சுனில்
கட்டுமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காலகட்டம் இது. கட்டுமான வடிவமைப்பிலும் கட்டுமானப் பொருட்களிலும் பல புதிய மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. கட்டுமான வடிவமைப்பில் முப்பரிமாணத் தொழில்நுட்பம் வந்துள்ளது. அதுபோல் மரபான கட்டுமானப் பொருட்களுக்கு மாற்றாக இந்தப் புதிய கட்டுமானப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.
காகிதத்தைக் கொண்டு கான்கிரீட் கலவை தயாரிப்பது அவற்றுள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. 60 சதவீதம் காகிதம், 20 சதவீதம் சிமெண்ட், 20 சதவீதம் கட்டுமான மணல் ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. காகிதமே அதிக அளவில் இருப்பதால் இது காகித கான்கிரீட் (Papercrete) என அழைக்கப்படுகிறது. இந்தக் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் சிமெண்ட், மணல் பயன்பாடு வெகுவாகக் குறைகிறது. ஆனால் இது சோதனைமுறையில்தான் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதைத் தயாரிக்கப் பெரிய ஆலைகள் தேவையில்லை.
கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் மிக எளிமையாகத் தயாரிக்கலாம். இதற்கு விசேஷமான கருவிகள் எவையும் தேவையில்லை. கட்டுமானக் கல்லுக்கு மாற்றாக, காகிதக் கான்கிரீட் கல் வடிவில் தயாரிக்கப்படுகிறது. இதை சிமெண்ட் பூச்சுக் கலவைக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். இதற்குப் பிரத்யேகமான காகிதங்கள் தேவை இல்லை. நாளிதழ்க் காகிதங்களே இதற்குப் போதுமானவை. அவற்றைக்கொண்டே இதைத் தயாரித்துவிட முடியும். முதலில் காகிதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பிளாஸ்டிக் குடுவையில் தூள் தூளாகக் கிழித்துப் போட வேண்டும். காகிதம் நன்றாகக் கூழ்போல் ஆக வேண்டும்.
அந்த அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அதை நன்றாகக் கிண்ட வேண்டும். அதற்காக மிக அதிகமாகத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். முட்டையைக் கலக்கப் பயன்படுத்தும் கலவை போன்ற பெரிய கலவை இயந்திரம் சந்தையில் கிடைக்கிறது. அதை வேண்டுமானால் வாங்கிக் கொண்டு அதன் உதவியுடன் கலக்கலாம். காகிதம் நன்றாகக் கூழ் போல் ஆனதும். அதை எடுத்து அதிலுள்ள தண்ணீரை நன்றாக வடிகட்டிக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இரு முறை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு சிமெண்டையும் மணலையும் சேர்க்க வேண்டும். இந்த இரண்டையும் நன்றாகக் கலந்த பிறகு காகிதக் கூழை இந்தக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிண்ட வேண்டும். இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்க்க வேண்டும். போதுமான அளவுக்கு அதைத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கலவையைத் தேவையான மரச் சட்டகத்துக்குள் இட்டு நிரப்ப வேண்டும். சில நாட்கள் உலரவைத்து எடுத்து அதைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம். காகித கான்கிரீட் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களின் விலை மிகக் குறைவானது. பழைய நாளிதழ்கள் மிகக் குறைவான விலையில் கிடைக்கும்.
மேலும், இன்று அதிக விலையில் விற்கப்படும் சிமெண்டும் மணலும் மிகக் குறைந்த அளவில்தான் இதற்குத் தேவைப்படும். மேலும் இந்தப் பொருள்கள் எல்லாம் எளிதாகக் கிடைக்கக்கூடியவை. காகித கான்கிரீட்டை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும். அதற்கு பிரத்யேகமான கருவிகள் தேவைப்படுவதில்லை. பிளாஸ்டிக் குடுவை, கலக்குவதற்கான கோல், மரச்சட்டகம் இவை மட்டுமே போதுமானவை.
இது விலை குறைவானது. இந்த முறையில் தயாரிக்கப்படும் காகித கான்கிரீட் உறுதியானதாகவும் இருக்கிறது. வழக்கமான கட்டிடங்களின் அதே அளவு தாங்கு திறன் காகிதக் கான்கிரீட் கற்களுக்கும் உண்டு. காகிதக் கூழ் கான்கிரீட் கொண்டு கட்டப்படும் வீடுகள் வெப்பம் தாங்கக்கூடியவை. மேலும் ஒலியைத் தடுக்கக்கூடிய தன்மையும் அதற்குண்டு. காகித கான்கிரீட் கற்கள் எடை குறைந்தவை. அதனால் கட்டுமானப் பணிகளின்போது இதைக் கையாள்வது மிக எளிது.
காகித கான்கிரீட்டைக் கற்களாக மட்டுமல்லாது மரச் சட்டகம் போல் தயாரித்துக்கொள்ளவும் முடியும். தேவையான அளவில், வடிவிலும் இதைத் தயாரித்துக்கொள்ளலாம். இந்த வகையான கான்கிரீட் கற்கள் இன்னும் பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை. குறைந்த விலை வீடுகள் உருவாக்கத்தில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்திப் பார்க்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாகச் சில நாடுகளில் இன்றும் புழக்கத்தில் இருந்துவருகிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகவில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
44 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago