சென்னை போன்ற நகரத்தில் 10 லட்சத்துக்குள் சொந்த வீடு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள வீடுகளை வாங்குபவர்கள், அந்த வீட்டுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுவதுடன், வீட்டின் தொகையில் சுமார் 15 முதல் 20 சதவிகித பணத்தையும், முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் 10 லட்சம் ரூபாய் விலையில், ஒரு படுக்கையறை கொண்ட வீடு கிடைப்பது கடினம் குறைந்தபட்சம் 15 முதல் 20 லட்சங்களாவது தேவைப்படும்.
இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகள், வீடு வாங்குபவருக்குக் கை கொடுக்காது. எனவே, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கும் நபர், முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், வீட்டுக் கடனுக்கான முன்பணம் எனச் சுமார் 3 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும். இதுவே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடாக இருந்தால் 4 லட்சம் வரையும், 25 லட்சம் விலையுள்ள வீட்டுக்கு சுமார் 5 லட்சம் வரையும் செலவிட வேண்டியிருக்கும். நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு 4 லட்சம் அல்லது 5 லட்சம் ரூபாயைத் திரட்டுவது என்பது கடினமான காரியம்தான்.
இதுபோன்ற பெரிய தொகையைத் திரட்ட, நகையை அடமானம் வைத்தல், வட்டிக் கடன் வாங்குதல், பூர்விக வீடு அல்லது நிலத்தை விற்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை நடுத்தரக் குடும்பங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் இதற்கு வேறு மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறார்கள்.
பணம் திரட்ட ஆலோசனைகள்
வாடகை வீட்டில் இருக்கும் ஒருவர் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், அதற்கான முன்பணத்தைத் திரட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகை என்பதே சராசரியாக 6 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். எனவே, மாதம் தோறும் இந்தப் பணத்தைச் சேமித்தாலே குறிப்பிடத்தக்க அளவு மிச்சப்படுத்தலாம். இதற்குச் சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுவது லீசுக்கு வீட்டை எடுப்பது.
சென்னையில் தற்போது பல இடங்களில் வீடுகள் லீசுக்குக் கிடைக்கின்றன. சொந்தமாக வீடு வைத்திருப்பவர் இன்னொரு வீட்டை வங்கிக் கடன் மூலம் வாங்க நினைத்தால், தனது வீட்டை லீசுக்கு விட்டு, அதில் கிடைக்கும் தொகையை முன்பணமாகக் கொடுத்து புதிதாக ஒரு வீட்டை வாங்கி விடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புதிய வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் தொகையுடன், மேலும், சில ஆயிரங்களைச் சேர்த்து, மாதத் தவணையை வாங்கிக் கட்டி விடலாம் என்பதே சிறந்த யோசனையாக இருக்கிறது. இதுபோன்ற எண்ணம் உடையவர்கள் சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருவதால், லீசுக்கான வீடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இது ஒருபுறம் என்றால், ஒரு வீட்டை லீஸ் எடுப்பதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் அல்லவா... அதை எப்படித் திரட்டுவது? உதாரணமாக 6 ஆயிரம் ரூபாய் மாத வாடகை உள்ள ஒரு வீட்டை லீசுக்கு எடுக்க அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதுபோன்ற சமயத்தில் சம்பந்தப்பட்ட நபர் பணியாற்றும் அலுவலகத்திலேயே, வட்டியில்லா கடனாக, ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இது அவரின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளப்படும். வாடகை கொடுப்பதற்குப் பதிலாக இப்படி மாதத் தவணையில் அலுவலகக் கடனைச் செலுத்தினால், ஒன்றரை முதல் 2 ஆண்டுகளில், அவரின் கையில் 2 லட்சம் ரூபாய் இருக்கும்.
ஒருவேளை அலுவலகத்தில் கடனுதவி கிடைக்காவிட்டால், வங்கிகளில் தனிநபர் கடன் பெறலாம். பொதுத்துறை வங்கிகளில் ஒருவர் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதனை 2 ஆண்டுகளில் செலுத்துவதாக இருந்தால், அதிகபட்சமாக மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு வீட்டிற்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை வாடகை கொடுக்கும் ஒருவர், மாதம் தோறும் வாடகை கொடுக்காமல் 10 ஆயிரம் ரூபாய் செலுத்துவது சாத்தியமான விஷயம்தான்.
இதில், சாதகமான விஷயம், 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் லீசுக்கு எடுத்த வீட்டுக்காக வங்கியில் கடனாக வாங்கிய 2 லட்சம் ரூபாய் அவருக்கு முழுதாகச் சொந்தமாகி விடும். வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணையும் 2 ஆண்டுகளில் முடிந்து விடும். அதற்குப் பிறகு ஒரு ஆண்டில், அதே லீஸ் வீட்டில் தங்கும் பட்சத்தில், வாடகைத் தொகை அல்லது வங்கிக் கடனுக்கான மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்காது. எனவே அவரால் அந்த ஒரு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து விட முடியும். ஒரு வீட்டை லீசுக்கு எடுத்த 3 ஆண்டுகளில், அந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்கும் என்பதால், அதனை முன்பணமாகக் கொண்டு புதிய வீட்டையும், வங்கிக் கடன் மூலம் அவரால் எளிதாக வாங்கிவிட முடியும்.
ஒருவேளை குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளால், புதிய வீடு வாங்குவதை ஒருவர் தள்ளிப்போட நினைத்தாலும், அவரிடம் உள்ள பணத்துடன், மேலும் ஒரு லட்சத்தைச் சேர்த்து வேறு ஒரு வசதியான வீட்டை, லீசுக்கு எடுத்துக் கொள்ள முடியும். அல்லது அதே வீட்டில் இருக்க விரும்பினாலும், வீட்டின் உரிமையாளரிடம் பேசி லீஸ் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். இது 2 விதங்களில் லாபமளிக்கக் கூடிய விஷயம். முதலில் லீஸ் தொகை அதிகரிப்பதால், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை வேறொருவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விட விரும்ப மாட்டார்.
இரண்டாவது, லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு, அதிக அளவு தொகை அந்த வீட்டைக் காலி செய்யும்போது கிடைக்கும். இதனால், ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணம் 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை மிச்சமாகும். அதனைத் தொடர்ந்து சேமித்து வந்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த கடன் தொகையில் புதிதாக ஒரு வீட்டை வங்கிக் கடன் மூலம் எளிதாக வாங்கிட முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago