கட்டிடங்களின் கதை 17: உயரத்துக்குக் கொண்டுசெல்லும் ‘ஏடிஎம்’

By எல்.ரேணுகா தேவி

உலகம் முழுவதும் ஏடிஎம் என்றால் பணம் எடுக்கும் இயந்திரத்தைத்தான் குறிக்கிறது. ஆனால், ஜப்பானில் உள்ள மிட்டோ நகரில் ஏடிஎம் என்றால், அனைவரும் கை உயர்த்திக் காட்டுவது வான் மேகங்களை தொட்டுக்கொண்டிருக்கும் ஆர்ட் டவர் மிட்டோ என்னும் (Art Tower Mito-ATM) கட்டிடத்தைத்தான்.

மிட்டோ நகராட்சியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் நினைவுச் சின்னமாக 1990-ம் ஆண்டு திறக்கப்பட்டதுதான் ஆர்ட் டவர் மிட்டோ. அந்நாட்டின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான அரங்கமாக விளங்குகிறது ஆர்ட்டவர்.

வித்தியாசமான இக்கட்டிடத்தின் வடிவமைப்புக்கு உயிர் கொடுத்தவர் பிரபலக் கட்டிடவியலாளர் அரத்தோ இசோசகி. இவருக்குக் கட்டிடவியலின் நோபல் என அழைக்கப்படும் பிரிட்ஸ்கர் பரிசு இந்த ஆண்டு வழங்கப்பட்டது.

போரின் தாக்கதால் உருவான கட்டிடங்கள்

ஜப்பானியக் கட்டிடவியலாளர்களில் முக்கியமானவரான அரத்தோ இசோசகி 1931-ம் ஆண்டு பிறந்தவர். அந்நாட்டின் நகர்ப்புறக் கட்டிடவியல் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில்  கட்டிடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டிடவியலாளரான கென்சோ டாங்கோவிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

1963-ல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அரத்தோ இசோசகியின் கட்டிடங்கள் பெரும்பாலும் உலகப் போருக்குப் பிந்தைய தாக்கத்திலிருந்து உருவான மாற்று வடிவமைப்பு கொண்ட கட்டிடங்களாகும். பொதுவாகக் கட்டிடவியலாளர்கள் எடுக்கத் தயங்கும் கட்டிட வடிவமைப்பு முறையை மிக எளிமையான முறையில்  அறிமுகப்படுத்துவதே இவரின் சிறப்பு.

குறிப்பாக லாஸ் ஏஞ்சல் நகரில் 1991-ல் இவர் வடிவமைத்த மியூசியம் ஆஃப் காண்டம்பரரி ஆர்ட்(Museum of Contemporary Art) முக்கியப் படைப்பு. இந்த அருங்காட்சியகம் உருவான அதேகாலத்தில் கட்டப்பட்டதுதான் ஆர்ட் டவர் மிட்டோ கட்டிடம். இரண்டு ஒரே வடிவமைப்பு முறையை ஒத்திருக்கிறது.

இரட்டை வலைப்பின்னல் 

ஆர்ட் டவர் மிட்டோ கட்டிடம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்து 29 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்றைக்கும் உலகின் குறிப்பிடத்தகுந்த கட்டிடங்களுள் ஒன்றாக உள்ளது. ஜப்பான் நாட்டின் முக்கியச் சுற்றுலாத்தலங்களில் ஆர்ட் டவரும் ஒன்று. பொதுவாக, வானுயரக் கட்டிடங்கள் சதுர வடிவிலோ ஜியாமெட்ரிக் வடிவிலோதான் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், ஆர்ட் டவர் மிட்டோவின் வடிவமைப்பு டிஎன்ஏவைக் குறிக்கும் இரட்டை வலைப்பின்னலின் வடிவமைப்பை (Boerdijk Coxeter helix ) மையமாகக் கொண்டது. 100 மீட்டர் உயரம் கொண்ட ஆர்ட் டவர் கட்டிடம் கீழ்த் தளத்திலிருந்து மேல்தளம் வரை முழுவதுமாக இரும்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய இரும்புக் குழாய்கள் ஒவ்வோர் அடுக்கையும் இணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள அரங்குகள் 1,000 இருக்கைகள் கொண்டவை. மொத்தம் ஒன்பது கண்காட்சி அரங்குகள் உள்ளன. அவற்றில் கிராஃபிட்டி, வீதி ஓவியங்கள், சமகாலக் கலைகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

முதல் டைட்டேனிய கட்டிடம்

ஆர்ட் டவர் அருங்காட்சியகத்துக்குச் செல்லாமலே அதன் மேல் தளத்துக்குச் சென்று மிட்டோ நகரின் முழுக் காட்சியையும் உயரத்திலிருந்து ரசிக்க முடியும். அதற்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மின்தூக்கி வழியாக இந்தக் கட்டிடத்தின் மேல் தளத்துக்குச் செல்லும்போது பயணிகள் இருக்கும் தளத்தை எண்களில் குறிப்பிடாமல் கட்டிடத்தின் வடிவத்தின் வழியாகக் குறிப்பிடுகிறார்கள்.

டெட்ராஹெட்ரான், ஐசோசெல் ஆகிய முக்கோண வடிவங்களில் இக்கட்டிடத்தின் புறத்தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்புறத்தில் உள்ள ஒவ்வொரு முக்கோணமும் 9.6 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த முக்கோண வடிவத்தின் மேல் தகடுகள் டைட்டேனியம் உலோகத்தால் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த எடைகொண்ட டைட்டேனிய உலோகம் எளிதில் துருப்பிடிக்காது, எல்லாப் பருவநிலைக்கும் பொருந்தும் தன்மைகொண்டது. ஜப்பான் நாட்டின் முதல் வானுயர டைட்டேனிய கட்டிடம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்