சமையல் காஸுக்கு விடைகொடுப்போம்

By ஜெய்

அறிவியலால் நமது வாழ்க்கை பலவிதமான மாற்றங்கள் அடைந்துவிட்டது. மின்சாரம் இன்றி நம் அன்றார வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல இன்று பெரும்பாலான மக்கள் உணவு சமைக்க, எரிவாயுவை நம்பியே இருக்கிறார்கள். கிராமங்களில் கூட இப்போது எரிவாயு பயன்படுத்தப்படாத வீடுகள் மிகக் குறைவு.

தேவைகள் அதிகமாக அதிகமாகத் தட்டுப்பாடும் வரும். சமையல் எரிவாயுக்குக் கூடுதல் காசு கொடுத்தாலும் நம் அதிகப்படியான தேவைக்குக் கிட்டுவது பெரும்பாடாக உள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தட்டுப்பாடும் மிக அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இம்மாதிரிச் சிக்கல்களைச் சரிசெய்யவே விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிருத்தித் திட்டம் (நார்டெப்) ‘சக்தி சுரபி’ என்ற எரிவாயுக் கலனை முன்னிறுத்தி வருகிறது.

பயன்கள்

சக்தி சுரபி சமையலறைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றில் இருந்து இயற்கையான முறையில் எரிவாயுவை உண்டாக்குகிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சாண எரிவாயுவின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்த சக்தி சுரபி. இதன் மூலம் மூன்று விதமான நன்மைகள் கிடைக்கின்றன என்கிறார் நார்டெபைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.

சிலிண்டர் வாயுவுக்கு மாற்றுச் சமையல் எரிபொருள் கிடைக்கிறது. இந்தக் காலத்தில் கழிவுகளைக் கையாள்வதே மிகக் கடினமான விஷயமாக இருக்கிறது. உற்பத்திசெய்வதை விடக் கழிவுகளை மேலாண்மை செய்வது எளிதானது அல்ல. சாதாரண விஷயத்தில் இருந்து அணு குண்டுக் கழிவுகளுக்கும் இது பொருந்தும். இந்த சக்தி சுரபியின் மூலம் வீட்டில் உள்ள கழிவுகளை எளிதாக மேலாண்மை செய்ய முடியும். மட்டுமல்லாமல் கழிவுகளை உரமாகவும் மாற்றலாம் என்கிறார் அவர். மேலும் இயற்கை முறையிலான உரமான மண்புழு உரம் தயாரிக்க ஒரு மாத காலம் வரை ஆகும்.

ஆனால் இந்த முறையில் உடனடியாக இயற்கை உரத்தை உண்டாக்க முடியும் என்கிறார் ராமகிருஷ்ணன். சுற்றுப்புறத்துக்குக் கெடுதல் விளைவிக்கும் மீத்தேன் வாயுவை இதம் மூலம் கட்டுப்படுத்த முடியும். மீத்தேன் வாயு, கரியமில வாயுவைவிட இரு மடங்கு தீங்கானது.

எந்ததெந்தக் கழிவுகளை இடலாம்

சோறு, சப்பாத்தி, பருப்பு, காய்கறிக் கூட்டு, மீன், மாமிசக் கழிவுகள் போன்ற மீந்துபோன உணவு வகைகளையும், காய், கனிக் கழிவுகளையும், கோதுமை, மரவள்ளிக் கிழங்கு, சோள மாவு, போன்ற கழிவுகளையும், வேம்பு, காட்டாமணக்கு, ரப்பர் போன்றவற்றின் உண்ணத்தகாத வித்துகளையும் சக்தி சுரபியில் இடலாம்.

செயல்முறை

முதலில் இதன் உள்ளே மாட்டுச் சாணத்தை இடவேண்டும். சாணத்தில் மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம். முப்பது நாள்களுக்கு மேலான மாட்டுச் சாணமாக இருக்க வேண்டும். சாணத்தில் அதிக அளவில் மீத்தனோஜெனிக் பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும். சாணமும் நீரும் ஒரு வாளிக்கு ஒரு வாளி என இருக்க வேண்டும். அவை நார்ப் பொருள்களில் இருந்து மீத்தேனை உற்பத்தி செய்கின்றன. அதற்குப் பிறகு மாட்டுச் சாணம் தேவை இல்லை.

பிறகு கலனில் சமையலறைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகளைப் போடுவதைத் தொடங்கலாம். கழிவுப் பொருள் எளிதில் உள்செலுத்துக் குழாய் வழியே செல்லும். எவ்வளவு அளவு கலனில் இட வேண்டுமென்றால் ஒரு கன மீட்டர் கலனுக்கு 5 கிலோ சமையலறைக் கழிவு தேவை. கலனில் இருந்து வெளிவரும் எரிவாயுவைச் சமையலறைச் சாண எரிவாயு அடுப்பில் இணைத்துப் பயன்படுத்தலாம். வெளிப்போக்குக் குழாய் வரும் உரக் கூழை, உரமாகப் பயன்படுத்தலாம்.

கலனின் உள்ளில் முருங்கைக் காய், வைக்கோல் போன்ற நார்ச்சத்து கொண்ட பொருள்கள் மிதக்கக்கூடும். அம்மாதிரி மிதக்கும் குப்பைகளை அகற்றிவிட வேண்டும். கலவையைக் கிளறிவிட வேண்டும். மிதக்கும் குப்பைகளை மறுபடியும் அகற்ற வேண்டும். மறுநாளும் இவ்வாறே செய்ய வேண்டும். இப்போது கலன் ரசாயனப் பணிக்குத் தயாராகிவிடும். அதை ஒரு டிரம்மால் மூடிவிட வேண்டும். ஓரிரு நாள்களில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடும்.

முதல் 3 - 4 நாள்களுக்கு எரிவாயுவை வெளியேற்றிவிட வேண்டும். முதலில் உற்பத்தியாகும் எரிவாயு அதிக நாற்றமெடுக்கக்கூடியதாக இருக்கும். அதனால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் எரிவாயுவைக் கலனுக்கு அருகில் வைத்துச் சோதித்துப் பார்க்கக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும். அடுத்த வாரத்தில் அதில் எரிபொருள் இடாமல் உற்பத்தியான எரிவாயுவை வெளியேற்றிவிட வேண்டும். அதிக அமிலத்தன்மை கொண்ட பொருள்களையும் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள்களையும் உள்ளே இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பயன்பாடுகள்

ஒரு கன மீட்டர் சக்தி சுரபி எரிவாயு, 0.43 கிலோ எல்பிஜிக்குச் சமம். ஒரு கன மீட்டர் எரிவாயுக் கலனுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ சமையலறைக் கழிவு தேவைப்படும். சமையல் எரிவாயு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். டீசல் ஜெனரேட்டரின் திறன் 10 கிலோ வாட் என்றால் எரிவாயு இயந்திரம் 50 சதவீத மின்சக்தியைக் கொடுக்கும். எரிவாயுவை மின்சக்தியை மாற்றுவதற்கான மாற்றுவதற்கான கருவிகள் எளிதாகச் சந்தையில் கிடைக்கின்றன.

சக்தி சுரபி அமைப்பதற்கான எல்லா விதமான உதவிகளையும் விவேகானந்த கேந்திரத்தின் நார்டெப் செய்து தருகிறது. ஒரு நாள் பயிற்சிக்குப் பிறகு இதற்கான உபகரணங்களை வழங்குகிறார்கள். இதற்காகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இது கிராமப் புறங்களுக்கு மட்டும் ஏற்றது எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இது நகரங்களுக்கும் ஏற்றதுதான். வீட்டின் மொட்டை மாடிகளில் இதை நிறுவிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: 94426 53975 (நார்டெப்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்