இந்தியா முழுவதும் ஐநூறு ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துதான் தாமதம். ஸ்மார்ட் சிட்டி எப்படி இருக்கும்? அதில் என்னென்ன வசதிகள் இருக்கும்? அது எங்கே அமையும்? தொழில் கட்டமைப்புகள் எப்படிப் பெருகும்?
அதன் மூலம் ரியல் எஸ்டேட் எப்படி ஏற்றம் பெரும் என்றெல்லாம் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்களுக்கு நிறைய கேள்விகள். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. என்னென்ன வசதிகள் ஸ்மார்ட் சிட்டியில் இருந்தால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவியாக இருக்கும்?
தமிழகத்தின் மையப்பகுதி
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள நகரம் திருச்சி. தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் 6 மணி நேரத்துக்குள் திருச்சிக்கு வந்துவிடலாம் என்பது இந்நகருக்கு உள்ள இன்னொரு சிறப்பு. புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த ஊர். சிறப்பான பள்ளி, கல்லூரிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
துப்பாக்கித் தொழிற்சாலை, பெல் நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களும் நிறைந்த ஊர் என நிறைய பெருமைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நகராட்சியாக இருந்த திருச்சி நகரம், 1994-ம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக உயர்ந்தாலும் சென்னை, மதுரை, கோவை போன்ற பிற மாநகராட்சிகள் அளவுக்கு திருச்சி வளரவில்லை என்றே சொல்லலாம்.
இப்போது ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் திருச்சி இடம் பெற்றிருப்பதால் பெரு நகரங்களுக்கு இணையாக வளரும் என்ற நம்பிக்கை பல தரப்பிலும் நிலவுகிறது. ஏனென்றால், இருபத்து நான்கு மணி நேர குடிநீர் சப்ளை, தடையில்லா மின்சாரம், மேம்படுத்தப்பட்ட விரைவான சாலை, ரயில், தண்ணீர் போக்குவரத்து வசதி, திட, திரவ கழிவு மேலாண்மை, ஏழைகளுக்கு வாங்கக்கூடிய விலையில் வீடுகள் என இன்னும் பல வசதிகளை ஸ்மார்ட் சிட்டி கொண்டிருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த வசதிகள் ஒரே சமயத்தில் ஏற்படும்போது நகரம் முழுமையடைந்த நகரமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. இந்த வசதிகள் எல்லாமே உள்கட்டமைப்போடு தொடர்புடையது என்பதால் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்புக்குக் கட்டுமான நிறுவனங்களிடம் வரவேற்பு காணப்படுகிறது.
எதற்கு முன்னுரிமை
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி எங்கு அமைய வேண்டும், ஸ்மார்ட் சிட்டியில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதுபற்றி கட்டுமான அமைப்பான கிரெடாய் திருச்சி மையத்தின் தலைவர் செந்தில்குமார் என்ன சொல்கிறார்?
“திருச்சி நகரிலேயே ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட வேண்டும். திருச்சி நகரமே முழுமையாக வளர்ச்சியடைய வேண்டும். பிற பகுதிகளோடு இணைப்புச் சாலை முக்கியம். தூய்மையான குடிநீர், சுகாதாரம், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களும் ஸ்மார்ட் சிட்டியில் தேவை. திருச்சியில் டிராபிக்கை முறைப்படுத்தி நெரிசலை சரிபடுத்த முன்னுரிமை வழங்க வேண்டும்.
திருச்சியைப் பொறுத்தவரை சென்னை சாலை, மதுரை சாலை, திண்டுக்கல் சாலை, புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் சாலை, கரூர் சாலை என முக்கிய இணைப்புச் சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தச் சாலைகளை ஒட்டியே வளர்ச்சி இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் திருச்சி நகருக்கு வந்து செல்லவோ அல்லது திருச்சி நகரில் இடம்பெயரவோ வாய்ப்பாக இருக்கும். அப்படி வரும்போது வீடுகளின் தேவையும் அதிகரிக்கும்” என்கிறார் செந்தில்குமார்.
என்ன தேவை?
திருச்சியில் அமைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டியில் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கட்டுமான நிறுவனங்களிடம் உள்ளது. தொழில்கள் வளர்ச்சியடையும்போதுதான் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் அதன்மூலம் கடைசியாகக் கட்டுமானத் துறையும் வளர்ச்சியடையும் என்றும் கூறுகிறார்கள் திருச்சியில் உள்ள கட்டுமானத் துறையினர்.
“திருச்சியில் திறன் மேம்பாட்டு மையங்கள் அதிக அளவில் அமைக்க வேண்டும். அதன் மூலம்தான் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். உணவுப் பொருட்கள் சார்ந்த மையங்களையும் திருச்சியில் அமைப்பதும் அவசியமாகிறது. சென்னை, கோவையில் இருப்பது போல வர்த்தக மையமும் திருச்சிக்கு தேவை. எந்தப் பொருளையும் சந்தைப்படுத்த ஒரு இடம் இருப்பது நல்லது. அப்போதுதான் வளர்ச்சியும் இருக்கும். சீனாவில் பல நகரங்கள் வளர்ச்சியடைந்ததற்கு வர்த்தக மையங்களே காரணம். ஸ்மார்ட் சிட்டியில் பொருட்களை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளைச் செய்தாலே போதும், ஆட்டோமொபைல், விவசாயம், சேவைத் துறை, கட்டுமானத் துறை எல்லாத் துறைகளும் வளர்ச்சியடையும். இதற்கு ஸ்மார்ட் சிட்டியில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்துகிறார் செந்தில்குமார்.
பலன் கிடைக்குமா?
ஆனால், இந்த ஒரு திட்டத்தால் மட்டுமே கட்டுமானத் துறைக்கு வளர்ச்சி கிடைத்துவிடாது என்ற கருத்தும் சில கட்டுநர்களிடம் இருக்கவும் செய்கிறது. திருச்சியில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் பிசினஸில் உள்ள தேவராஜ் இதுபற்றி வேறு மாதிரி கூறுகிறார்.
“ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களால் ரியல் எஸ்டேட் துறை வளரும் என்ற கருத்தை ஏற்கவே முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நவல்பட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. அதை வைத்து தொழில் பெருகும் என்று கூறினார்கள். இந்த திட்டத்தை வைத்தே அந்தப் பகுதியில் மனைகள் அதிகளவில் விற்பனையாகின. ஆனால், இப்போது அங்கு தகவல் தொழில் நுட்ப பூங்காவில் வேலையும் இல்லை. ரியல் எஸ்டேட் தொழிலும் படுத்துவிட்டது.
இன்று நடுத்தர மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. காசு இருந்தால்தான் வீடோ, மனையோ வாங்க முடியும். திருச்சியில் தொழில் வளர்ச்சியும் இல்லை. வேலை வாய்ப்புகளை பெருக்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் வீடு வாங்குவதைப் பற்றியெல்லாம் மக்கள் யோசிப்பார்கள். அப்போதுதான் ரியல் எஸ்டேட் தொழிலும் வளரும். ஸ்மார்ட் சிட்டி என்று அறிவித்துவிடுவதால் மட்டுமே ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியடைந்துவிடாது” என்கிறார் தேவராஜ்.
ஸ்மார்ட் சிட்டியில் என்னென்ன உள்கட்டமைப்புகள் செய்யப்படும், என்ன தொழிற்சாலைகள் வரும், என்னென்ன வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், கட்டுமானத் துறைக்கு அதில் உள்ள வாய்ப்புகள் ஆகியவை எல்லாம் மத்திய அரசின் ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். அதுவரையில் ஸ்மார்ட் சிட்டி என்பது பெரும் கனவு நகரமாகவே இருக்கும். அதற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago