வீட்டை அப்படியே தூக்கலாம்

By டி. கார்த்திக்

“வீடு குழிக்குள்ள இருக்குற மாதிரி இருக்கே.... தெரு மேலே உயர்ந்த மாதிரி இருக்கே...” - ஒரு இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வசித்தவர்கள் மீண்டும் அந்த இடத்துக்கு வரும்போது கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். உண்மைதான். அவ்வப்போது தெருக்களின் மீது மண்ணைக் கொட்டிக் கொட்டி அதை சீரமைக்கின்றன உள்ளாட்சி அமைப்புகள். தார் சாலை என்றால், அதன் மீது ஜல்லியைப் அப்படியே கொட்டி சாலை அமைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். விளைவு?

பிரச்சினை

வீடு குழிக்குள் சென்றது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. பலவீடுகளிலும் இதைப் பார்த்திருப்போம். வாசல்படி அப்படியே தெருவோடு தெருவாக சமமாக இருக்கும். இது மழைக்காலத்தில்தான் பெரும் பிரச்சினையை தந்துவிடும். மழை பெய்தால், மழை நீர் அப்படியே வீட்டுக்குள் வந்துவிடும். இது பலருக்கும் பெரும் தலைவலியாக மாறிவிடும் பிரச்சினைதான்.

ஜாக்கி தொழில்நுட்பம்

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால், ஒன்று வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்ட வேண்டும். இல்லையென்றால் வீட்டை மேலே உயர்த்த வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் இந்தக் காலத்தில், இருக்கும் வீட்டை இடித்துவிட்டுப் புதிதாக இன்னொரு வீட்டைக் கட்ட அவ்வளவு சுலபத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படியானால், வீட்டை மேலே உயர்த்த முடியுமா? நிச்சயம் முடியும். அதற்கும் புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. வீட்டை இடிக்காமல் ஜாக்கிகள் மூலம் அப்படியே பக்கவாட்டில் நகர்த்தி, வீட்டை மேலே உயர்த்திக் கொள்ள முடியும்.

இந்தத் தொழில்நுட்பத்தில் 60 டன் எடை கொண்ட அடுக்குமாடி வீட்டைக்கூடப் பெயர்த்து நகர்த்திவிட முடியும். அதற்கு தகுந்தாற்போல் இதில் ஜாக்கிகளைப் பயன்படுத்துவார்கள், அவ்வளவுதான். ஜாக்கி என்பதும், விஷேசமான ஜாக்கி என்று நினைக்க வேண்டாம். நான்கு சக்கர வண்டிகளில் டயர் மாற்ற பயன்படுத்துவார்களே அதே ஜாக்கிதான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலம். இப்போது தமிழகத்திலும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் வீட்டை நகர்த்தி, 3 முதல் 5 அடி அளவுக்கு மேலே உயர்த்திக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

மேலே உயர்த்துவது எப்படி?

ஜாக்கிகளைக் கொண்டு வீட்டை எப்படி மேலே தூக்க முடியும் என்று கேள்வி எழலாம். முதலில் வீட்டின் சுவர்களைச் சுற்றிப் பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ‘ஜாக்கி'களை வைக்கிறார்கள். இதனால் கட்டிடத்தின் முழு பளுவையும் ஜாக்கிகள் தாங்கிக் கொள்ளும். இதில் இடத்தைப் பொறுத்து ஜாக்கிகளின் எண்ணிக்கை மாறும். இந்தப் பணி முடிந்த பிறகு, பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து ஒரே நேரத்தில் ‘ஜாக்கி'களை இயக்கி மேலே உயர்த்துகிறார்கள்.

மீண்டும் இணைப்பு

பின்னர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமெண்ட் செங்கற்களை வைத்துத் தேவையான அளவு கட்டுகிறார்கள். செங்கற்களை வைத்து கட்டிய பிறகு பக்கவாட்டில் நகர்த்தப்பட்ட கட்டிடத்தை அதன் மேலே வைத்து இணைத்து மீண்டும் பூசிவிடுகிறார்கள். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டுமே சேதமடையும். ஒயரிங், பிளம்பிங், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் என எதையும் தொடுவதில்லை.

சுவர்களில் விரிசலும் ஏற்படுவதில்லை. தொடர்ச்சியாகப் பணி மேற்கொண்டால் ஒரு 45 நாட்களுக்குள் பணியை முடித்துவிடலாம். இதில் உள்ள ஒரே குறை, ‘செப்டிக் டேங்க்’ இணைப்பு மட்டும் துண்டிக்கப்படலாம். பணிகள் முழுமையாக முடிந்த பிறகு மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

செலவு என்ன?

எத்தனை அடிக்கு உயர்த்துகிறோம் என்பதைப் பொறுத்து செலவு மாறுபடும். குறிப்பிட்ட அடி வரை மேலே உயர்த்த அடிக்கு ஒரே தொகையாகவும், அடுத்தடுத்த அடி உயர்த்த அடிக்கு ஒவ்வொரு வீதமும் செலவு ஆகும். நிறுவனத்தைப் பொறுத்து செலவும், நிர்ணயிக்கப்படும் கட்டணமும் மாறலாம். ஒரு வீட்டை கட்ட ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்குதான் இந்த முறையில் வீட்டை நகர்த்தி மேலே தூக்க செலவாகும்.

வீடு இடிந்தால்…

ஒருவேளை வீட்டை நகர்த்தும்போது வீடு இடிந்தால் என்ன செய்வது என்று நினைக்கலாம். பெரும்பாலும் வீட்டைப் பக்கவாட்டில் நகர்த்தும் முன்பே கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்து கொள்வார்கள். அதன்பிறகுதான் பணியையே தொடங்குவார்கள். கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, வீடு இடிந்தால் சில நிறுவனங்கள் கட்டுமானத்துக்கான இழப்பீட்டைக் கொடுக்கவும் செய்கின்றன. ஆனால், இதையெல்லாம் குறிப்பிட்ட நிறுவனத்துடன் பேசும்போதே இதுபோன்ற சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு பணியைத் தொடங்க அனுமதி கொடுப்பது நல்லது.

முதல் நகர்வு

முதன்முதலில் ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டடத் தொழில்நுட்பம் ஹரியானாவில்தான் நடந்தேறியது. 1991-ம் ஆண்டில் அங்கு ஒரு பாலத்தைப் பெயர்த்து மேலே உயர்த்தினார்கள். அதன்பிறகே கட்டிடங்களை மேலே உயர்த்தும் இந்தத் தொழில்நுட்பம் பரவலானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்