முகமது ஹுசைன்
பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்தபோதே, நான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை, என் பெற்றோர் வெளிப்படுத்தத் தொடங்கினர். அப்போது, அவர்களும் சொந்த வீடு வாங்கிச் சிரமத்துடன் கடனைத் திரும்பச் செலுத்தி வந்தார்கள். அதனால் எனது சின்ன சின்ன ஆசைகள்கூட அதன் காரணமாக நிராசையாக ஆக்கப்பட்டன.
சைக்கிள் வாங்கப் பணமில்லை, டிவி வாங்கப் பணமில்லை, ரேடியோ வாங்கப் பணமில்லை, ஏன், பள்ளிச் சுற்றுலா செல்லக்கூடப் பணமில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனது சிறு சந்தோஷம்கூட நிறைவேறாமல் போனது. அந்த வீட்டின் மீது அப்பாவுக்கு எந்த அளவுக்கு விருப்பம் இருந்ததோ அதே அளவுக்கு அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இந்தக் காரணத்தால் சொந்தமாக வீடு வாங்கவே கூடாது என, அப்போதே முடிவுசெய்துவிட்டேன். என்னை வீடு வாங்கச் சொல்லி, பெற்றோர் அறிவுறுத்தத் தொடங்கிய பின், எனது முடிவு இன்னும் ஆழமாக மனத்துள் வேரூன்றியது. நண்பர்கள் வீடு வாங்க முயலும்போதும், அவர்களிடம் ‘வேண்டாம்’ என்ற எனது முடிவைத் திணிக்கத் தொடங்கினேன். சொந்த வீட்டைவிட வாடகை வீடே சிறந்தது என நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். அதனால் வீடு வாங்கி முடிக்கும்வரை, பல நண்பர்கள் நானிருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டார்கள்.
குடும்பத்தினரின் அறிவுறுத்தல்
வேலைக்குச் செல்லத் தொடங்கிய பின், வீடு வாங்கச் சொல்லும் பெற்றோரின் அறிவுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியது. திருமணம் முடிந்த பின்னர், இல்லாளும் அவர்களுடன் இணைந்தார். குழந்தை பிறந்தது. அவள் வளரவளர, அறிவுறுத்தல் தொடர்ந்தது. அவ்வப்போது நண்பர்களும் அறிவுரை என்ற பெயரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். இது போதாது என்று, “வீடு வாங்கக் கடன் தருகிறோம்” என அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனாலும் மிகுந்த உறுதியுடன் இருந்தேன். இறுதியில் தோற்றுவிட்டேன். ‘சொந்த வீடு’ என்னை வென்றுவிட்டது. பெற்றோரின் முதுமை, மனைவியின் பாதுகாப்பு, மகளின் எதிர்காலம் என உணர்வு ரீதியான கோரிக்கைகளில் வீழ்ந்துவிட்டேன்.
வீடு வாங்க வேண்டும் என்ற முடிவும், அதற்குரிய பணமும் இருந்தால் எளிதாக வீடு வாங்கக்கூடிய சூழல் இப்போது உள்ளது. அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. நாங்கள் இணையம் மூலம் வீடு வாங்கத் தீர்மானித்தோம். 99 ஏக்கர்ஸ், மேஜிக் பிரிக்ஸ், ரூஃப் அண்ட் ஃப்ளோர் போன்ற இணையதளங்களில் சென்னையின் பிரபலமான கட்டுமான நிறுவனங்களின் வீட்டுத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலிருந்தே நமது குடும்பத்தினருடன் பார்த்துத் தேர்ந்தெடுக்க முடியும். அப்படித்தான் நாங்களும் விருப்பமான வீடுகளைத் தேர்வுசெய்தோம். அந்தக் கட்டுமான நிறுவனங்களே, வீட்டுக்கு காரில் வந்து அழைத்துச் சென்று, வீட்டை நமக்குச் சுற்றிக் காண்பிப்பார்கள்.
நான் அலுவலகத்துச் செல்லும் முன், ஏதாவது ஒரு வீட்டைத் தேர்வு செய்துவிட்டுச் சென்றுவிடுவேன். அவர்களும் வீட்டுக்கு வந்து, எனது பெற்றோரை அழைத்துச் சென்று, வீட்டைச் சுற்றிக் காட்டி, மீண்டும் வந்து எனது வீட்டில் விட்டு விடுவார்கள். இவ்வாறாகச் சொந்த வீடு தேடும் படலம் ஒரு மாதம் நீடித்தது. தென்சென்னை, மேற்குச் சென்னை ஆகிய பகுதிகளில்தாம் நாங்கள் அதிகமும் வீடு தேடினோம். தனி வீடு, அடுக்குமாடி வீடு என இரு வகையான வீடுகளையும் பார்த்தோம்.
வீடு தேடிப் பயணம்
ஒரு ஞாயிறு அன்று, பூந்தமல்லி அருகே வீடு, 1,330 சதுர அடி, டியூப்ளெக்ஸ் வீட்டை என் பெற்றோரே இணையத்தில் பார்த்துத் தேர்வுசெய்து வைத்திருந்தனர். “விலையும் சௌகரியம்தான்” என்றார்கள். வீடு பார்க்கச் செல்லும்போதே, அந்த வீட்டின் உரிமையாளர் என்னிடம் போனில் பேசினார். தான் ஐ,டி கம்பெனியில் வேலை பார்த்ததாகவும், இப்போது வேலை போய்விட்டதால் கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுவதாகவும் வருத்தத்துடன் கூறினார். கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, கனடாவுக்குச் செல்லும் திட்டத்தில் இருப்பதால், விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், ரூ.10 லட்சம் வரை குறைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
ஆனால், அவர் சொன்னது போல, அந்த வீடு பூந்தமல்லிக்கு அருகில் இருக்கவில்லை. அது பெரும்புதூருக்கு அருகிலிருந்தது. எனக்கு ‘சென்னைக்கு மிக அருகில்’ எனத் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வரும் விளம்பரம் நினைவுக்கு வந்தது. அதுவும் மெயின் ரோட்டிலிருந்து ஐந்து கி.மீ. தள்ளி இருந்தது. ஒரு காட்டுக்குள் இருக்கும் உணர்வை ஏற்படுத்திய அந்த வீடு, மிகுந்த கலை ரசனையுடன் இழைத்து, இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. நான் மட்டுமே அந்த வீட்டை ரசித்துப் பார்த்தேன். பெற்றோரின் முகத்தில் ஈயாடவில்லை. மனைவியோ அச்சத்தின் உச்சத்திலிருந்தார். அதாவது அங்கே வீடு பார்ப்பதற்கு நிற்பதைக்கூட அவர்கள், ஆபத்தாகக் கருதினார்கள்.
சென்னைக்குள் ஒரு கிராமம்
எனது வீட்டுக்குத் திரும்பும் வழியில், கார் டிரைவர் எங்களிடம், திருவேற்காட்டிலிருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைப் பற்றிக் கூறினார். ‘சரி போகும் வழிதானே பார்க்கலாம்’ என்ற அளவில்தான் நாங்கள் அங்கே சென்றோம். சென்னையிலிருக்கும் அந்த இடம், எனது சொந்தவூரின் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தை நினைவூட்டியது. நகரத்தின் பரபரப்பு அந்த இடத்தில் துளியும் இல்லை. மக்களும் அங்கே வெள்ளந்தியாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சாலைகளில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
சென்னையின் புகழ்பெற்ற பள்ளி ஒன்று அந்த வீட்டின் அருகில் இருப்பதையும் விளம்பரம் மூலம் அறிந்தேன். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அமைப்பும் மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. விற்பனை அதிகாரி எங்களை வரவேற்று, எங்களை ஒரு வீட்டினுள் அழைத்துச் சென்றார். நான் ஏற்கெனவே முடிவுசெய்து விட்டதாலோ என்னவோ, அவர் காட்டிய வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கட்டுமான உறுதியை அப்பா சோதிக்க முயன்றார். கதவைத் தட்டிப் பார்த்தார். தண்ணீரின் சுவையை மனைவி பரிசோதித்தார். பக்கத்து வீட்டாரிடம் பேசி, அந்தக் குடியிருப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றார். எல்லோருக்கும் திருப்தியாக இருந்ததால், ஒரே வாரத்தில் அந்த வீடு எங்களுக்குச் சொந்தமானது. மகளுக்கும் பக்கத்துப் பள்ளியில் இடம் கிடைத்தது.
கடந்த ஜூன் மாத இறுதியில், அலுவலகத்தில் வருமானவரி கட்டுவது பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டு லோன் வாங்கினால், வருமான வரிக் கட்டும் சூழ்நிலை ஏற்படாது என்று அப்பா சொன்னார். இப்போதுகூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, வங்கியில் லோன் வாங்கி, இங்கேயே இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளேன் என்று அம்மா சொன்னார். மனைவியும் உள்ளிருந்து ஓடிவந்து, ஆமாம் அதுவும் சரிதான், வாங்கிக் கொள்ளுங்களேன். மகளுக்கு என்று தனியாக ஒரு வீடு தேவைதானே என்றார். ‘எனக்கு வீடா? ’ என்று மகள் ஆச்சரியத்துடன் கண் விரித்தாள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago