எந்தவொரு விஷயத்தின் அருமையும் அது இல்லாமல் போகும்போதுதான் தெரியும் என்று சொல்வார்கள். இந்த வாசகம் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஜன்னல்களுக்குப் பொருந்தும். ஜன்னலில்லாத அறையில் வசிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஜன்னல்கள் வீட்டுக்குள் அழைத்து வரும் இயற்கையான வெளிச்சத்துக்கும், காற்றுக்கும் ஈடுஇணை இல்லை.
ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் சில சமயங்களில் ஜன்னல்கள் இல்லாத வீட்டில் நாட்களைக் கடத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். அம்மாதிரி ஜன்னல்கள் இல்லாத அறையில் வசிக்க நேரும்போது அதைச் சமாளிப்பதற்கான சில வழிகள்...
கண்ணாடிகளின் மந்திரம்
உங்கள் அறையில் ஜன்னல் இல்லாதபோது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒரு பெரிய நிலைக்கண்ணாடியை வாங்க வேண்டியதுதான். ஒரு பெரிய கண்ணாடியை ஜன்னலற்ற அறையில் மாட்டும்போது அது வெளிச்சத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சுவரில் இருக்கும் வெறுமைத்தன்மையையும் நீக்கும்.
உங்கள் அறைக்கூரையின் உயரம் குறைவாக இருக்கும்போது, ஆளுயரக் கண்ணாடியைக்கூட நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம், கண்ணாடிக்கு மேலேயும், கீழேயும் ஆறு அங்குல இடைவெளி இருப்பதை உறுதிசெய்வதுதான். கூரையைக் கண்ணாடி இடிக்காமல் இருக்க இது உதவும்.
வெள்ளை... வெள்ளை...
ஜன்னலற்ற உங்கள் அறையில் நிலவும் இருளைப் போக்கச் சுவர்களுக்கு வெள்ளை நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், மொத்த அறைக்கும் வெள்ளை நிறத்தைத் தேர்ந்தெடுப்பது பிடிக்கவில்லையென்றால், வெள்ளையின் துணைநிறங்களையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கூரைக்கு மட்டும் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. இப்படிச் செய்வதால் அறைக்கு ஓர் ஆழமான தோற்றம் கிடைக்கும். அறையில் இருக்கும் மற்ற பொருட்களுக்கும் கவனம் கிடைக்கும்.
கலைப்பொருள் பெரிது
கண்ணாடியை எப்படிப் பெரிதாகத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதேமாதிரி ஜன்னலற்ற அறைக்குக் கலைப்பொருளையும் பெரிதாகத் தேர்ந்தெடுப்பது அவசியம். அதுவும் அந்தக் கலைப்பொருளின் ஃப்ரேம் வெள்ளை நிறத்திலோ அல்லது உலோகமாகவோ இருந்தால் இன்னும் சிறந்தது. அத்துடன் அந்தப் பொருளின் பின்னணி நிறம் வெள்ளையாக இருப்பதும் முக்கியம். கூரைக்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் இந்த முறையைக் கையாலாளாம்.
பிரெஞ்சுக் கதவுகள்
உங்களுடைய வீட்டில் இருக்கும் பிரதான அறையில் ஜன்னல் இல்லையென்றால், உங்கள் வாசற்கதவுகளைப் பிரெஞ்சுக் கதவுகள் மாதிரி வைத்து அமைக்கலாம். பிரெஞ்சுக் கதவுகள் என்பது வேறொன்றும் அல்ல. இம்மாதிரிக் கதவுகளை நீங்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் உள்ள வீடுகளில் காணலாம். இந்த வகைக் கதவுகள் வீட்டுக்குள் அதிகமாக வெளிச்சத்தைக் கொண்டுவரும் தன்மையுடையவை. இதனால் வாசலுக்கு அருகில் இருக்கும் அறையில் ஜன்னல் இல்லையென்றாலும் இந்தக் கதவுகள் வெளிச்சத்தை அறைக்குக் கடத்தும்.
ரகசிய விளக்குகள்
அறைக்குள் நுழைந்தவுடன் கண்டுபிடிக்காதபடி விளக்குகளை மறைவான இடத்தில் அமைக்கலாம். இது பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு ஜன்னலில் இருந்து வெளிச்சம் வரும் போலித் தோற்றத்தை உருவாக்கும். விட்டங்கள், அறைக்கலன்கள், புத்தக அலமாரிகள் போன்றவற்றுக்குப் பின்னால் இந்த விளக்குகளை அமைக்கலாம். இவை அறைக்கு ஒரு புதிரான வெளிச்சத்தைக் கொடுக்கும். குளிர்ச்சியான ஃப்ளோரசண்ட் விளக்குகளை இதற்காகத் தேர்ந்தெடுக்கலாம்.
இடைச்சட்டம் கைகொடுக்கும்
அறையில் பெரிய காற்றோட்டமான ஜன்னல் அமைப்பதற்கு வழியில்லையென்றாலும் அறைக்கு மேலே டிரான்சோம் (Transom) எனப்படும் இடைச்சட்டத்தை அறைக்கு மேலே அமைக்கலாம். இது பக்கத்து அறையில் இருந்து வெளிச்சத்தையும், காற்றையும் கொண்டுவரும். பொதுவாக, கதவுக்கு மேலே இருக்கும் சுவற்றில் இவற்றை அமைக்கலாம். அதேமாதிரி, சுவரில் மாட்டிவைத்துள்ள கண்ணாடிக்கு மேலேயும் இந்த இடைச்சட்டத்தை அமைக்கலாம். இதனால், அறைக்குக் கூடுதல் வெளிச்சம் கிடைக்கும்.
உட்புற ஜன்னல்கள்
வெளிப்புற ஜன்னல்களை அறைக்குள் அமைக்க முடியாத சூழலில் உட்புற ஜன்னல் அமைக்கலாம். அறைக்குத் தனிமை முக்கியம் இல்லாதபட்சத்தில் உட்புற ஜன்னல்களை அமைக்கலாம். இது மற்றொரு அறையில் இருந்து வெளிச்சத்தைப் பகிர்ந்துகொள்ள உதவும்.
கண்ணாடிப் பொருட்கள்
சமையலறையில் ஜன்னல் இல்லையென்றால், அங்கே கண்ணாடியிலான பொருட்களைத் தேர்ந்தெடுத்து அடுக்கலாம். இது சமையலறைக்குள் வெளிச் சத்தைக் கடத்தும். அத்துடன், சமையல் மேடைகளுக்கு மேலே விளக்குகளை வரிசையாக அமைக்கலாம். இதுவும் சமையல் அறைக்குக் கூடுதல் வெளிச்சத்தை அளிக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago