மிது கார்த்தி
இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 முறை குறைத்திருக்கிறது. ரெப்போ வட்டி குறையும்போதெல்லாம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என்று சொல்லப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையுமா?
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கடந்த காலத்தில் கால் சதவீதம், அரை சதவீதம் என ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியைக் குறைத்திருக்கிறது. ஆனால், முதன்முறையாக ரிசர்வ் வங்கி வரலாற்றில் 0.35 சதவீதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டிருப்பதை பொருளாதார நிபுணர்கள் ஆராதிக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் 3 முறை ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி, தற்போது 4-வது முறையாக கடந்த வாரமும் ரெப்போ வட்டியைக் குறைத்திருக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் போது சேர்த்துச் செலுத்த வேண்டிய வட்டியாகும். ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது வணிக வங்கிகளுக்கு ஏற்படும் செலவினங்களும் குறையும். அந்தப் பயனை வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் வகையில் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை.
தற்போது ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். உண்மையில் இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா?
“கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4 என்ற அளவில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது. வழக்கமாக ரிசர்வ் வங்கி கால் சதவீதம், அரை சதவீதம் என்று ‘ரவுண்டாக’வே குறைக்கும். ஆனால், முதன் முறையாக இரண்டுக்கும் இடையே 0.35 என்ற அளவில் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அதிகமாக கொடுத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு 0.35 என்ற அளவில் ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. அண்மைக் காலமாக ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தபோது அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகள் அளிக்கவில்லை என்ற பொதுமக்களிடமிருந்து ரிசர்வ் வங்கிக்குப் புகார்கள் வந்துள்ளன.
அந்த அடிப்படையில்தான் இந்த முறை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு செய்த பிறகு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படும்படி வீடு, வாகன வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ரொப்போ வட்டி விகிதம் குறைந்த உடனேயே பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வட்டியைக் குறைத்துள்ளது. எஸ்.பி.ஐ.யைப் பின்பற்றி பிற வங்கிகளும் நிச்சயம் குறைக்கும்” என்று உறுதியாகச் சொல்கிறார் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற உதவிப் பொது மேலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன்.
ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடனைக் குறைக்க ஓரளவு ஆர்வம் காட்டினாலும், தனியார் வங்கிகள் பெரிய அளவில் வட்டி விகிதத்தைக் குறைக்க முன்வருவதில்லை என்ற புகாரையும் பொதுமக்கள் முன்வைக்கிறார்கள். பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாகத் தனியார் வங்கிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு வீட்டுக் கடன்களை அளிக்கின்றன. ஆனால், பொதுத்துறை வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் அளவுக்குத் தனியார் வங்கிகள் ஏன் குறைப்பதில்லை? “தனியார் வங்கிகள் தங்களுடைய லாப, நஷ்ட கணக்குகளைப் பார்த்துதான் வட்டி விகிதங்களைக் குறைக்கும்.
அதுதான் காரணம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன். முத்தாய்ப்பாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் 4 முறை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதால், அந்தப் பலனை வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்பைவிடப் பலமாக எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று வணிக வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்குமா, குறைக்காதா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
46 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago