சுய சம்பாத்திய சொத்தில் வாரிசுகளுக்கு உரிமையுண்டா?

By வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன்

எங்கள் தந்தைக்குச் சட்டபூர்வ வாரிசுகள் 8 பேர். என் தாய், மகன்கள் 5 பேர் மகள்கள் 2 பேர். என் தந்தை பிறந்து மூன்று ஆண்டுகளில் அவருடைய தந்தை (என் தாத்தா) இறந்துவிட்டார். அதன் பிறகு என் தந்தையின் தாய் சுயமாகச் சம்பாதித்து வீட்டுமனை வாங்கி வீடு கட்டி அனுபவித்த பிறகு என் தந்தைக்கு உயில் எழுதிப் பதிவுசெய்தார்.

எங்கள் பாட்டி (என் தந்தையின் தாய்) 2002-ல் காலமான பிறகு தந்தை அனுபவித்து வந்து அதன் பிறகு அவர் தன் வாழ்நாளில் 19.12.2006-ல் உயில் எழுதிப் பதிவுசெய்தார். என் தந்தையும் 2008-ல் இறந்துவிட்டார். அவர் எழுதிய உயிலில் மூன்று ஆண் வாரிசுகளுக்கு மட்டும் சொத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார். ஒரு ஆண் வாரிசுக்கு தானசெட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். பிற வாரிசுகளான என் தாய்க்கும், எனக்கும், என் தங்கைகள் இருவருக்கும் எந்த உரிமையும் சொத்தில் தரப்படவில்லை. மேற்காணும் உயில் நீதிமன்றம் மூலம் புரபேட் (probate) செய்யப்பட்டபோது நாங்கள் 4 பேரும் பங்கு கொடுப்பார்கள் என எண்ணி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டோம். இப்போது பங்கு தர, உயில் மூலம் பெற்ற 3 பேரும் தானசெட்டில்மெண்ட் மூலம் பெற்ற ஒருவரும் மறுக்கிறார்கள்.

எங்கள் தந்தையின் தாய் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் எங்கள் நால்வருக்கும் சட்டப்படி உரிமையில்லையா? பாட்டியின் சொத்தில் மருமகள், பேரன், பேத்திகள் உரிமை கோர முடியுமா? உயில் மூலம் பெற்ற சொத்துக்கு வீட்டு வரி, மின் இணைப்பு பட்டா ஆகியவற்றுக்குப் பெயர்மாற்றம் செய்துவிட்டனர். பங்கு கிடைக்காத நாங்கள் 4 பேரும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் 8-ல் 1பங்கு அனைவருக்கும் கிடைக்க நீதிமன்றம் உத்தரவிடுமா?

- புகழேந்தி, திருவள்ளூர்

உங்கள் பாட்டி (அதாவது உங்கள் தந்தையின் தாயார்) தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டுமனை மற்றும் தனது சுய சம்பாத்தியத்தில் அந்த மனையின் மீது கட்டிய வீட்டைப் பொறுத்துத் தனது விருப்பம்போல் உயில் எழுதிவைக்க அவருக்குச் சட்டப்படி உரிமை உண்டு. ஆகையால் அவர் உங்கள் தந்தைக்கு எழுதிவைத்த உயில் சட்டப்படி செல்லத்தக்கது.

அதேபோல் உங்கள் தந்தைக்கு அவருடைய தாயார் எழுதி வைத்த உயில் மூலம் வந்த சொத்தைப் பொறுத்துத் தனது விருப்பம்போல் உயில் எழுதிவைக்க உங்கள் தந்தைக்கும் சட்டப்படி உரிமை உண்டு. ஆகையால் உங்கள் தந்தை அந்தச் சொத்தைப் பொறுத்து தனது 8 வாரிசுகளில் 3 பேருக்கு மட்டும் எழுதிவைத்த உயிலும் ஒருவருக்கு மட்டும் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டும் சட்டப்படி செல்லத்தக்கதுதான். உங்கள் பாட்டி எழுதிவைத்த உயில் புரொபேட் (PROBATE) செய்யப்பட்டுவிட்டதா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் பாட்டி எழுதிய உயிலும் புரொபேட் (PROBATE) செய்யப்பட்டு விட்டது என்று வைத்துக்கொண்டால், உங்கள் தந்தையின் உயிலும் புரொபேட் (PROBATE) செய்யப்பட்டுவிட்ட நிலையில் உங்கள் தந்தையின் பிற வாரிசுகள் (அதாவது சொத்தில் பங்கு கிடைக்காத 4 பேருக்கும்) அந்தச் சொத்தில் சட்டப்படி எந்த உரிமையும் கோர வழியில்லை. உங்கள் பாட்டி தனது சுய சம்பாத்தியத்தில் கிரயம் பெற்ற சொத்தில் அவரது மருமகள் மற்றும் பேரன் பேத்திகள் உரிமை கோர முடியாது. பங்கு கிடைக்காத நீங்கள் 4 பேரும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாலும் உங்களுக்குப் பங்கு கிடைக்கச் சட்டத்தில் வழியில்லை.

ஒரு மனையை 2-ஆகப் பிரித்து உட்புறம் இருக்கும் பகுதியில் வீடு கட்டி, அதை எங்கள் நண்பரிடம் விற்றுள்ளார்கள். அந்த வீட்டுக்குப் பாதை இல்லாத காரணத்தால் முன் பகுதியில் இருக்கும் மனையில் ஒரு பகுதியைப் பாதையாகப் பிரித்துத் தனியாகப் பத்திரம் பதிவுசெய்து எங்கள் நண்பர் முதல் நபரிடமிருந்து தனியாக வாங்கியுள்ளார்.

அந்தப் பாதையுடன் சேர்த்து எங்கள் நண்பர் எங்களிடம் விற்றுவிட்டார். ஆனால் அந்த முன் பகுதியில் இருக்கும் மனையை வேறு ஒருவரிடம் அந்த முதல் நபர் எங்களுக்கு உள்ள பாதையுடன் சேர்த்து விற்றுவிட்டார். எங்கள் நண்பர் பத்திரம் பதிவு பெறப்பட்டது 2006-ல். நாங்கள் வாங்கியது 2010-ல். அந்த முன் பகுதி விற்கப்பட்டது 2009-ல். இப்போது அந்த முன் பகுதியை நாங்கள் எப்படி மீட்பது?

- சி.வி.உதயகுமார்.

உங்கள் நண்பர் வீட்டுடன் கூடிய பின்பகுதி மனையை முதல் நபரிடமிருந்து கிரயம் பெற்ற தேதியையும் மற்றும் முன்பகுதி மனையில் பாதையை மட்டும் உங்கள் நண்பர் முதல் நபரிடம் இருந்து கிரயம் பெற்ற தேதியையும் நீங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. மேற்படி இரண்டு கிரயப் பத்திரங்களுமே, முதல் நபர் வேறு ஒருவருக்கு முன்பகுதி மனை முழுவதையும் (உங்கள் நண்பருக்கு விற்றுள்ள பாதை உட்பட) கிரயம் செய்த தேதிக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்டிருந்தால் உங்கள் நண்பர் உங்களுக்கு 2010 -ம் ஆண்டு கொடுத்த கிரயப் பத்திரம் சட்டப்படி செல்லத்தக்கதாகும்.

அவ்வாறான சூழ்நிலையில் நீங்களே வீட்டுடன் கூடிய பின்பகுதி மனை மற்றும் முன்பகுதி மனையிலுள்ள பாதை ஆகியவற்றுக்குச் சட்டபூர்வமான உரிமையாளர். முன்பகுதி மனையிலுள்ள பாதையின் சுவாதீனம் உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் மீட்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை முன்பகுதி மனையிலுள்ள பாதையின் சுவாதீனம் வேறு நபரிடம் (முன்பகுதி மனை முழுவதையும் இரண்டாவதாகக் கிரயம் பெற்ற நபரிடம்) இருந்தால் அவரிடமிருந்து பாதையின் சுவாதீனத்தைத் திரும்பப் பெறுவதற்குத் தாங்கள் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

எங்களுடைய தாத்தா 1957-ல் 22 செண்ட் நிலத்தை 13 வயது நிரம்பிய தன் மகனின் பெயரில் வாங்கினார். தற்சமயம் அந்த மகனுக்கு வயது 73. அந்த மகனுக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளோம். எங்கள் தந்தை அவருடைய ஒரே மகனான எனக்கு உயில் எழுத நினைக்கிறார். இந்தச் சொத்தின் மீது எங்களது தந்தைக்கு உயில் எழுத உரிமை உள்ளதா? எங்கள் தாத்தா சொத்தெனில் எங்கள் ஐவருக்கும் பங்களிக்க வேண்டுமா?

- அருள்சிவா, சென்னை

நீங்களே உங்கள் தாத்தா உங்கள் தந்தையின் 13-வது வயதில் உங்கள் தந்தை பெயரில் விலைக்கு வாங்கிய சொத்து என்று குறிப்பிட் டுள்ளீர்கள். இந்நிலையில் மேற்படி சொத்தின் உரிமை பத்திரமானது உங்கள் தந்தையின் பெயரில் இருந்தாலும் அது உங்கள் தந்தையின் சுய சம்பாத்திய சொத்து ஆகாது.

மேற்படி சொத்து உங்கள் தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்து என்றே சட்டப்படி எடுத்துக்கொள்ளப்படும். மேற்படி சொத்தைப் பொறுத்து உங்கள் தாத்தா எந்த ஒரு ஏற்பாடும் எழுதி வைக்கவில்லை என்று வைத்துக்கொண்டால், அந்தச் சொத்தைப் பொறுத்து உயில் எழுதி வைக்க உங்கள் தந்தைக்குச் சட்டப்படி உரிமையில்லை. ஆகவே அந்தச் சொத்தில் உங்கள் தந்தையின் வாரிசுகள் அனைவருக்கும் சட்டப்படி பங்கு உண்டு.

சொத்து, என் தாத்தாவின் தந்தையுடையது. என் தாத்தா கூடப் பிறந்தது மொத்தம் இருவர். அதில் ஒரு அண்ணன் மற்றும் தங்கை. இதில் என் தாத்தாவின் தங்கை இறந்துவிட்டார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. என் தாத்தாவின் அண்ணனுக்கு மூன்று பெண் பிள்ளைகள். என் தாத்தாவுக்கு நான்கு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் (என் தாய்) என மொத்தம் ஐந்து பிள்ளைகள்.

என் தாத்தா சில வருடம் முன் 100 ரூபாய்க்கு வீட்டை அடமானம் வைத்தார்கள். பின் அந்த வீட்டை தாத்தா 450 ரூபாய்க்கு என் பாட்டி பெயரில் திருப்பினார்கள். என் தாத்தா சிறிது காலத்தில் இறந்துவிட்டார். என் பாட்டியின் மகளான என் தாய்க்கு தான செட்டில்மெண்ட் மூலம் எழுதி கொடுத்துவிட்டார்.

என் தாய் என் தாத்தாவின் அண்ணன் பிள்ளைகளிடம் இருந்து பங்குகளை வாங்கிவிட்டார்கள். வீட்டுத் தீர்வை என் தாயின் பெயரில் மாற்றிவிட்டோம். இப்போது என் தாத்தாவின் வாரிசுகளான என் தாயின் கூடப் பிறந்தவர்களுக்குப் பங்குண்டா? அவர்கள் நீதிமன்றம் சென்றால் யார் பக்கம் தீர்ப்பு வரும்? (என் தாத்தாவின் அண்ணன் பிள்ளைகள் என் அம்மாவுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்கள். என் பாட்டி என் தாய்க்கு எழுதிக் கொடுத்துவிட்டார்கள்)

- முகமத் இஸ்ரத், உடன்குடி

உங்கள் தாத்தாவின் தந்தைக்கு அந்தச் சொத்து சுய சம்பாத்தியத்தில் கிரயம் பெறப்பட்டதன் மூலம் கிடைக்கப்பெற்ற சொத்தா அல்லது மூதாதையர் வழியில் கிடைக்கப்பெற்ற சொத்தா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை.

அது உங்கள் தாத்தாவின் தந்தைக்குச் சுய சம்பாத்தியத்தில் கிரயம் பெறப்பட்டதன் மூலம் கிடைக்கப்பெற்ற சொத்தாக இருந்து, அந்தச் சொத்தைப் பொறுத்து அவர் எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் காலமாகியிருந்தால், அந்தச் சொத்தில் உங்கள் தாத்தா, அவரது மூத்த சகோதரர் மற்றும் சகோதரிக்கு தலா மூன்றில் ஒரு பங்கு உண்டு. உங்கள் தாத்தாவின் சகோதரி வாரிசுகள் ஏதுமின்றிக் காலமாகியுள்ளதால், அந்தச் சொத்தில் உங்கள் தாத்தா மற்றும் அவருடைய மூத்த சகோதரர் இருவருக்கும் தலா இரண்டில் ஒரு பங்கு உண்டு. உங்கள் தாயாருக்குச் சாதகமாக உங்கள் தாத்தாவின் சகோதரரின் வாரிசுகள் எழுதிக்கொடுத்திருக்கும் விடுதலைப் பத்திரம் சட்டப்படி செல்லும்.

இருந்த போதிலும் உங்கள் தாத்தாவின் வாரிசுகள் அனைவருக்கும் கூட்டாக உரிமையுள்ள சொத்தைப் பொறுத்து உங்கள் பாட்டி உங்கள் தாயாருக்கு எழுதிக்கொடுத்துள்ள பத்திரம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. ஆகையால் உங்கள் தாத்தாவின் வாரிசுகள் (அதாவது உங்கள் தாயாரின் உடன் பிறந்த சகோதரர்கள்) தங்களுக்கு உரிமையான பங்குகளைக் கோரி நீதிமன்றத்திதை அணுகினால் சட்டப்படி அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்