நான் 1979-ல் இரு மனைகள் வாங்கினேன். என்னிடம் மனைகளை விற்றவர், எனக்குத் தெரியாமல் அவ்விரு மனைகளையும் வெவ்வேறு நபர்களுக்கு 1984-ல் கிரயம் செய்து கொடுத்துள்ளார். அவர்களும் அதை மறு கிரையம் செய்துள்ளனர். மேற்படி இரு மனைகளும் முள்வேலி போட்டு என் கைவசம் எனது பராமரிப்பில் உள்ளது. ஒரு மனை எனது பெயரில் பட்டா வழங்கப்பட்டு அதற்கான தீர்வையும் நான் செலுத்தி வருகிறேன்.
மற்றொரு மனை வாங்கியவர் காவல் துறையில் நில அபகரிப்பு புகார் செய்து அவருக்கு விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுள்ளார். இப்போதைய நிலையில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை எவ்வாறு ரத்து செய்வது என்பதற்கு வழிகாட்டும்படி வேண்டிக்கொள்கின்றேன்
- காசிராஜா
நீங்கள் குறிப்பிட்டுள்ள இரு மனைகளையும் 1979-ல் உங்களுக்கு விற்ற நபர் அதன் பிறகு அந்த மனைகளை வேறு எவருக்கும் விற்பனை செய்ய உரிமை இல்லை. அவ்வாறு அவர் விற்பனை செய்திருந்தாலும் அது சட்டப்படி செல்லாது. ஆகவே சட்டத்துக்குப் புறம்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரப் பதிவுகளை ரத்து செய்யக் கோரி 1908-ம் வருடம் இயற்றப்பட்ட பதிவுச் சட்டம் பிரிவு 82-ன் கீழ் பதிவுத் துறைக்கு மனு செய்தீர்களானால் அந்த மனுவானது அந்த மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு அனுப்பப்பட்டு, அந்தச் சட்டத்துக்குப் புறம்பாக இயற்றப்பட்டுள்ள பத்திரங்கள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் விசாரித்த பின்னர் உங்கள் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தால் மாவட்டப் பதிவாளரே (நிர்வாகம்), அந்தப் பத்திரங்கள் அனைத்தையும் ரத்து செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிடுவார். மேலும், இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாகப் பத்திரங்களைப் பதிவுசெய்யும் நபர்கள்மீது காவல் நிலையத்தில் குற்றப் புகார் கொடுத்து அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் பதிவுச் சட்டம் பிரிவு -83ன் கீழ் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
திருநெல்வேலியில் எனது தந்தைக்குச் சொந்தமான பூர்வீக வீட்டினை நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவுக்காகக் கைப்பற்றி இழப்பீட்டுத் தொகை வழங்கினர். எனது தந்தை அந்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து 1.5 செண்ட் இடம் ஒன்றினை வாங்கி ஒரு வீடு கட்டினார். எனக்கு தமக்கைகள் ஐவரும், அனைவருக்கும் மூத்த சகோதரர் ஒருவரும் உண்டு. நான் கடைசி மகன். எனது தந்தை, இவ்வீட்டினைப் பொறுத்தவரை யாதொரு உரிமைப் பாத்தியதையும் தனது வாரிசுகளுக்கு வழங்காமல் இறந்துவிட்டார். எனது அக்காக்களில் ஒருவருக்கு ஏனைய நான்கு சகோதரிகளும் மேற்கூறிய வீட்டினைக் கிரயம் செய்து கொடுத்துவிட்டனர்.
நானும் எனது அண்ணனும் இக்கிரயப் பத்திரத்தில் கையொப்பமிடவில்லை. சரியாக ஒரு மாதம் கழித்து மேற்கூறிய பத்திரம் மூலம் பெற்ற வீட்டினை அடைந்த எனது அக்கா தனது தங்கை ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டார். இறுதியாகப் கிரயம் பெற்றுக்கொண்ட சகோதரியின் கணவர் தான் கொடுக்கும் தொகையினைப் பெற்றுக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதித் தரக் கேட்டு என்னை மிரட்டுகிறார். இதற்கிடையில் எனது அண்ணன் ஒரு குறிப்பிட்ட தொகையினையப் பெற்றுக்கொண்டு பாக விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டார். நான் பிறந்ததிலிருந்து இவ்வீட்டில் 45 வருடங்களாக குடியிருந்து வருகிறேன்.
வீட்டுத் தீர்வையினையும் எனது தந்தையின் பெயரில் செலுத்திவருகிறேன். மின் கட்டணப் பதிவு எனது பெயரில் உள்ளது. எனக்குத் திருமணமாகி வயதுக்கு வந்த மகள் இருக்கும் நிலையில் இந்த சிறிய வீட்டினைத் தவிர எனக்குக் குடியிருக்க வேறு இடம் இல்லை. இந்நிலையில் இவ்வீட்டில் எனக்கு உரிமை உள்ளது என உரிமையியல் நீதீமன்றத்தில் ஆணை பெற இயலுமா என்பதைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- முருகேசன், திருநெல்வேலி.
பூர்வீகச் சொத்தினை நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்தியதால் கிடைக்கப்பெற்ற இழப்பீட்டுத் தொகையினைக் கொண்டு உங்கள் தந்தையார் நிலம் வாங்கி அதன் மீது வீடும் கட்டி, அதன் பிறகு அந்த வீட்டினைப் பொறுத்து எந்தவித ஏற்பாடும் செய்து வைக்காமல் காலமாகி விட்டதால், உங்கள் சகோதரர் மற்றும் சகோதரிகளைப் போலவே உங்களுக்கும் அந்த வீட்டில் சம உரிமை மற்றும் பங்கு உண்டு. ஆகையால் நீங்கள் தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தினை அணுகி அந்த வீட்டின் மீது உங்களுக்கு உள்ள உரிமையினை நிலை நாட்டிக்கொள்ளச் சட்டத்தில் இடமுண்டு.
என் பெயர் ராஜன். எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. என் தந்தை அவர் சுயமாகச் சம்பாதித்த சொத்துகளை (வீடு அமைந்துள்ள நிலம்) எனக்குக் கொடுக்க இருக்கிறார் (செட்டில்மெண்ட் பத்திரம்). ஆனால் என் அண்ணன் மற்றும் அவர் மனைவி தகராறு செய்கிறார்கள். ஆனால் என் தந்தை எனக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்கிறார். அப்படிக் கொடுத்தால் என் அண்ணன் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியுமா?
உங்கள் தந்தை சுயமாகச் சம்பாதித்த பணத்தினைக் கொண்டு வாங்கியுள்ள சொத்தினை அவர் யாருக்கு வேண்டுமானாலும் செட்டில்மெண்ட் செய்து வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. அதனால் மேற்படி சொத்தினை உங்கள் தந்தை உங்களுக்கு செட்டில்மெண்ட் செய்தால் அது சட்டப்படி செல்லும். உங்கள் அண்ணன் அதை எதிர்த்து வழக்கு தொடுத்தாலும் அந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது.
எனது பாட்டியின் பெயரில் அவருடைய தந்தை வழி சொத்துகள் மற்றும் கணவர் வழி சொத்துகளும் உள்ளன. தந்தை வழி சொத்துக்கான உயில் மட்டும்தான் கையில் உள்ளது. கணவர் வழி சொத்துக்கான உயில் ஆவணங்கள் கைவசம் இல்லை. அதைப் பதிவுசெய்த தேதியும் தெரியாது. அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கண்டறிய முடியுமா? அதைக் கண்டறிய முடியாமல் போனால் இரண்டு உயில்களையும் ஒரே நேரத்தில் ரத்து செய்ய என்ன வழி?
இரண்டு உயில்களும் யாரால் எழுதப்பட்டுள்ளன, உயில்களை எழுதியவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா மற்றும் இரண்டு உயில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பன போன்ற விவரங்களைத் தாங்கள் குறிப்பிடவில்லை. பதிவு செய்யப்பட்டுள்ள உயில்களை பொறுத்தவரை சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்து உயில் ஆவணங்களின் விவரங்களைக் கண்டறிய முடியாது. உயில் எழுதி வைத்துள்ள நபர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர் அதற்கு முன்பு எழுதிய அனைத்து உயில்களையும் ஒரே ரத்துப் பத்திரத்தின் மூலம் ரத்து செய்யச் சட்டத்தில் இடமுண்டு.
நான் என் பெரியப்பாவிடம் 2005-ம் ஆண்டு 15 சென்ட் இடம் வாங்கினேன். அதில் வீடும் கட்டி வசித்துவருகிறேன். அந்த இடம் தாத்தா சொத்திலிருந்து வாங்கியது. எனது பெரியப்பா பெயரில் பாகப் பிரிவினை செய்யவில்லை. ஆனால் 37 வருடத்துக்கு எனது பெரியப்பா அங்கே வசித்தார். இப்போது எனது இன்னொரு பெரியப்பா மகன் நான் கிரயம் செய்த இடம் செல்லாது என்று பிரச்சினை செய்கிறார். என் பெயரில் பட்டாவும் உள்ளது.
- சி.நஞ்சப்பா, கோபிசெட்டிபாளையம்
நீங்கள் உங்கள் பெரியப்பாவிடமிருந்து 2005-ம் ஆண்டு கிரையம் பெற்ற 15 செண்ட் நிலத்தினைப் பொறுத்தவரை, அது உங்கள் தாத்தாவுக்குப் பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தாகவோ அல்லது அது உங்கள் தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தாகவே இருந்து அவர் எந்த வித ஏற்பாடும் செய்து வைக்காமல் காலமாகியிருந்தாலோ, அந்தச் சொத்தில் உங்கள் தாத்தாவின் வம்சாவளியினர் அனைவருக்குமே அந்தச் சொத்தில் பங்கு உண்டு. ஆகவே உங்கள் பெரியப்பாவின் அனுபவத்தில் இருந்து வந்த அவரது பூர்வீகச் சொத்தினை உங்கள் பெரியப்பாவிடம் இருந்து மட்டும் நீங்கள் பெற்றுள்ள கிரையப் பத்திரம் சட்டப்படி செல்லாது. நீங்கள் உங்கள் தாத்தாவின் வம்சாவளியினர் அனைவரிடம் இருந்தும் தகுந்த இசைவு அளிக்கும் பத்திரம் (RATIFICATION DEED) எழுதிப் பதிவுசெய்துகொண்டால் மட்டுமே அந்தச் சொத்து சட்டப்படி உங்களுக்கு உரிமையானதாகும்...
நான் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 1964-65-ல் என் அப்பாவுக்கு அரசு 5 ஏக்கர் புஞ்சை நிலத்தைக் கொடுத்தது. அப்போது எனக்கு வயது 16. பிறகு 1994-ல் என் அப்பாவை மிரட்டியா என்று எனக்கு தெரியாது, ஆனால் என் சித்தப்பா மகளுக்குச் சாதகமாகப் பத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்போது எனக்கு வயது 40. நான் ஒரு பெண்தான். வேறு வாரிசு யாரும் இல்லை. பட்டா மட்டும் மாறவில்லை, மற்ற வருவாய் துறை ஆவணங்கள் மாற்றபட்டுள்ளன. சொத்தை மீட்கலாமா? எப்படி மீட்பது?
- வைரம் கண்ணன்
உங்கள் தந்தைக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் புஞ்சை நிலத்தை உங்கள் அப்பா உங்கள் சித்தப்பா மகளுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பத்திரம் உங்கள் அப்பாவை மிரட்டிப் பதிவுசெய்யப்பட்டிருந்தால் உங்கள் அப்பா உடனடியாக அவர்கள் மீது தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில் அந்தச் சொத்தினை நீங்கள் உங்கள் சித்தப்பா மகளிடமிருந்து மீட்கச் சட்டத்தில் இடமில்லை.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago