பூர்வீகச் சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதிவைக்க முடியுமா?

By வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன்

என் தாத்தா சுயமாகச் சம்பாதித்த வீடு எங்களுக்கு உண்டு. என் தாத்தாவுக்கு என் தந்தை மட்டும் வாரிசுதாரர். என் தந்தைக்கு நான் மட்டும் வாரிசுதாரர். எனக்கு இரு ஆண் மக்கள், மூன்று பெண் மக்கள். என் தாத்தாவின் வீட்டை ரூ. 2 லட்சம் செலவுசெய்து புதுப்பித்துக் கட்டினேன். அந்த வீட்டை எப்படியோ என்னை வசப்படுத்தி என் மூத்த மகன், தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டான். என்னையும் என் இளைய மகனையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான். என் இளைய மகனுக்குப் பூர்வீக வீட்டில் பங்கு உண்டா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

- பி.ஜெ.அகஸ்தியன், விளாத்திகுளம் புதூர்

உங்கள் இளைய மகனுக்குப் பூர்வீக வீட்டில் பங்கு உண்டு. ஆகையால் உங்கள் மூத்த மகனுக்குச் சாதகமாக நீங்கள் எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி செல்லாது. அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தினை இரத்துசெய்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. நீங்களும் உங்கள் இளைய மகனும் தகுந்த நீதிமன்றத்தை அணுகி, அந்த செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கக் கோரியும், அந்தப் பூர்வீக வீட்டில் உங்களுக்கும் உங்கள் இளைய மகனுக்கும் உரிய பாகத்தினை உங்கள் மூத்த மகன் வழங்கிட உத்தரவிடக் கோரியும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

நான் என்னுடைய கணவருக்கு இரண்டா வது மனைவி. கணவரின் வயது 68. என் வயது 52. அவருடைய முதல் மனைவி உயிருடன் உள்ளார். என் கணவருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. ஆனால் 28 வருடங்களாக என்னுடன்தான் உள்ளார். நாங்கள் இருவரும் சுயமாகச் சம்பாதித்து, என் கணவர் பெயரில் ஒரு மனை வாங்கி வீடு கட்டியுள்ளோம். என் கணவரின் முதல் மனைவிக்கு இரு மகன்கள். எனக்கு ஒரு மகள். அந்த வீட்டை என் மகள் பெயருக்கு உயில் எழுதி வைக்க முடியுமா? பின்னாளில் வேறு ஏதாவது பிரச்சினை வருமா?

- அபிராமி, புதுவை

நீங்களும் உங்கள் கணவரும் சுயமாகச் சம்பாதித்து உங்கள் கணவர் பெயரில் வாங்கியுள்ள வீட்டினைப் பொருத்து, நீங்கள் இருவரும் சேர்ந்து யாருக்குச் சாதகமாக வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து உங்கள் மகளுக்குச் சாதகமாக உயில் எழுதி வைக்கும்பட்சத்தில் அது சட்டப்படி செல்லத்தக்கதாகவே இருக்கும். மேலும் உங்கள் இருவர் காலத்திற்குப் பிறகு அந்த வீடு உங்கள் மகளுக்கு உரிமையாகிவிடும். அதனால் பின்னாளில் உங்கள் கணவரின் மற்ற வாரிசுகள் அந்த வீட்டில் சட்டப்படி பங்கு கேட்க முடியாது.

எனது அப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். செவ்வக வடிவில் உள்ள ஒரு நிலத்தை மூன்று பேரும் பங்குவைத்திருக்கிறார்கள். ஓரமாக ஒருவருக்கொருவர் பாதை விட வேண்டும் என்று வாய் மூலம் பேசியிருக்கி றார்கள். பத்திரத்தில் பாதை குறித்துப் பதிவுசெய்யவில்லை. இப்போது அவர்கள் மூன்று பேரும் காலமாகிவிட்டார்கள். வாரிசு முறைப்படி கடைசிப் பங்கு நிலம் எனக்கு வருகிறது. ஆனால் எனக்குப் பாதை மறுக்கப்படுகிறது. பாதை வேண்டும் என நான் நீதி மன்றம் செல்லலாமா?

- எஸ்.ஏ.பிச்சை, தோப்புவிளை, திருநெல்வேலி

ஒருவருக்கொருவர் பாதை விட வேண்டும் என்று பாகப் பிரிவினை பத்திரத்தில் சொல்லியிருக்காவிட்டாலும், நிலத்தின் ஒரு பகுதியை அன்றைய தேதியிலிருந்து இன்று வரை பாதையாக நீங்கள் பயன்படுத்தி வந்திருப்பதால், அதே பகுதியை நீங்கள் பாதையாகத் தொடர்ந்து பயன்படுத்த உங்களுக்கு உரிமை உள்ளது. மற்றவர்கள் உங்களுக்குப் பாதை தர மறுத்தால் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி பாதையைப் பயன்படுத்தும் உரிமையை நிலை நாட்டிக்கொள்ளலாம்.

எனது தந்தையின் பெரியப்பா, சில ஏக்கர் புஞ்சை நிலங்களை எனது தந்தைக்கும் எனது சித்தப்பாவுக்கும் சரிசமமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது என non registered உயில் எழுதி வைத்துள்ளார். எனது தந்தையின் பெரியப்பாவும், எனது தந்தையும் காலமாகிவிட்டனர். ஆனால் புஞ்சை நிலங்கள் பிரிக்கப்படாமல் உள்ளன. எனது சித்தப்பா நிலங்களைப் பிரித்துத் தராமல் உள்ளார். மேற்கண்ட குறிப்பிட்ட சர்வே எண் கொணட புஞ்சை நிலத்தின் மேல் பாகம் அல்லது கீழ் பாகத்தை எங்களுக்கு என குறிப்பிட்டு அந்த நில பாகத்தை விற்று பத்திரப்பதிவு செய்து கொடுக்கமுடியுமா?

- எஸ். பாலாஜி வெங்கட்ராமன், நாகப்பட்டினம்

உங்கள் சித்தப்பா நிலங்களைப் பிரித்துத் தராமல் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட புஞ்சை நிலத்தின் மேல் பாகம் அல்லது கீழ் பாகத்தை உங்களுக்கு என குறிப்பிட்டு அந்த நில பாகத்தை விற்று பத்திரப்பதிவு செய்து கொடுத்தால் அது சட்டப்படி செல்லாது. நீங்களும் உங்கள் சித்தப்பாவும் மொத்த நிலங்களையும் முறையாகப் பாகப் பிரிவினை செய்து கொண்ட பிறகு தான் நீங்கள் உங்கள் பாக நிலத்தினைச் சட்டப்படி விற்பனை செய்ய முடியும்.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

அஞ்சலில் அனுப்ப:

சொந்த வீடு, தி இந்து (தமிழ்),

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002

கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்