செலவில்லா ராஜ அலங்காரம்

By ம.சுசித்ரா

உங்கள் வீட்டை அலங்கோலமாக மாற்றும் பொருள்களைக் கொண்டே வீட்டை அழகுபடுத்த முடிந்தால் எப்படியிருக்கும்? அத்தகைய பொருள் நம் வீட்டைத் தினந்தோறும் வந்தடைகிறது. வந்து சேர்ந்த அன்றைக்கு அலாதியான பொருள். ஆனால் அடுத்த நாள் அற்பப் பொருள். அது என்ன? நாளிதழ்தான். நாளிதழ் காகிதங்களை மாதத்துக்கு ஒரு முறை அப்புறப்படுத்தாவிட்டால் மலைபோல் குவிந்துவிடும்.

அங்குமிங்கும் சிதறிக்கிடந்தால் கலவரக் கோலமாகக் காட்சியளிக்கும். இவ்வளவு காகிதங்களை வைத்து என்ன செய்வதென்றும் புரியாது. மிஞ்சி மிஞ்சிப் போனால், சமையலறை, வரவேற்பறையில் உள்ள அலமாரிகளில் நீளமாக மடித்துப் பரத்தி வைப்போம். ரொம்பவும் குவிந்துவிட்டால் எடைக்குப் போட்டு பேரம்பேசி முப்பது அல்லது நாற்பது ரூபாயைக் கையில் வாங்கி மகிழ்வோம் அவ்வளவுதான். ஆனால் நாளிதழின் காகிதங்கள் மட்டுமல்ல காலண்டர் ஷீட், திருமண அழைப்பிதழ், கிஃப்ட் பேப்பர் போன்ற வெவ்வேறு காகிதங்கள் கொண்டு அசத்தும் அலங்காரப் பொருள்களை நீங்களே வடிவமைத்து உங்கள் வீட்டை அழகுபடுத்தலாம்.

நேரம் அழகிய நேரம்

திருமணம் என்றாலும், புதுமனை புகுவிழா என்றாலும் அனைவரும் பரிசளிக்கும் பொருள் கடிகாரம். வீட்டுக்கு அவசியமான பொருள்களில் ஒன்று அது. அதை நூற்றுக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்குகிறோம். ஆனால் கடிகாரம் வடிவமைப்பது மிகச் சுலபம். இதற்குத் தேவை வண்ணமயமான காகிதம், கடிகார பலகை, கடிகார கிட், கடிகார முற்கள், பெயிண்ட் மற்றும் பெயிண்ட் பிரஷ்.

அடர்த்தியான காகித அட்டை ஒன்றை வட்ட வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மையத்தில் துளை போடுங்கள். இந்த அட்டையின் சுற்றளவைக் காட்டிலும் 1 அங்குலம் அதிகமான சுற்றளவில் வண்ணக் காகிதத்தை நறுக்குங்கள். இந்த கலர் காகிதத்தை அட்டையின் மேல் பரப்பில் ஒட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த கலர் பேப்பர் அடர்த்தியான நிறத்தில் இருக்குமானால், அதற்கு மேல் பொருத்தப்படும் கடிகார முள் துளிர் நிறத்தில் பெயிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அட்டையின் மையத்தில் இருக்கும் துளையை ஒட்டித், தற்போது ஒட்டிய காகிதத்தில் துளையைக் கவனமாக ஏற்படுத்துங்கள். கடிகார கிட்டை சரிபார்த்துப் பொருத்தி, முற்களை முன்புறத்தில் ஒட்டினால் உங்கள் வீட்டின் கண்கவர் கடிகாரம் தயார்.

அலங்கார அலமாரி

அலமாரி தட்டில் எண்ணெய், தூசி, அழுக்குப் படியாமல் தடுக்கவே காகிதங்களை மடித்துப் பரத்துவோம். அப்படி விரிக்கப்படும் காகிதங்களே அழகாக இருக்குமானால், உங்கள் அலமாரியை அலங்கரிப்பது சுலபம். அலமாரியின் உள் சுவரிலும் காண்ட்ராஸ்ட் நிறக் காகிதங்களை ஒட்டினால், உங்கள் பழைய வீடு பளீர் எனக் காட்சியளிக்கும்.

பேப்பர் ஃபிரேம்

கலை நயம்மிக்க ஓவியம் அல்லது புகைப்படத்தைத்தான் சட்டகத்தில் பொருத்தி வைக்க வேண்டும் என்றில்லை. கலர் பேப்பர், அல்லது பத்திரிகையில் இருந்து கலை நயத்தோடு வெட்டி எடுக்கப்பட்ட ஒரு காகிதத் துண்டுகூட அசத்தல் ஆர்ட் ஒர்க்காக மாறும்.

வரவேற்பு இலை வளையம்

அக்கம் பக்கத்தார் உங்கள் வீட்டுக்குள் நுழையும்போதே அசந்து போக வேண்டுமா? அதற்கும் தேவை சில காகிதங்களே. சாப்பாட்டுக்குப் பயன்படுத்தும் பெரிய பேப்பர் பிளேட் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் விளிம்பில் 2 அங்குலம் வரை வைத்துக்கொண்டு நடுவில் உள்ள காகிதங்களை ஒரு பெரிய வட்டம் அளவில் வெட்டி எடுத்து விடுங்கள்.

பேப்பர் பிளேட்டின் ஒரு முனையில் ஒரு துளைபோட்டு ஒரு நீளமான கயிற்றைக் கட்டுங்கள். வெவ்வேறு டிஸைன் கொண்ட வண்ணக் காகிதங்கள், ஆனால் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் இருக்கும் காகிதங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலர் காகிதங்களை100-க்கும் அதிகமான எண்ணிக்கையில் சிறிய இலை போன்ற வடிவில் வெட்டி எடுங்கள். இந்த இலைகள் 3டி எஃபெக்ட்டில் காட்சியளிக்க, நீள வாக்கில் பாதியாக மடித்து, பின் விரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது வெளி வட்டத்தில் ஒரு செட் இலைகளை கிளாக் வைசில் முன்னும் பின்னுமாக ஒட்டுங்கள். அடுத்து உள் வட்டத்தில் அடுத்த செட் இலைகளை ஆண்டி கிளாக் வைசில் ஒட்டுங்கள். ஒரு இலை மற்றொரு இலையோடு ஒட்டி நெருக்கமாக இருக்க வேண்டும். அடியிலுள்ள பேப்பர் பிளேட் முற்றிலுமாக மறைக்கப்பட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, உங்கள் வீட்டு வரவேற்பறைக் கதவில் இந்த இலை வளையத்தைத் தொங்கவிட்டால் உங்கள் பழைய வீடு புதுப்பிக்கப்பட்டது போல ஜொலி ஜொலிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்