என்னுடைய தந்தையின் பேரில் ஒரு வீடு (3 செண்ட்) உள்ளது. இந்தச் சொத்து எங்கள் தாத்தா சம்பாதித்தது. அவர் என் தந்தைக்கு எழுதிவைத்தார். இப்போது என் தாத்தா, தந்தை இருவருமே காலமாகிவிட்டனர். என் தந்தை 8 மாதங்களுக்கு முன்னால் இறந்தார். என் தந்தைக்கு இரு தாரம். மூத்த தாரம் காலமான பிறகு என் அம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இதில் மூத்த தாரத்தின் மூலம் ஒரு பெண் உண்டு. என் அம்மாவுக்கு இரு குழந்தைகள்; நானும் என் அக்காவும். மூத்த தாரத்தின் மகளாக இருந்தாலும் நாங்கள் ஒருதாய் வயிற்றின் பிள்ளைகளாகவே வளர்ந்தோம். இப்போது மூத்த தாரத்தின் மகளான என் அக்கா சொத்தின் 50 சதவீதம் பங்கு தனக்கு மட்டும் வேண்டும் எனக் கேட்கிறார். மீதி 50 சதவீதம் பங்கை நானும் என் அக்காவும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். இது சரியா? இம்மாதிரி இரு திருமணங்கள் நடந்த குடுமப்த்தில் சொத்து பிரிப்பதில் சட்ட நடைமுறை என்ன?
- சரவணன், கோபிச்செட்டிப்பாளையம்
ஓர் ஆண் தன் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சூழ்நிலையில் அவரது இரண்டாம் திருமணம் சட்டப்படி செல்லாது. அவருடைய இரண்டாம் மனைவிக்குச் சட்டப்படி மனைவி அந்தஸ்து கிடையாது. ஆகையால் இரண்டாம் மனைவிக்குத் தன் கணவர் இறந்த பிறகு, கணவரது மூதாதையர் சொத்தில் சட்டப்படி எந்தவித உரிமையும் இல்லை. ஆனால் சட்டப்படி செல்லாத இரண்டாம் திருமணம் மூலம் அந்த ஆணுக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே சட்டப்படி அந்த ஆணின் வாரிசுகள்தான். அந்தக் குழந்தைகள் அனைவருக்குமே தங்கள் தந்தையின் மூதாதையர் சொத்தில் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் ஓர் ஆண் தன் முதல் மனைவி இறந்த பிறகோ அல்லது அவரது முதல் திருமணம் சட்டப்படி ரத்தாகிய பிறகோ இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அந்த இரண்டாம் திருமணம் சட்டப்படி செல்லும். அந்தப் பெண்ணுக்கு அவருடைய சட்டப்படியான மனைவி என்கிற அந்தஸ்தும் கிடைக்கும். ஆகையால் அவருக்குத் தன் கணவர் இறந்த பிறகு, கணவரின் மூதாதையர் சொத்தில் உரிமை வந்துவிடும். உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் உங்கள் தாயார் உங்கள் தந்தையின் சட்டப்படியான மனைவி. ஆகையால் உங்கள் தாயாருக்கும் உங்கள் தந்தையின் சொத்தில் உங்கள் தந்தையின் 3 குழந்தைகளுடன் சேர்த்து சம பங்கு (அதாவது 4-ல் ஒரு பங்கு) உண்டு. ஆக மொத்த சொத்தில் உங்கள் தாயாருக்கு 4-ல் ஒரு பங்கு, உங்களுக்கு 4-ல் ஒரு பங்கு, உங்கள் உடன் பிறந்த அக்காவுக்கு 4-ல் ஒரு பங்கு. உங்கள் தந்தையின் மூத்த தாரத்தின் மகளான உங்கள் அக்காவுக்கு 4-ல் ஒரு பங்கு உரிமை உண்டு. உங்கள் தந்தையின் மூத்த தாரத்தின் மகளான உங்கள் அக்காவுக்கு 2-ல் ஒரு பங்கு (50%) கேட்க சட்டப்படி உரிமை இல்லை.
நான் அரசுப் பணி ஓய்வுபெற்றவன். வயது 62. என் உடன் பிறந்தோர் ஏழு பேர். 5 ஆண்கள் 2 பெண்கள். 1958-ல் என் தந்தையின் தாய் அதாவது என்னுடைய பாட்டி தன் சுய சம்பாத்தியத்தில் மனை வாங்கிக் கட்டிய வீடு. என் பாட்டி தன் வாழ்நாளிலேயே அச்சொத்தைத் தன் மகனுக்கு அதாவது என் தந்தைக்கு 1998-ல் உயில் சாசனம் செய்து வைத்தார். அவர் 2002-ல் இறந்த பிறகு அச்சொத்தை என் தந்தை அனுபவித்து 2006-ல் நான் உள்ளிட்ட மூன்று மகன்களுக்கு மட்டும் உயில் எழுதிவைத்தார். இது சார்பதிவகத்தில் பதிவுசெய்யப்பட்டது. 2008-ல் என் தந்தை இறப்புக்குப்பின் நீதிமன்றம் மூலம் probate செய்யப்பட்ட பின் சொத்து வரி, மின் இணைப்பு, பட்டா ஆகியவற்றை மூவர் பெயரிலும் மாற்றி அனுபவித்துவருகிறோம். இதில் பாகம் கிடைக்காத பிற வாரிசுகள் சொத்தில் சட்டப்படி உரிமை கோர முடியுமா? அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் யாருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும்? - சு செங்குட்டுவன்
உங்கள் தந்தையின் தாய் தனது சுய சம்பாத்தியத்தில் மனை வாங்கிக் கட்டிய வீட்டை உங்கள் தந்தைக்கு உயில் எழுதி வைத்தது, சட்டப்படி செல்லும். உங்களது தந்தையும் தன் குழந்தைகளில் 3 பேர்களுக்கு மட்டும் உயில் எழுதி வைத்ததும் சட்டப்படி செல்லும். நீதிமன்றத்தால் மேற்படி உயில் probate-ம் செய்யப்பட்ட நிலையில் இதில் பாகம் கிடைக்காத பிற வாரிசுகள் சொத்தில் சட்டப்படி உரிமை கோர முடியாது. அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் உங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு கிடைக்கும்.
என் மனைவியின் தாத்தா வழி இடத்தை (மனைவியின் தாயாரின் தந்தை) விற்று என் மனைவியின் சகோதரருக்குக் கொடுத் துள்ளார் என் மாமியார். என் மனைவியிடம் எந்தக் கையெழுத்தும் பெறாமல் தாத்தா வழி சொத்தை விற்கவோ தானமாகக் கொடுக்கவோ என் மாமியாருக்கு உரிமை உண்டா? என் மனைவியின் கையெழுத்து இல்லாமல் மனைவியின் சகோதரருக்கு மட்டும் சிறிது பாகம் பிரித்துக் கொடுத்து அதை விற்பனை செய்துள்ளார். இது சட்டப்படி செல்லுமா? - குமார்
உங்கள் மனைவியின் தாய்வழி தாத்தாவின் சொத்து என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது அவரது சுய சம்பாத்திய சொத்தா அல்லது அவருக்கு மூதாதையரிடமிருந்து கிடைக்கப்பெற்ற சொத்தா என்று குறிப்பிடவில்லை. உங்கள் மனைவியின் தாய்வழி தாத்தா உயில் அல்லது செட்டில்மெண்ட் எழுதிக்கொடுத்ததன் மூலம் உங்கள் மாமியாருக்கு அந்தச் சொத்து கிடைக்கப்பெற்றதா அல்லது உங்கள் மனைவியின் தாய்வழி தாத்தா சொத்தைப் பொறுத்து எந்த ஓர் ஏற்பாடும் செய்து வைக்காமல் காலமானாரா என்றும் குறிப்பிடவில்லை. உங்கள் மனைவியின் தாய்வழி தாத்தாவின் சொத்தைப் பொறுத்து அவர் எந்த வித ஏற்பாடும் செய்து வைக்காமல் காலமானார் என்று வைத்துக்கொண்டால், அந்தச் சொத்தை உங்கள் மாமியார் தன் வாரிசுகளின் சம்மதம் இல்லாமல், வேறு யாருக்கும் தானமாகக் கொடுக்கவோ அல்லது விற்பனை செய்யவோ சட்டப்படி உரிமை இல்லை. அவ்வாறு விற்பனை செய்திருந்தால் அது சட்டப்படி செல்லாது.
எங்கள் தாய் தந்தை இறந்துவிட்டார்கள். எங்கள் தந்தையின் தாய் தந்தையும் இறந்துவிட்டார்கள். எங்கள் தந்தைக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. எங்கள் தந்தைக்கு 5 செண்ட் நிலம் உள்ளது. எங்கள் பெற்றோருக்கு நாங்கள் 4 குழந்தைகள். எங்கள் நால்வருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில் அண்ணன் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவியும் இறந்துவிட்டார். அவருக்கு 2 ஆண் மக்கள் இருக்கிறார்கள். இந்த 5 செண்ட் இடத்தில் நாங்கள் 3 பேர் வசித்து வருகிறோம். இதை எவ்வாறு பாகப்பிரிவினை செய்து கொள்வது?
- நாகலிங்கம், சென்னை.
உங்கள் தாயார் தற்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை நீங்கள் குறிப்பிட வில்லை. உங்கள் தாயார் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அந்த 5 செண்ட் இடமானது, 5 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தால், உங்கள் தந்தையின் வாரிசுகளான நீங்கள் 5 பேரும் (உங்கள் தாயார் மற்றும் உங்கள் அண்ணன் காலமாகிவிட்டதால் அவரது வாரிசுகள் உட்பட) தலா 1 செண்ட் வரும்படி பிரித்துக்கொள்ளலாம். அவ்வாறு பிரித்துக்கொள்ளும் வகையில் அந்த இடம் அமையவில்லை எனில் அதை உங்களில் ஒருவருக்கோ வெளி நபருக்கோ விற்று, அதில் வரும் பணத்தை 5 வாரிசுகளும் தலா 5-ல் ஒரு பங்கு எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதாவது உங்கள் தாயாருக்கு ஒரு பங்கு, உங்கள் மூவருக்கும் தலா ஒரு பங்கு, உங்கள் அண்ணனின் வாரிசுகள் அனைவருக்கும் சேர்ந்து ஒரு பங்கு (உங்கள் அண்ணனின் வாரிசுகளில் உங்கள் தாயாரும் அடங்குவார்).
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார். கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
sonthaveedu@thehindutamil.co.in
தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
50 mins ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago