செய்திகள் வாசிப்பது சுவர்கள்

By கனி

வீட்டின் சுவர்களை அழகுபடுத்த வண்ணங்களையும், அலங்கார வடிவமைப்புகளையும் யோசித்து, யோசித்துக் களைத்துப்போய்வீட்டீர்களா? வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு வீட்டைப் புதுமையாக அலங்கரிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் செய்தித்தாள் அலங்காரத்தை முயன்று பார்க்கலாம். செய்தித்தாளைத் தினமும் வாங்கிப் படித்துவிட்டுக் கடையில் போடாமல், அப்படியே சேகரித்து வைத்தால், ஒட்டுமொத்தமாக வீட்டின் தோற்றத்தையே புதுமையாக மாற்றிவிடலாம். செய்தித்தாளை வைத்து வீட்டை அலங்கரிப்பதற்கான சில வழிமுறைகள்...

வெண்மையின் பிரகாசம்

இந்தச் செய்தித்தாள் அலங்காரத்தைச் செய்வதற்கு ஏற்ற நிறம் வெள்ளை. உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளைநிறப் பொருட்களை வைத்து இந்தச் செய்தித்தாள் அலங்காரத்தை எளிமையாகச் செய்யலாம்.

உதாரணமாக, உங்கள் படுக்கையறையின் மெத்தைவிரிப்பு வெள்ளைநிறத்தில் இருந்தால், படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரில் செய்தித்தாள்களை ஒட்டி அலங்கரிக்கலாம். இது அறையின் தோற்றத்தைப் பெரிதாக்கிக்காட்டும். அத்துடன் அறைக்கு ஆழமான தோற்றத்தையும் தரும். வெள்ளை, கறுப்பு, சாம்பல் போன்ற நிறம்சேரா நிறங்களைப் பயன்படுத்தும்போது, அவற்றின் தன்மை வெளிப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

வித்தியாச விரும்பிகளுக்கு

சுவரில் ஒட்டும் இந்தச் செய்தித்தாள் அலங்காரம் வெறும் கறுப்பு, வெள்ளையில் இல்லாமல் வித்தியாசமாக தெரிய வேண்டுமா? அப்படியென்றால், நீங்கள் பழைய செய்தித்தாள்களையும், இதழ்களையும் பயன்படுத்தலாம். இதழ்களில் வெளியான பெரிய படங்களை வைத்தும் சுவரை அலங்கரிக்கலாம். இந்தச் சுவர்களில் வண்ணங்கள் வேண்டுமென்றால், வண்ண வண்ண தொப்பிகள், சால்வைகள் போன்றவற்றைத் தொங்கவிடலாம்.

மங்கலான மஞ்சள்

செய்தித்தாள்கள் பழசாகிவிட்டால், மங்கலான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இந்த மங்கலான செய்தித்தாள்களைக் கொண்டு சுவர்களை அலங்கரிக்கும்போது, வீட்டுக்கு ஒருவிதமான பழமையின் பிம்பம் இருக்கும். இது ‘வின்டேஜ்’ அலங்காரத்தின் தோற்றத்தையும் கொடுக்கும்.

பாதி அலங்காரம்

செய்தித்தாள்களைச் சுவர்களில் மொத்தமாக ஒட்டாமல், சுவரின் ஒரு பகுதியில் மட்டும் ஒட்டலாம். அப்படியில்லையென்றால், ஒரு தூணில் மட்டும்கூட ஒட்டலாம். சாப்பாட்டு மேசையின் அடிப்பாகம் போன்ற ஏதாவது ஓர் இடத்தில் மட்டும் இந்தச் செய்தித்தாள்களை ஒட்டி அலங்கரிக்கலாம். இது வீட்டுக்குள் நுழைந்தவுடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

செய்தித்தாள் பொருட்கள்

செய்தித்தாள்களையும், இதழ்களையும் மறுசுழற்சி செய்து உருவாக்கப்படும் பொருட்களைக் கொண்டும் வீட்டை அலங்கரிக்கலாம். செய்தித்தாள்களால் செய்த போட்டோ ஃப்ரேம்கள், பழக்கூடைகள், துணிக்கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களால் வீட்டை அழகாக்கலாம். செய்தித்தாளைத் தூண்டுதலாக வைத்து உருவாக்கப்பட்ட நாற்காலிகளையும் வீட்டின் அறைக்கலன்களாகத் தேர்ந்தெடுக்கலாம்.

கார்ட்டூன் அலங்காரம்

செய்தித்தாள்களில் வெளியான கார்ட்டூன்களைச் சேகரித்து அதைச் சுவரின் ஒரு பகுதியில் ஒட்டியும் அலங்கரிக்கலாம். சுவரில் இந்த கார்ட்டூன்களை ‘கோலாஜ்’போன்று ஒட்டி அழகுப்படுத்தலாம். இது ஒருவிதமான நவீனத் தோற்றத்தைச் சுவருக்குக் கொடுக்கும்.

கலையும் உருவாக்கலாம்

செய்தித்தாள்களை வைத்து அழகான கலைப்படைப்பையும் உருவாக்கலாம். செய்தித்தாள்களில் இருக்கும் வண்ணப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு மரச் சட்டகத்தில் ‘கொலாஜ்’உருவாக்கிக்கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தீட்டலாம். இது ஒரு புதுமையான கலைப்படைப்பாக இருக்கும். ‘இன்றைய செய்தி, நாளைக்குப் பொட்டலம் கட்டஉதவும்’ என்று சொல்வார்கள். பொட்டலம் கட்ட மட்டுமல்ல, இப்போது அது வீட்டை அலங்கரிக்கவும் உதவும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்