நான் சொந்தமாக வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் எனது தந்தையின் பெயரில் சொத்துகள் வாங்கி உள்ளேன். இதற்கு என் கூடப் பிறந்தவர்களால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் தடுக்க எப்படி எழுதி வாங்க வேண்டும்?
- சாமிநாதன், காரைக்கால்
முதலில் நீங்கள் சுயமாகச் சம்பாதித்த பணத்தில் உங்கள் தந்தை பெயரில் சொத்துகள் வாங்கியது சட்டப்படி தவறு. உங்களால் நேரில் வந்து சொத்தைக் கிரயம் பெறவோ பராமரிக்கவோ முடியாத சூழ்நிலையில் உங்கள் தந்தையையோ உங்கள் நம்பிக்கைக்குரிய வேறு ஒருவரையோ உங்களது முகவராக நியமித்து உங்கள் பெயரில்தான் சொத்துகள் வாங்கியிருக்க வேண்டும். அதனால் உடனடியாக உங்கள் தந்தை பெயரில் நீங்கள் வாங்கியுள்ள சொத்துகள் அனைத்தையும் உங்கள் தந்தை உங்களுக்குத் தீர்வுப் பத்திரம் (செட்டில்மெண்ட் பத்திரம்) எழுதிப் பதிவுசெய்து தரக் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்கள் உடன் பிறந்தவர்களால் எதிர்காலத்தில் பிரச்சினை வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உண்டு.
மாதம்மாள் என்பவர் தனக்கு உரிமையான நிலத்தை (1,650 சதுர அடி பரப்பளவு) விற்பனை செய்யும் பொருட்டு 1996-ம் ஆண்டு தனது முகவராக வெங்கடேஷ் என்பவரை நியமனம் செய்கிறார். அதன்பிறகு 2000-ம் ஆண்டு அந்த மாதம்மாள் தனது முகவர் வெங்கடேஷ் மூலமாக அந்த நிலத்தை எங்களுக்கு விற்பனை செய்கிறார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் மாதம்மாள் தனது முகவர் மூலமாக அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்கிறார். தற்போது இந்த நிலம் யாருக்கு உரிமையானது. மாதம்மாள் தனது முகவர் வெங்கடேஷ் மூலமாக 2000-ம் ஆண்டு எங்களுக்குக் கிரயம் செய்த பிறகும் 2006-ம் ஆண்டில் வேறு ஒருவருக்கு கிரயம் செய்ய உரிமை உள்ளதா?
- மோகன்ராஜ்
தற்போது அந்த நிலம் உங்களுக்கே உரிமையானது. மாதம்மாள் தனது முகவர் வெங்கடேஷ் மூலமாக 2000-ம் ஆண்டு உங்களுக்குக் கிரயம் செய்துகொடுத்த அன்றே அவர் தனக்கு அந்த சொத்தில் உள்ள அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். ஆகையால் அவருக்கு அதே சொத்தை அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனைசெய்யச் சட்டப்படி உரிமையில்லை.
எங்கள் தூரத்து சொந்தக்காரர் எங்கள் குலதெய்வ கோவிலுக்காக 2 சென்ட் நிலம் தானமாகக் கொடுத்தார். பத்திரத்தின்படி அவரிடம் மொத்தம் 17 சென்ட் உள்ளது. அவர் மீதமுள்ள சொத்தை விற்கும்போது ‘கோவிலுக்கு 2 சென்ட் நிலம் போக மீதம் 15 சென்ட் விற்பனைக்கு' என குறிப்பிட்டிருக்கிறார். அந்த 15 சென்டையும் விற்றும் விட்டார். ஆனால், இப்போது சொத்தை அளந்து பார்த்தபோது மொத்தம் 20 சென்ட் உள்ளது. மீதமுள்ள 3 சென்டை நாங்கள் கோவிலுக்கு சொந்தம் கொண்டாடலாமா? இல்லை என்றால் அது யாருக்கு சொந்தம்?
- லைன் கார்த்திக்
மீதமுள்ள 3 சென்ட் நிலத்தை நீங்கள் கோவிலுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. 15 சென்ட் நிலத்தை வாங்கியவருக்கே அந்த 3 சென்ட் நிலம் சொந்தமாகும். குலதெய்வக் கோவிலுக்கு 2 சென்ட் நிலத்தினை தானமாகக் கொடுத்த பிறகு, உங்கள் தூரத்து சொந்தக்காரர் மீதமுள்ள நிலத்தினை உரிமையாளர் என்ற முறையில் அனுபவித்துவந்துள்ளார்.
பத்திரப்படி மீதமுள்ள நிலம் 15 செண்ட் என்றாலும் உண்மையில் 18 செண்ட் நிலத்தையும் அவர் அனுபவித்துவந்திருக்கிறார். அவர் தனக்கென எந்த பகுதியையும் வைத்துக்கொள்ளாமல் மீதமுள்ள 15 சென்ட் என்று எல்லைகளோடு குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளதால் அந்த எல்லைகளுக்குட்பட்ட மொத்த நிலமும் அதனை வாங்கியவருக்கே சொந்தமாகும்.
அபார்ட்மெண்டில் வீடு வாங்கியுள்ளேன். மொத்தம் 7 வீடுகள் உள்ளது. ஆனால் 4 கார் பார்க்கிங் மட்டுமே உள்ளது. பில்டர் கார் பார்க்கிங் ஏரியாவிற்கெனத் தனியாகப் பணம் கேட்கிறார். கொடுக்கலாமா? இப்போது கொடுத்துவிட்டு பின்னாளில் அசோஷியேசன் அமைக்கும்போது மற்ற வீட்டு உரிமையாளர்களால் பிரச்சினை ஏதும் வருமா? மகாராஷ்டிராவில் கார் பார்க்கிங் ஏரியாவிற்கெனத் தனியாகப் பணம் தரவேண்டியதில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அறிந்தேன். தமிழ்நாட்டில் எப்படி?
- சா.பச்சையப்பன், காஞ்சிபுரம்
அபார்ட்மெண்டில் வீடு வாங்கும்போது கார் பார்க்கிங் ஏரியாவுக்கெனத் தனியாக பில்டர் விலை கேட்பது தவறாகும். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குபவர்கள் கார் பார்க்கிங் ஏரியாவுக்கென்று தனியாக விலை கொடுக்கக் கூடாது. ஏன் என்றால் பொதுவாக கார் பார்க்கிங் ஏரியாவினையும் பில்டர் பொது பில்ட் அப் ஏரியாவுக்குள் சேர்த்திருப்பார்.
கார் பார்க்கிங் ஏரியாவை நீங்கள் வாங்கும் வீட்டின் பொது பில்ட் அப் ஏரியாவுடன் பில்டர் சேர்த்திருந்தால் நீங்கள் கார் பார்க்கிங் ஏரியாவுக்கென தனியாக விலை கொடுத்தாலும் அந்த கார் பார்க்கிங் ஏரியாவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியவர்கள் அனைவருக்கும் அதில் உரிமை உள்ளது.
அந்த கார் பார்க்கிங்குக்கு நீங்கள் சட்டப்படி தனியாக சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவேளை நீங்கள் வாங்கும் வீட்டின் பொது பில்ட் அப் ஏரியாவுடன் கார் பார்க்கிங் ஏரியாவினை பில்டர் சேர்க்காதிருந்தால் நீங்கள் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு தனியாக விலை கொடுத்து வாங்கலாம். அப்படி வாங்கும் பட்சத்தில் மற்ற அடுக்குமாடிக் குடியிருப்பு சொந்தக்காரர்கள் அதில் உரிமை கொண்டாட முடியாது.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.
கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in
அஞ்சலில் அனுப்ப:
சொந்த வீடு, தி இந்து (தமிழ்),
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago