தம் ராசிபுரம் என்கிற ஊருக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். என் பெரிய மகனும், மருமகளும் வேலையின் நிமித்தம் மும்பையில் வசித்துவருகிறார்கள். என் சின்ன மகளும் மருமகனும் பிள்ளைகளுடன் ஈரோட்டில் வசித்துவருகிறார்கள். இப்போது நானும் எனது மனைவியும் தனியே வசித்துவருகிறோம்.

அளாவும் வேளை

எங்கள் வீட்டில் பெரிய ஹால், பெரிய பெட்ரூம், இன்னொரு சிறிய பெட்ரூம், பெரிய சமையலறை மற்றும் ஒரு அழகான வராந்தா உண்டு. இவை எல்லாவற்றிலும் நான் அதிகமாக விரும்புவது வராந்தாவைத்தான். எங்கள் வீடு வடக்கு திசை நோக்கிக் கட்டப்பட்டது. இந்த வராந்தா மேல்புறம் அமைந்துள்ளது. வீட்டின் மேல்புறம் வீடுகள் ஒன்றும் இல்லை. மேலும் விரிந்த வெளியில் மரங்கள் அதிகமாக இருக்கும். அதனால் எங்கள் வராந்தாவில் எப்போதும் மாசுமறுவற்று காற்று தாரளமாக வீசும். மேற்குத் தொடர்ச்சி மழை குற்றாலத்திலிருந்து வரும் இதமான குளிர்ந்த காற்று கோடைக்காலம் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் வீசிக் கொண்டிருக்கும்.

நகரின் உட்பகுதியில் வசிக்கும் மக்கள் சுத்தமான இயற்கைக் காற்றைச் சுவாசிப்பதே அரிது. ஆனால் எங்கள் பகுதியில் காற்றுக்கோ பஞ்சமில்லை. நான் எங்கள் வீட்டு முன் வராந்தாவில் இருப்பதையே அதிகமாக விரும்புகிறேன். வெளியில் இருந்து வரும் நண்பர்கள் மற்றும் விஷேங்களுக்கு அழைப்பிதழ் கொண்டு வரும் உற்றார் உறவினர் நான் உள்ளே அழைத்தாலும் அவர்கள் ‘இங்கே காற்று நன்றாக வருகிறது’ என வராந்தாவிலேயே அமர்ந்துவிடுவார்கள். இப்படியாக எல்லோரையும் கவர்ந்திழுக்கும் இடம் எங்கள் வராந்தா.

எனக்கு உறவின் முறையில் அண்ணாச்சியாகப்பட்டவரும் அவரது மனைவியும் இரண்டு பர்லாங்கு தூரத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் இருவரும் சாயங்கால வேளைகளில் நடைப்பயணமாக வந்து இந்த வராந்தாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் நாங்களும் குடும்ப காரியங்கள், உலக நடப்புகள், ஆத்மிக காரியங்கள் குறித்து பேசுவோம். எங்கள் மாடியில் குடியிருக்கும் என் மகள் போன்ற ஆசிரியையும் அவர்களுடைய பிள்ளைகளும் எங்கள் சம்பாஷணையில் கலந்துகொள்வார்கள். அந்த நேரம் ஓர் இன்பமான வேளை. எங்கள் தனிமையைப் போக்கும் பொன்னான வேளை. தினமும் இந்த வேளை எப்போது வரும் என்று எதிர்பார்த்திருப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஊரடங்கிய இரவு வேளையில் நானும் என் மனைவியும் பிரார்த்தனை செய்துவிட்டு என் மனைவியைத் தூங்கச் சொல்லிவிட்டு, தனியாக, அமைதியாக இந்த வராந்தாவில் அமர்ந்து வீட்டுக் காரியங்கள் குறித்து, பிள்ளைகள் குறித்து மனத்தில் நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். எவ்வளவு நேரம் அப்படிச் செய்வேன் என எனக்குத் தெரியாது. அப்படியே வராந்தாவில் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு. திடீரென விழித்தெழுந்து பார்த்தால் மணி பன்னிரெண்டு இருக்கும். அதன் பின் வீட்டுக்குள் சென்று படுப்பேன். ஆனாலும் வராந்தாவில் கிடப்பதுபோன்ற நினைப்பில்தான் தூங்குவேன்.

இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக் கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மனம் இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.

உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்