கடந்த வாரம் சொந்த வீடு பகுதியில் ‘மவுலிவாக்கமும் வீட்டுக் கடனும்’ என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வீடு வாங்க வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் படும் துயரம், இடிந்த வீட்டுக்கு வீட்டுக் கடனை வசூலிக்க வங்கிகள் காட்டும் ஆர்வம், தவணையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாத அம்சங்களைக் கட்டுரை அலசியிருந்தது. உண்மையில் மவுலிவாக்கம் அடுக்குமாடி தரைமட்டமான சம்பவம் வீடு வாங்குபவர்களுக்கு மிகப் பெரிய பாடம் என்று சொல்லலாம்.
இதில் உள்ள அம்சம் அடுக்குமாடிக் கட்டப்படும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதன் மேல் போட்ட முதலீடுக்கு யார் பொறுப்பு என்ற விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
முன்னெச்சரிக்கை
இப்போது இன்சூரன்ஸ் என்பது மிகவும் பரவலாகிவிட்டது. தனியார் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களுக்குக்கூட இன்சூரன்ஸ் எடுக்கும் காலம். 8 முதல் 10 மணி நேரப் பயணத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால், இன்சூரன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை.
அப்படியானால், காலங்காலமாக, தனக்குப் பிறகு வாரிசுகள் வாழப்போகும் வீட்டைக் கட்டியெழுப்பும்போது, அந்த வீட்டைக் கட்டிக் கொடுப்பவர்களுக்கு எவ்வளவு முன்னெரிச்சரிக்கை இருக்க வேண்டும்? வீட்டை வாங்குபவர்களுக்கு எந்த அளவுக்கு முன் யோசனை இருக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்புகிறது.
இன்சூரன்ஸ்கள்
பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு, வீடு கட்டிய பிறகே இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த இன்சூரன்ஸை வீட்டுக் கடன் வாங்கும்போதே சம்பந்தப்பட்ட வங்கிகளே எடுத்துகொடுத்துவிடுகின்றன. மாதந்தோறும் பாலிசி தொகையைச் செலுத்தினால் போதுமானது.
வங்கிகள் கொடுத்த வீட்டுக் கடனுக்குப் பாதுகாப்பாக இது செய்யப்படுகிறது. ஆனால், அதே அடுக்குமாடிக் குடியிப்பு கட்டப்படும்போது வீட்டுக் கடன் வாங்கினால், இன்சூரன்ஸுக்கு வழியில்லை. வீடு கட்டிய பிறகே இன்சூரன்ஸ் எடுக்க முடிகிறது. மவுலிவாக்கம் வீடு இடிந்த விஷயத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் திண்டாடுவது இதனால்தான்.
பாதுகாப்பு என்னாவது?
அப்படியானால் வீடு கட்டப்படும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், வீட்டை வாங்க முதலீடு செய்தவர்களின் கதி என்னாவது? அதற்கும் வழி இருக்கிறது. பொதுவாகக் கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி வீடுகளைக் கட்டும்போது இன்சூரன்ஸ் எடுப்பார்கள். முறையாக, நேர்மையாகச் செயல்படும் கட்டுமான நிறுவனங்கள் இதைக் கண்டிப்பாகச் செய்துவிடுவார்கள்.
அந்த இன்சூரன்ஸ்களின் பெயர் ‘Errection all risk' அல்லது ‘contractor all risk'. இதில் ஏதாவது ஒரு இன்சூரன்ஸை எடுத்தாலும் போதுமானது. இந்தியாவில் ‘காண்டிராக்டர் ஆல் ரிக்ஸ்’இன்சூரன்ஸ் பரவலாக காப்பீடு நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன.
கட்டுமான இன்சூரன்ஸ்
‘காண்டிராக்டர் ஆல் ரிஸ்க்’ கட்டுமானப் பணிகளின் போது எதிர்பாராமல் நடக்கும் பலவிதமான அசம்பாவிதங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடியது. இந்த இன்சூரன்ஸைக் கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர்கள் எடுக்க முடியும். கட்டுமானத்தின்போது எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தீ விபத்து, வெள்ளம், புயல், இடி, மின்னல், நில நடுக்கம், கட்டிடம் இடிந்துவிழுதல், நீரால் ஏற்படும் பாதிப்பு, ஈரத்தால் ஏற்படும் அசம்பாவிதம், கட்டுமானத்தில் ஏற்படும் தவறு, மனிதத் தவறு போன்ற அசம்பாவிதங்களுக்குப் பாதுக்காப்பு வழங்கக்கூடியது.
இந்த இன்சூரன்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியது முதல் திட்டம் நிறைவு பெறும் வரை பாதுகாப்பு அளிக்கும். எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் ஏற்படும் நிதி இழப்புகளைச் சமாளிக்க ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த இன்சூரன்ஸ் பெரும் உதவியாக இருக்கும். ‘எரெக்ஷன் ஆல் ரிஸ்க்’ இன்சூரன்ஸும் இதே போன்ற அசம்பாவிதங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கூடியதுதான்.
உஷராக விசாரியுங்கள்
வீட்டுக் கட்டுமான நிறுவனங்கள் இந்த இன்சூரன்ஸ்களை எடுத்து வைத்திருந்தால், கட்டுமானத்தின் போது அடுக்குமாடிக் குடியிருப்பு எதிர்பாரமல் இடிந்து விழுந்தாலும் பெரும் பாதிப்பு இருக்காது. இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்றுப் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கட்டுமான நிறுவனத்தால் வழங்க முடியும். பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குபவர்கள் வீடுகளில், வீட்டைச் சுற்றி என்னென்ன வசதிகள் இருக்கின்றன, வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள வசதிகள், நிலத்தின் மதிப்பு ஆகியவற்றுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கிறார்கள்.
ஆனால், வீடு வாங்கும் கட்டுமான நிறுவனத்திடம் இதுபோன்ற இன்சூரன்ஸ்கள் எடுக்கபட்டுள்ளனவா எனத் தப்பித்தவறியும் விசாரிப்பதும் இல்லை.
இனியாவது அடுக்குமாடிக் குடியிப்பில் வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறுவனத்தின் சார்பாகக் கட்டுமானத்துக்கு எடுக்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ்கள் பற்றித் தீர விசாரிப்பது நல்லது. அதற்கு மவுலிவாக்கத்தில் வீடு வாங்க, கடன் வாங்கியவர்கள் ஒரு பாடமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் சரி!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago