ஜி.எஸ்.எஸ்.
வீடு விற்பனைக்கு, ஃப்ளாட் விற்பனைக்கு என்றெல்லாம் விளம்பரங்கள் வரும்போது அனைவருக்கும் புரிகிறது. ‘பென்ட் ஹவுஸ்’ (pent house) விற்பனைக்கு என்று விளம்பரம் வரும்போது சிலருக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு. பென்ட் ஹவுஸ் குறித்த சில அடிப்படை விவரங்களை இங்கே பார்ப்போம்.
ஒரு பெரிய அடுக்ககம் அல்லது பிரம்மாண்ட ஹோட்டலின் உச்சி மாடியில் பென்ட் ஹவுஸ் அமைந்திருக்க வாய்ப்பு உண்டு.
உச்சி மாடிதானே என்று அதன் விலை சற்றுக் குறைவாக இருக்கும் என்று கணக்கிட வேண்டாம். அதன் விலை மிக அதிகமானதாக இருக்கவே வாய்ப்பு அதிகம். காரணம் பென்ட் ஹவுஸ் என்பது ஒரு கவுரவச் சின்னம். அதில் பலவித வசதிகளும் இருக்கும். கீழ்த் தளங்களில் வீடு அமைந்திருந்தாலும் அவற்றின் உச்சியில் உள்ள பென்ட் ஹவுஸ் என்பது ஒரு தனி வீடு போலவே காட்சி அளிக்கும். இந்த வீடு கொஞ்சம் உள்ளடங்கி இருந்தால் இயல்பாகவே நாற்புறமும் பால்கனி போன்ற அமைப்பு கிடைத்து விடும்.
வழக்கமான அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிலிருந்து இது மாறுபட்டு ஆடம்பரக் கட்டமைப்புடன் இருக்கும். அதிக விலை கொடுத்து ஒரு பென்ட் ஹவுஸை வாங்குவது சரியா, தவறா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் பென்ட் ஹவுஸ் வாங்குவதன் சாதக, பாதகங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே கூறியதுபோல பென்ட் ஹவுஸ் அதன் உரிமையாளருக்கு ஒரு கவுரவச் சின்னம் என்பதால் அந்தக் கோணத்தில் இதை வாங்குபவர்கள் உண்டு. லிஃப்டில் ஏறும்போதுகூட பென்ட் ஹவுஸ் 15-ம் தளத்தில் இருந்தால் லிஃப்டில் 15 என்ற எண்ணுக்குப் பதிலாக PH (Penth House என்பதன் சுருக்கம்) என்று குறிப்பிட்டிருக்க வாய்ப்பு உண்டு. இதையே பெருமையாகக் கருதுபவர்கள் உண்டு.
பென்ட் ஹவுஸில் வெளிச்சம் நிறைய இருக்கும். மேற்கூரை நல்ல உயரத்தில் இருக்கும். மீதித் தளங்களுக்கான லிஃப்ட் பகுதி பொது இடத்தில் இருக்க பென்ட் ஹவுஸ் உட்புறத்திலேயே லிஃப்ட் நிற்கும் வசதி கொண்டதாக அமையக்கூடும்.
கீழே உள்ள அடுக்ககங்களில் பால்கனியிலிருந்து ஏதோ ஒரு பகுதியைத்தான் பார்க்க முடியும். ஆனால், பென்ட் ஹவுஸைப் பொறுத்தவரை எந்தத் தடையும் இல்லாமல் நாற்புறங்களிலும் காட்சிகளைக் காண முடியும். மிக உயரத்தில் அமைந்திருப்பதால் ‘ஏரியல்’ காட்சிகளும் மனதுக்கு இதமாக இருக்கும்.
மிக உயரத்தில் அமைந்திருப்பதால் தெருக்களில் எழும் கூச்சல்கள் காதுகளுக்கு எட்டாது. உங்கள் தலைக்குமேல் வீடு எதுவும் இல்லாதால் அறைக்கலன்களை அங்கும், இங்கும் இழுப்பது, குழந்தைகள் தடதடவென ஓடுவது போன்ற தொல்லைகள் உங்கள் வசிப்பிடத்துக்கு மேல் பகுதியில் நிகழ வாய்ப்பு இல்லை. அந்தரங்கத்துக்கு அதிக மதிப்பு கொடுப்பவர்களுக்கு இந்த வகை வீடு மிகவும் ஏற்றது.
வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் மொட்டை மாடித் தோட்டம் வளர்க்கலாம். யாரும் எந்தவிதத் தடையும் இதற்குச் சொல்ல முடியாது. ஆனால், மிக அதிகமான காற்று வீசும் இடங்களில் பென்ட் ஹவுஸ் வாங்குபவர்கள் யோசித்து வாங்குவது நல்லது. ஒருவிதத்தில் சாதகமான இந்த அம்சம் இன்னொறு விதத்தில் பாதகம்கூட.
தவிர முழுத் தளமும் நமக்குத்தானே என்ற எண்ணத்தில் வீட்டுக்கு வெளியில் உள்ள திறந்த வெளிகளில் தங்கள் பொருள்களை சிலர் பரப்பி வைக்கக் கூடும். அது பாதுகாப்பான ஒரு நடைமுறை என்று கூறிவிட முடியாது.
பொதுவாக பென்ட் ஹவுஸ்களை நல்ல விலைக்கு விற்க முடியும். அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்கான ரியல் எஸ்டேட் மதிப்பு குறைந்த போதும் இந்த வகை வீடுகளுக்கு கிராக்கி இருக்கும் என அத்துறைசார் நிபுணர்கள் சொல்கிறார்கள். சுற்றுப்புறம் இயற்கை எழில் கூடியதாகவும் கொஞ்சம் அமைதியானதாகவும் இருந்தால் பென்ட் ஹவுஸில் வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாக அமையும். பென்ட் ஹவுஸில் தனியாக ஜிம், நீச்சல் குளம் போன்ற வசதிகளுடன் அமைவதுண்டு.
வேறு விதத்தில் ஒப்பந்தம் போட்டிருக்கவில்லை என்றால் இந்த வீட்டுக்கு மேலே கூட ஒரு தளத்தை நீங்கள் எழுப்பிக் கொள்ளலாம். மிக அதிக விலை, ஏதாவது இயற்கைப் பேரிடர் என்றால் வெளியேறுவது மேலும் கடினம், செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு சில சங்கடங்கள், கடுமையான வெப்ப நிலை அதிகமாகப் பாதிக்க வாய்ப்பு என்று பென்ட் ஹவுஸுக்கு எதிரான கோணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் பணம் ஒரு தடையில்லை என்று நினைப்பவர்கள் பென்ட் ஹவுஸை நாடுவதற்கும் எந்தத் தடையும் இல்லை.
பென்ட் ஹவுஸ் எனச் சொல்லப்படும் இந்த ஆடம்பர வீடு கட்டும் முறை அமெரிக்காவில் 1920களின் தொடக்கத்தில் உருவானதாகச் சொல்லப்படுகிறது.
கட்டிடத்தின் மேல் தளத்தைப் பயன்படுத்தி வீடு கட்டுவது என இந்த முறை அறிமுகமானது. நியூயார்க் நகரத்தின் அடையாளங்களுள் ஒன்றும் அமெரிக்காவின் பழமையான தங்கும் விடுதியுமான பிளாஸா ஹோட்டல், 1923 தங்கள் விடுதியின் மேல் தளத்தில் சொகுசு வீடுகள் கட்டப்போவதாக அறிவித்தது.
இதன் பிறகுதான் இந்த பென்ட் ஹவுஸ் வகை வீடு கட்டுவது அதிகரிக்கத் தொடங்கியது. வாழ்க்கையின் கவுரமான அடையாளமாகவும் அது ஆனது. வாழ்க்கைமுறை இதழ் ஒன்றுக்கான பெயராகவும் பென்ட் ஹவுஸ் ஆனது. அதன் துணைத்தலைப்பு உயர் வாழ்வு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago