க.பழனித்துரை
வீடு என்பது பலருக்கு அடையாளம், பலருக்குத் தன் செல்வத்தைப் பிரதிபலிக்கும் குறியீடு, சிலருக்கு அது பொருள்கள் வைக்கும் குடோன். ஆனால் திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள எங்கள் வீடு எங்களுக்கு அமைதி, ஆனந்தம், திறன் கூட்டும் ஒரு கனவுச்சாலை. வீடு அமைதி தரும், இனிமை தரும், செயல்திறன் கூட்டும். இவ்வளவு சிறப்புள்ள இல்லத்தை யார் அமைத்துத் தருவது, அப்படியானவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் பலருக்கு இன்று உள்ள கேள்வி.
எங்களுக்கு எது தேவை என்பது தெரிகிறது. அதை எப்படிப் பூர்த்தி செய்துகொள்வது என்பது தெரியாது. அந்தத் தேடலில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டிக்கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவரைக் கண்டு பிடித்தோம். அவர்கள் இருவரும்தான் எங்கள் கனவு இல்லத்தைக் கட்டித்தந்தவர்கள். இன்றளவும் அவர்கள் இருவரும் எங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்கள்.
20 வயது இனிமை
எங்கள் வீட்டுக்கு இப்போது வயது 20. இந்தக் காலம் முழுவதும் மன நிறைவையும், அமைதியையும், இனிமையையும் தந்து எங்களின் திறன்களை எல்லை இல்லா அளவுக்கு பெருக்கியது இந்தக் கனவு இல்லம். இதற்குக் காரணமானவர்கள் எங்கள் இல்லத்தை உருவாக்கிய அந்த இருவரும்தான். அவர்கள் அந்தப் பணியை எப்படிச் செய்தார்கள் என்பதில்தான் அந்தப் பணியின் நிறைவு இருக்கிறது. எங்களின் தேவையறிந்து என்னிடமிருக்கும் நிதியறிந்து, வீடு கட்டும் இடத்தின் மண் அறிந்து, அங்குள்ள சூழல் அறிந்து வீட்டை வடிவமைத்து உருவாக்கினார்கள்.
வீட்டைக் கட்ட ஒப்பந்தம் போடும்போது எங்களின் நுண்ணிய தேவைகளையெல்லாம் கேட்டுப் பெற்று எவற்றையெல்லாம் செய்து தருவேன் என்று உறுதியளித்தார்களோ, அத்தனையையும் செய்து கொடுத்தார்கள். என்னென்ன கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்துவேன் என்று கூறினார்களோ, அவை அனைத்தையும்
மாற்றம் இல்லாமல் உபயோகித்துக் கட்டி முடித்தார்கள். அந்த வீட்டைக் கட்டக் கட்டிட வடிவமைப்பைச் செய்யும்போது, எங்கள் பின்னணி என்ன, எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்ட இல்லத்தை விரும்புகிறார்கள் என்ற தேவையையும் உளவியலையும் வைத்து வடிவமைத்து அதை எங்களிடம் காண்பித்தார்கள்.
ஆறு நிபந்தனைகள்
அப்போது நாங்கள் ஆறு நிபந்தனைகளை முன்வைத்தோம். ஒன்று எங்கள் வீடு கட்டுவதற்காகச் செலவழிக்கப்படும் பணம் கடின உழைப்பில் வந்தது என்பதை நினைவில் வைத்து, எந்தச் சேதாரமும் இல்லாமல் கட்ட வேண்டும். இரண்டு உங்கள் லாபத்தைக் குறைக்க வேண்டாம், உழைப்புக்கு ஏற்ற லாபத்தை வைத்துக் கொள்ளுங்கள். மூன்று எந்த இடத்திலும் செல்வந்தர் வீடு போல் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கக் கூடாது.
நான்கு பணியைத் தொடங்கிவிட்டால், திட்டத்தில் எந்த மாறுதலும் செய்யாமல், வீடு கட்டி முடித்துவிட வேண்டும். ஒரு ரூபாய்கூடக் கூடுதல் செலவு எங்களுக்கு வைக்கக் கூடாது. ஐந்து பணியாட்கள் திறன் உள்ளவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆறு எங்கள் மனையில் பாதி அளவு பூச் செடிகளுக்கு இடம் ஒதுக்கிவிட்டு மீத இடத்தில்தான் கட்டிடத்தை அமைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு நீங்கள் விழிப்புடன் இந்தக் கட்டிடத்தைக் கட்டவேண்டும் என்று கூறினோம்.
அந்த ஆறு நிபந்தனைகளையும் உள்வாங்கி, அந்த இருவரும் கட்டிடத்தை வடிவமைத்தது மூன்று நல்ல படுக்கையறைகள், ஒரு தியான அறை, ஒரு சமையல் அறை, ஒரு வரவேற்பறை, ஒரு சப்பாட்டறை, ஒரு ஸ்டோர், வெளியில் ஒரு குளியல் அறை, ஒரு கழிவு அறை தனித்தனியே, வீட்டுக்குள் இரண்டு குளியல், கழிப்பறைகள் என எங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து தந்தனர். வீட்டுக்கு வெளியில் வந்தால் எங்கள் பூச்செடித் தோட்டமும் அமைத்தனர்.
சிறுமலையின் பரிபூர்ண முகமும், சற்றுப் பின்னால் கொடைக்கானல் மலையின் கம்பீரமும் தெரியும் அளவுக்கு வடிவமைத்து, மழை பெய்தால் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர்கூட வெளியில் போகாமல் பூமிக்குள் செல்லுமாறு மழைநீர் சேகரிப்பும் அமைத்துக் கட்டிக் கொடுத்தார்கள். வீட்டுக்குச் சுற்றுச்சுவர் எழுப்பும்போது, எங்கள் வீட்டுக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பது எங்கு நின்று வெளியில் பார்த்தாலும் தெரியும் அளவுக்கு வடிவமைத்துக் கட்டினார்கள்.
பிழையற்ற இல்லம்
கட்டி முடித்தபின் அவர்கள் எவ்வளவு தொகை செலவாகும் என எங்களிடம் கூறினார்களோ அந்தத் தொகையில் ஒரு ரூபாய்கூட அதிகம் கேட்கவில்லை, எனவே அந்தத் தொகையை கட்டிடம் கட்டி நிறைவு செய்த அன்றே கொடுத்தேன். ஒரு கோயிலுக்குள் என்ன உணர்வோடு இருப்போமோ அதே உணர்வு, ஆனந்தம், இன்பம், அமைதி என்று எங்கள் அனைவரையும் நிறைவுடன் வாழ வைத்தது இந்த வீடு. அது மட்டுமல்ல இருபது ஆண்டு காலத்தில் கட்டுமானத்தில் ஒரு சிறு தவறைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சிறு பழுதுகூட ஏற்படவில்லை.
ஒருமுறை கட்டுமான ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பு நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பேசச் சென்றேன். அப்போது அவர்களிடம் கூறினேன், “நீங்கள் கட்டிடம் கட்டுவதாக நினைக்க்காதீர்கள், மக்களுக்கு இல்லங்களை உருவாக்க ஒரு இடத்தில் ஓர் அற்புதமான சூழலை உருவாக்க கட்டிடத்தை வடிவமைக்கிறீர்கள் என நினைத்து, அவர்கள் தேவையறிந்து அவர்களைப் புரிந்துகொண்டு, உங்கள் பணியை அவர்களுக்கு நிறைவு தருவதாகச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் பையை நிரப்புவது வாடிக்கையாளர்களின் பணியாக இருக்கும்” என்று கூறிவிட்டு, என் வீடு எப்படிக் கட்டித் தந்தனர் என்பதை அவர்களிடம் கூறினேன்.
அந்தக் கூட்டத்தில் எனக்கு வீடு கட்டிக்கொடுத்த ஒப்பந்ததாரர்களும் இருந்தனர். கூட்டம் முடிந்து உணவு அருந்தும்போது என்னிடம் வந்து எனக்கு நன்றி சொல்லிவிட்டு ஒரு செய்தியைச் சொன்னார், “நாங்கள் உங்களுக்கு வீடு கட்டும்போது, எங்களிடம் நீங்கள் ஒரு உணர்வை ஏற்படுத்தினீர்கள் அது எங்களுக்கு ஒரு அற்புதமான மன ஓட்டத்தைத் தந்தது. அந்த மன ஓட்டத்தில் அந்த வீட்டைக் கட்டினோம். அது மனம் உருவாக்கிய இல்லம், எனவே, அந்த மன ஓட்டம்தான் இன்றும் அந்த வீடு அமைதிச்சூழலைத் தாங்கி புதுவீடுபோல் உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago