நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அவசரச் சட்டத் திருத்தத்தின் மூலம் அமல்படுத்தியிருக்கிறது. கட்டுமான விஷயங்களில் இந்தச் சட்டம் பெரும் மாற்றங்களை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதக, பாதகங்கள் என்ன?
வெளிநாடுகளில் இருப்பது போல வானளாவிய கட்டிடங்கள் இங்கேயும் வருமா என்று எண்ணிக்கொண்டிருந்த காலமும் இங்கே இருந்தது. இன்றோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகப் பெரு நகரங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் மேலே எழும்பிக் கொண்டிருக்கின்றன.
சிறு நகரங்களிலும்கூட இன்று பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. பல கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை வாங்கிப் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டி விற்கிறார்கள். எனவே இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
நிலத்தின் மதிப்பு உயர்வதால் இன்று விளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் தரிசு நிலங்களை வாங்கி, அதை மனை போட்டு விற்றார்கள். ஆனால், இன்றோ விவசாய நிலங்கள்கூட அழிக்கப்படு வீட்டு மனைகளாக ஆகிவருகின்றன. இந்தப் பணிகள் எல்லாம் ரியல் எஸ்டேட் வணிகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.
ஏற்கனவே இப்படி நிறைய விளை நிலங்கள் ‘விலை’ நிலங்களாக மாறிவிட்டன. அதாவது தனியார் மூலம் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறின. இதுவரை தனியார் செய்துவந்ததை இனி அரசும் செய்யப் போகிறது என்கிறார்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள்.
ஏற்கெனவே கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தைத் திருத்தி இப்போது அவசரச் சட்டமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்துள்ளது. இந்த அவசரச் சட்டத்தில் ஐந்து விஷயங்கள் முக்கியமானவை.
தேசியப் பாதுகாப்பு தொடர்பானவை, ராணுவம் தொடர்பானவை, மின்சாரத் திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள், தொழில் பூங்காக்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் ஆகிய இந்த ஐந்து பிரிவுகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது உரிமையாளரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்கிறது சட்டம்.
2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கு வீடு என்பதை மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஆர்வம் காட்டிவருகிறது. இதுபோன்ற மெகா திட்டங்களுக்கு நிலம் அதிகளவில் தேவைப்படும்.
அப்போது தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் அரசுக்கு உதவிகரமாக இருக்கலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு மக்களிடமும் ஆதரவு இருக்கலாம்.
ஆனால், ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். மேற்சொன்ன திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்யப்படும் நிலமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று முன்பு இருந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது திருத்தம் கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்தில், மேற்படி நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதைப் பார்க்கத் தேவை இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே விளை நிலங்களில்கூட இனிக் கட்டுமானங்கள் பெருகும் நிலை ஏற்படலாம்.
திருத்தம் வருமா?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நிலம் கையகப்படுத்தும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அப்போதே நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசுக்குப் பொறுப்பு கூடியது.
அதனால் பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியிருந்தது. அப்போது நிலம் கையகப்படுத்துவது மேலும் அதிகரித்தது. நிலம் கையகப்படுத்தும்போது பலரும் நீதிமன்றத்தை நாடும் நிலையும் அதிகரித்தது. நீதிமன்றத்தில் போடப்படும் தடைகளால் பல கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, அல்லது தாமதமாயின.
இன்றும்கூட நகர்ப்புறங்களில் மெட்ரோ ரயில் அமைக்க தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்தப் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தொழில் பூங்காக்கள், தொழிற்சாலைகள், மின் திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும்போது பல்வேறு பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் சந்திக்கவே செய்கின்றன.
மேற்கு வங்கம், சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இப்படி எழும் பிரச்சினைகளை இந்தச் சட்டத்தின் மூலம் அரசால் எளிதாகச் சந்திக்க முடியும்.
இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடுமையாக எதிர்த்துவருகின்றன. இது பெரு வணிக நிறுவனங்களுக்காக விளைநிலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
அரசு அதை மறுத்து, இது மக்களின் நன்மைக்காகவே கொண்டுவரப்படுகிறது என்கிறது. இந்த அவசரச் சட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளித்து திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனால் கட்டுமானத்துக்கான நிலம், விளைநிலம் ஆகியவை குறித்த அணுகுமுறையை இந்தத் திருத்தம் பெருமளவுக்கு மாற்றிவிடக்கூடும் என்பதில் ஐயமில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago