ஓங்கி வளரும் ஓ.எம்.ஆர். சாலை

By ஜெய்

தென் சென்னைப் பகுதியான பெருங்குடியிலிருந்து மாமல்லபுரம் வரை நீண்டிருக்கும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR Road) ‘ராஜீவ் காந்தி சாலை’ என்ற பெயருடன் புதுப் பொலிவு பெற்றுள்ளது. சாலையில் நுழைவிலேயே ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கொடிகட்டிக் காற்றில் சிறகடிக்கின்றன. பத்தாண்டுக்கு முன்பு வரை பரபரப்பின்றிச் சோர்ந்திருந்த சாலையில் இன்று இருபக்கங்களிலும் கடைகள், ஷாப்பிங் மால்கள், உணவு விடுதிகள், என எங்கு நோக்கினும் கட்டிடங்களாகக் காட்சி தருகின்றன.

குடியிருப்புக்கான கட்டிடப் பணிகளைச் சாலையில் இரு பக்கங்களிலும் பார்க்க முடிகிறது. சோழிங்கநல்லூர் வரை முடிவில்லாத கட்டிடங்களின் தொடர்ச்சி. இடையிடையே கடைகள், ஷாப்பிங் மால்களுக்கான கட்டிடப் பணிகளும் நடந்துவருகின்றன.

கிட்டத்தட்ட 44 கிலோ மீட்டர் நீண்டிருக்கும் இந்தச் சாலைதான் சென்னை நகர ரியல் எஸ்டேட்டின் வளம் மிக்க பகுதி. சமீபத்தில் வெளியான ‘நைட் ஃப்ராங் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவன’ அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகிறது. முடிவடைந்த இந்த அரையாண்டில் சென்னையில் கட்டிமுடிக்கப்பட்ட மொத்த குடியிருப்புத் திட்டங்களின் எண்ணிக்கை 1,01,212 எனவும் அதில் 66 சதவீத வீடுகள் தென்சென்னையில்தான் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாகப் பழைய மகாபலிபுரம் சாலைப் (ஓஎம்ஆர் சாலை) பகுதியில்தான் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக அறிக்கை சொல்கிறது. ஓஎம்ஆர் சாலையின் இருபக்கங்களிலும் முழு வேகத்தில் நடந்து வரும் சென்னையின் முக்கியமான கட்டிட நிறுவனங்கள் கட்டிடப் பணிகள் இதற்குச் சாட்சியாக இருக்கின்றன.

பெருங்குடி - கேளம்பாக்கம்

பெருங்குடியில் தொடங்கி, மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, நாவலூர், ஏகாட்டூர், படூர், கேளம்பாக்கத்தைத் தாண்டியும் கட்டிடங்கள் நீள்கின்றன. இதில் பெருங்குடிப் பகுதியில் இருந்தே புதிய குடியிருப்புகளுக்கான கட்டிடப் பணிகளைப் பார்க்க முடிகிறது. கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் விளம்பரப் பலகையுடன் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன.

அதற்கு அடுத்து சோழிங்கநல்லூர் வரை கட்டிடப் பணிகளைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இவற்றுக்கு அடுத்தபடியாக கேளம்பாக்கம் பகுதியில் அதிகமான குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்கு கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்டமான குடியிருப்புகள் வண்ணம் அடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன. கேளம்பாக்கம் தாண்டியும் சில பகுதிகளில் ராட்சத இயந்திரங்களுடன் புதிய கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

தனித் தனியான வீடுகளைப் பெருங்குடிப் பகுதியிலும் அதற்கடுத்து கந்தன்சாவடி, காரப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. பிறகு கேளம்பாக்கம் பகுதியில் பார்க்க முடிகிறது. மற்ற பகுதிகள் முழுக்க அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல விதங்களைப் பார்க்க முடிகிறது. நான்கு மாடிவரை உள்ள வீடுகள், பல்லடுக்கு கொண்ட வீடுகள் எனப் பல பட்ஜெட்டுகளில் வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

கேளம்பாக்கம் பகுதியில்தான் நடுத்தர மக்களைக் கவரும் வகையில் பல வகையான திட்டங்கள் உள்ளன. மலிவு விலை குடியிருப்புகளின் விளம்பரப் பலகைகள் அங்கு அதிகமாக வைக்கப்பட்டுள்ளன. விலையைப் பொருத்தமட்டில் ஓஎம்ஆர்பகுதியில் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரை இடத்தைப் பொறுத்து விற்பனைக்கு உள்ளன. தனியான வீடுகள் அதிகம் இந்தப் பகுதியில் கட்டப்படுவதில்லை என்பதால் நில விற்பனை அதிக அளவில் இல்லை.

வளர்ச்சிக்கான காரணங்கள்

ஓஎம்ஆர்சாலையின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் அங்கு விஸ்வரூபமெடுத்துள்ள மென்பொருள் நிறுவனங்கள். இன்ஃபோசிஸ், டாட்டா கன்சல்டன்சி, பொலாரீஸ் உள்ளிட்ட பல பெரிய, சிறிய மென்பொருள் நிறுவனங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன. சிறுசேரியில் தொழில்நுட்ப பூங்காவும் தொடங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது வங்கிச் சேவை நிறுவனங்கள், காப்பீடு, பொறியியல் நிறுவனங்களும் இந்தப் பகுதியில் தங்கள் அலுவல கங்களைத் திறந்துள்ளன. இதனால் இந்தப் பகுதியில் பணியாற்றுபவர்களுக்கான வீட்டுத் தேவை மிக அதிகம்.

இந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டே இங்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் இன்றைக்குச் சென்னையின் பல பகுதிகளில் உள்ள மக்களின் விருப்பமாகவும் ஓஎம்ஆர்பகுதி மாறிவிட்டது. சென்னையின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இங்குச் சுற்றுச் சூழல் அமைதியாகவும் தூய்மையாகவும் உள்ளதுதான் அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தற்போது தென் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்துவரும் மேற்குச் சென்னைப் பகுதியுடன் ஒப்பிடும்போது ஓஎம்ஆர்பகுதி புழுதி மாசற்ற பகுதி.

மேலும் சத்தியபாமா பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஜேப்பியார் பொறியில் கல்லூரி, ஜோசப் கல்லூரி, ஆனந்த் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட பல கல்லூரிகள் இந்தச் சாலையில் அமைந்துள்ளன. பத்மா ஆதர்ஷ் பள்ளி, லிட்டில் ஏஞ்சல் பள்ளி, ப்ரதர்ஹுட் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும், பிரிட்டிஷ் பள்ளி, கேட்வே பள்ளி உள்ளிட்ட இண்டர்நேஷனல் பள்ளிகளும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன. அதுபோல அப்போலோ, செட்டிநாடு மருத்துவமனைகளும் இந்தப் பகுதியிலேயே அமைந்துள்ளன.

இவை எல்லாம் இப்பகுதியின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கான காரணங்களாகும். வேலை பார்ப்பவர்கள், மாணவர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் இங்கு வீட்டு வாடகை தொழிலும் லாபகரமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதனால் சென்னையின் துணை நகரத்தைப் போல உருவாகிவரும் இந்தப் பகுதியில் மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, கல்வி போன்ற பொதுத் தேவைகள் பத்துக்கு 9 புள்ளிகள் இருப்பதாக இந்தியா ப்ராபர்டி டாட் காம் அறிக்கை சொல்கிறது.

படங்கள்: ஜெய்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

45 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்