ஒவ்வொருவருக்கும் வீடு கட்டியதை நினைக்கும்போது மனதில் வண்ணக்கலவையாக ஏதேதோ நினைவுகள் மனதில் தோன்றும். அதுபோலவே எனக்கும் சில சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.
ஐந்து வருடங்களுக்கு முன்புதான் பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் குடியிருந்த வீட்டையே இடித்துவிட்டுப் புதிதாகக் கட்ட ஆரம்பித்தோம். அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கட்டினால்தான் அடிக்கடி புது வீட்டை வந்து பார்க்கத் தோதாக இருக்குமென்று அலைந்து திரிந்து பார்த்ததில் எங்களுக்கு வாடகை வீடு அமைந்ததோ இரண்டு கிலோ மீட்டர் தள்ளிதான். அங்கிருந்து காலையும் மாலையும் தவறாமல் என் கணவர் வீட்டை வந்து பார்ப்பார்.
கனவுபோல் உயர்ந்த இல்லம்
கண்முன்னே அஸ்திவாரம் போடப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக சுவர் நிமிர்ந்து நின்றபோது ஏதோ கனவு உயிர் கொண்டு எழுந்ததுபோல் இருந்தது. ஜன்னல்கள் அமைய வேண்டிய இடங்கள் வெற்றிடமாக விடப்பட்டு அதன் வழியே தெரிந்த வானம் என்னை அடிக்கடி அங்கு வரவழைத்தது. அப்படித்தான் ஒரு முறை அங்கு சென்று வீட்டின் குளுமையை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தபோது அருகில் கேட்ட சில வினோத சப்தங்களால் சுய நினைவுக்கு வந்து சப்தம் வந்த திக்கில் பார்த்தேன். மர நிறத்தில் அங்கே ஒரு நாய் படுத்திருந்தது. அதைச் சுற்றிலும் வெள்ளை, கருப்பு, மர நிறங்களில் அதன் குட்டிகள். என்னைக் கண்டதுமே சுதாரித்த நாய் ஏதோ நான் அதன் வீட்டில் அத்து மீறி நுழைந்ததைப் போல உறுமியது. அதைக் கேட்ட கொத்தனார், ஓடோடி வந்து அதனை விரட்டினார்.
பிறகு அந்த நாயும் நாங்களும் நண்பர்களானது வேறு கதை. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. நான் ஒவ்வொரு தடவையும் வீட்டைப் பார்க்க மாலையில் ஒரு நான்கு மணிக்கு மேல்தான் செல்வேன். வீட்டைப் பார்க்கச் செல்ல என் கணவரும் குறிப்பிட்ட நேரத்தைதான் வைத்திருந்தார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு நேரத்தை மாற்றினோம். அதை விடக் கொடுமை நாய் வீட்டில் இருந்ததால் குடும்பத்துக்கு நல்லதல்ல; அதனால் பரிகாரம் செய்யுங்கள் என்று சிலர் அறிவுரை சொன்னதுதான். நாங்கள் இந்த விஷயத்தை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
வாட்ச்மேனின் தண்ணீர் வியாபாரம்
அது மட்டுமல்ல இன்னொரு விஷயமும் எங்கள் நேரத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது. ஒரு முறை நாங்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததால் வழக்கமாகச் செல்லும் நேரத்தில் செல்லாமல் சற்று முன்னதாகவே சென்றோம். அங்கு பெண்கள் சிலர் வரிசையில் குடத்துடன் நிற்க ஜோராகத் தண்ணீர் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.
எங்கள் கட்டிட வாட்ச்மேன்தான் வியாபாரத்தை நடத்தியது. எங்களைக் கண்டதுமே அந்தப் பெண்களை நோக்கி, “உங்களையெல்லாம் யாரு இங்க வரச் சொன்னா? போங்க… போங்க…” என விரட்டியடித்தார். இனி வீட்டை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பார்க்க வரக் கூடாது. முடிந்த நேரமெல்லாம் வந்து பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்தது இந்தச் சம்பவம்.
தவறாகத் தேர்ந்தெடுத்த டைல்ஸ்
வீட்டில் டைல்ஸ் பதிக்கும்போதுதான் என் ஆர்வம் எக்குத்தப்பானது. என் மனதைக் களவாடிய ஆகாய நீல வண்ணத்தில் டைல்ஸ் பதிக்க முடிவுசெய்து கடை கடையாக ஏறி இறங்கினோம். சில கடைகளில் சாம்பல் வண்ணத்தைக் காட்டி அதையே நீல நிறம் என்று சாதித்தார்கள். எனக்கே அந்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தபோது நல்லவேளையாக அது எங்களுக்கு கிடைத்தது. வானமே தரைவிரிப்பாக மாறி என் காலுக்கடியில் வந்தாற்போன்ற உணர்வு.
கிரகபிரவேசத்திற்கு வந்த பலரும் நீல வண்ண டைல்ஸை வெகுவாகப் பாராட்டியபோது நான் நானாகவே இல்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லத்தான் எனக்கு ஒரு விஷயம் உறைக்க ஆரம்பித்தது. கலரை மட்டுமே கவனித்த நான் அது வழுவழுப்பாக இருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். விளைவு? வழுக்கி விழுந்துவிடக் கூடாது என்று அதி ஜாக்கிரதையாக நடந்து நடந்து என் நடையே மாறிவிட்டது. இதிலிருந்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, அழகை மட்டும் பார்க்காதீர்கள். அதன் பயனையும் பாருங்கள் என்பதுதான் .
வீட்டுக்கு நேரம் ஒதுக்குவோம்
ஆரம்பத்தில் வேலை செய்பவர்களுடன் சிறு சிறு உரசல்கள் நேர்ந்தாலும் நாளடைவில் எல்லாம் சரியாகி சமாதானமாகியது. வீடு கட்டிய அனுபவத்தை இது இனிமையாக்கியது. வீட்டில் இரண்டு படுக்கையறைகள், விசாலமான வரவேற்பறை, பெரிய சமையலறை, இரண்டு குளியலறைகள், வண்ண வண்ணப் பூக்கள் மின்னும் கண்ணாடி என எல்லாம் திட்டமிட்டபடியே அமைந்தன. பட்ஜெட் மட்டும் நாங்கள் நினைத்ததைவிடக் கொஞ்சம் அதிகமாகவே எகிறியது. இந்த மாதிரி விஷயங்களிலிருந்து நான் எதையும் கற்றுக்கொண்டதாக நினைவில்லை. மாறாக எப்படி நேரத்தை மாற்றி மாற்றிச் செல்ல வேண்டும், டைல்ஸ் சமாச்சாரம் போன்ற சின்னச்சின்ன விஷயங்கள்தான் எனக்கு ஆசானாக அமைந்தது.
வீட்டைக் கட்டிக் குடியேறுவதுடன் நம் கனவு முடிந்துவிடுவதில்லை. அதையும் தாண்டி அது இல்லமாக ஆக வேண்டுமா? ஒவ்வொருவரும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் செலவிடும் நேரத்தில் ஒரு பத்து சதவீதம் குடும்பத்துக்காகச் செலவு செய்தால்தான் நாம் கட்டிய வீட்டுக்கே ஒரு அர்த்தம் இருக்கும்.
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி:
sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago