சென்னையில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த மவுலிவாக்கம் விபத்து இந்தியாவையே அதிரவைத்தது. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் நடந்த மோசமான கட்டிட விபத்துகளில் ஒன்று இது. மவுலிவாக்கம் விபத்துக்குப் பிறகு கட்டுமானம் குறித்தும் அதில் உள்ள விதிமுறை மீறல்கள் குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் விதிமுறை மீறல் கட்டுமானங்களை தடுப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தைச் சமர்பிக்கத் தலைமை அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
பொதுவாக ஒரு பெரிய விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகுதான் நமக்கு விழிப்புணர்வு உண்டாகும். திருச்சி திருமண மண்டப விபத்துக்குப் பிறகு திருமண மண்டபங்கள் அமைப்பது குறித்த ஒழுங்குமுறை அமைக்கப்பட்டது. கும்பகோணம் பள்ளி விபத்துக்குப் பிறகுதான் பள்ளிகள் அமைப்பதிலும் விதிமுறைகளை அரசு ஒழுங்குபடுத்தியது.
விதிமீறல் கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு எல்லாம் முறைப்படுத்தப்பட்டுவிடும் என்பதுபோல் அடுத்து அடுத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன. ஆனால் சென்னையில் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஒன்றிரண்டு அல்ல. குடியிருப்பு வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என லட்சங்களைத் தாண்டும். முக்கியமாக சென்னையின் முக்கியமான சந்தைப் பகுதியான ஜார்ஜ் டவுண் பகுதி, தி நகர் பகுதி போன்ற இடங்களில் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கடைகள் நூற்றுக்கணக்கானவை இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அதுபோன்ற விதிமுறை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ. சீல் வைப்பதும்கூட நடந்துள்ளது.ஆனால் விதிமுறை மீறி கட்டப்பட்ட கடைகள், கட்டுமான விதிமுறைகளுக்குள் தங்கள் கடைகளை மாற்றியமைத்ததில்லை. சில நாட்களில் அனுமதியளிக்கப்பட்டுக் கடைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கிவிடும்.
இப்போது விபத்து நடந்துள்ள சென்னை சில்க்ஸ் ஏழு மாடிக் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது என்றால், பல மாடிக் கட்டிடங்களான எத்தனை கடைகள் ரங்கநாதன் தெரு போன்ற குறுகிய தெருவில் உள்ளன. சென்னை சில்க்ஸ் தீ விபத்து நடந்த உஸ்மான் சாலையை அணுகவே தீயணைக்கும் வாகனங்களுக்குச் சிரமம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரங்கநாதன் தெரு போன்ற குறுகிய சாலை உள்ள தெருவில் தீ விபத்து நடந்தால் வாகனங்கள் உள்ளே வருவது மிகவும் சிரமம். மேலும் கடையில் உள்ள வாடிக்கையாளர்களை, தொழிலாளர்களை வெளியேற்றுவதும் மிகப் பெரிய சவால்.
தீ விபத்தைத் தடுக்கும் கட்டுமானம்
ஒரு கட்டிடம் கட்டும்போதே தீ விபத்தை எதிர்கொள்வதற்கேற்ப வடிவமைப்பு செய்யப்பட வேண்டும் என்கிறார் கட்டிடவியல் துறைப் பேராசிரியரான சுந்தர. பாரதிதாசன். கட்டிடம் கட்டும்போதே விபத்து காலத்தில் மக்கள் வெளியேறுவதற்கான வழியை வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர். பொதுவாகக் கடைகள் அதிகம் ஒரே இடத்தில் அமைந்துள்ள தி.நகர் போன்ற சந்தைப் பகுதியில் கடைகளுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும். அங்கே மக்கள் புழங்குவதற்கான வெளி இருக்க வேண்டும். இதை ஒப்பன் ஸ்பேஸ் ரிசர்வேஷன் என்கிறார்கள்.
கட்டிடத்தின் முகப்புப் பகுதி கண்ணாடி போன்ற எளிதாகத் தகர்க்கக் கூடிய கட்டுமானப் பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தால் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்துக்குள் நுழைவு எளிது. மேலும் கடைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக கட்டிடங்களுக்குள் பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. அதிக வெப்பம் தாங்கக்கூடிய கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் இப்போது தீ விபத்துக்குள்ளாகியுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடச் சுவர்கள் வெப்பம் தாங்காமல் தகர்ந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டிடச் சுவர் இவ்வளவு பலவீனமாக இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு வெப்பம் தாங்கக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். மேலும் கட்டிடங்களுக்கு இடையில் இடைவெளி இருந்தால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த கட்டிடங்களுக்கும் தீ பரவாமல் இருக்கும் என பேரா. சுந்தர பாரதிதாசன் கூறுகிறார்.
என்ன செய்ய வேண்டும்?
தீ விபத்துக்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. நான்கு மாடிக்கு அனுமதி வாங்கி ஏழு மாடி கட்டியதுதான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் இந்தத் தவறில் அரசுக்கும், கட்டிட வடிவமைப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பங்கு இருக்கிறது. தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் இது குறித்து விவாதிப்பதும் பிறகு தங்கள் அன்றாடப் பணிகளில் மூழ்குவதும் நம்முடைய, அரசினுடைய வாடிக்கை. இது பொதுமக்களாகிய நமக்கும் பொருந்தும். அரசுக்கும் பொருந்தும்.
விதிமுறை மீறல் கட்டிடங்களைக் கண்டுபிடிக்கும் சி.எம்.டி.ஏ. மற்றும் நகரமைப்பு நிர்வாகம் அதற்கு அபராதம் விதிக்கும் வழக்கம் இருக்கிறது. இதனால் அந்தத் தவறுகள் தொடர்கிறதுதான் தவிர, திருத்தப்படுவதில்லை. விதிமுறைகள் மீறிக் கட்டிவிட்டு அபராதம் செலுத்தினால் போதும் என்று புதிய கட்டிடங்களும் எழுப்பப்படுகின்றன. சாலையின் அளவைப் பொறுத்து கட்டிடங்கள் வடிவமைப்பதை அரசு கடுமையாக்க வேண்டும்.
விதிமுறை மீறல் கட்டிடங்களைப் பற்றிய புகார் தெரிவிப்பதற்காக சி.எம்.டி.ஏ. இணையத்தில் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அதில் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இதில் பொதுமக்களாகிய நம்முடைய பொறுப்புதான் முக்கியமானது. மேலும் ஒவ்வொரு கட்டுமானத்திலும் உரிமையாளர், கட்டுமான வடிவமைப்பாளர், கட்டுநர், பயனாளர் எனப் பல நிலைகளில் இருப்பது பொதுமக்களாகிய நாம்தான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago