வடபழனியில் ஒரு கிரவுண்ட் 5 ஆயிரம்

By நா.கிருஷ்ணமூர்த்தி

எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். வாடகை வீடு. மயிலாப்பூரில் இரண்டு வீடுகள் மாறி 1970-ல் ஹாமில்டன் பாலம் அருகில் மூன்றாவதாக ஒரு வீட்டில் இருக்கும்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

ஒருநாள் காலையில் வாசல் பக்கத்தில் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், “தம்பி காபி சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் வருகிறீர்களா?” எனக் கூப்பிட்டார். எனக்கு எதற்காகக் கூப்பிடுகிறார் எனக் குழப்பம்.

வீட்டில் தம்பிகள், தங்கைகள் எனப் பெரிய குடும்பம் எங்களுடையது. அதனால் வீட்டைக் காலிசெய்யச் சொல்வாரோ என நினைத்தேன்.

ஆனால் நல்லவிதமாக அப்படியேதும் இல்லை. அப்போது அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்தார். “ஒரு பிளாட்டை வாங்கிக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டார்.

நான் பதில் கூறத் தயங்கினேன். காரணங்கள் பல இருந்தன. தம்பிகள் படித்துக்கொண்டிருந்தனர். தங்கைகளுக்குத் திருமணம் ஆகவில்லை. நானும் தம்பியும் மட்டும்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தோம்.

இந்தச் சூழ்நிலையில் நிலம் வாங்குவதைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாது. என்னுடைய இந்த நிலை அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் என் பதிலுக்குக் காத்திராமல் என்னை வலுக்கட்டாயமாக அவர் காரிலேயே அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

ஆற்காடு சாலையில் பரணி ஸ்டுடியோவை அடுத்து இன்றைய ஆவிச்சி மேல்நிலைப் பள்ளிக்கு நேர் எதிரில் உள்ளே அப்போது மாந்தோப்பு இருந்தது. அதற்குள்தான் மரங்கள் வெட்டப்பட்டு பிளாட்டுகள் பிரிக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான சூழ்நிலை.

காற்றும் பிரமாதமாக வீசிக்கொண்டிருந்தது. எனக்குக் காண்பிக்கப்பட்ட ப்ளாட் தெற்கு பார்த்து இருந்தது. ப்ளாட்டின் முன்பக்கத்தில் 20 அடி விட்டத்தில் கிணறு இருந்தது. மாமரங்களுக்கு நீர் இறைப்பதற்காக வெட்டப்பட்ட கிணறு.

ஆறேழு அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடந்தது. அங்கிருந்த வாட்ச்மேன் தண்ணீரை இரைத்துக் குடிக்கக் கொடுத்தார். கல் கண்டாக இனித்தது. தண்ணீரும் பார்ப்பதற்குப் ஸ்படிகமாகத் தெரிந்தது. அதுவரை ப்ளாட்டின் விலை என்னவென்று அவர் சொல்லவில்லை. “இதுதான் கடைசி ப்ளாட். எல்லாம் விற்றுவிட்டன. இதைத் தம்பிக்குத் தரளாம் என்றுதான்” என மெதுவாக ஆரம்பித்தார். ப்ளாட்டின் விலை மொத்தம் ஆறாயிரம். அதில் ஆயிரம் தள்ளுபடி போக ஐந்தாயிரம் தந்தால் போதும் என்றார்.

பத்திரச் செலவு தனி என்றார். நான் தயங்கினேன். ஐயாயிரம் ரூபாய்க்கு நான் எங்கு போவது, எப்படிப் புரட்டுவது? மலைப்பாக இருந்தது.

“நாளைக்கு நல்லநாளாக இருக்கிறது. அட்வான்ஸைக் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுங்க தம்பி! அப்புறம் ஆபீஸ் லோனுக்கு அப்ளௌ செய்துடுங்க... பார்த்துக்கலாம்” என்று அவர் பாட்டு ‘மளமள’வென்று கூறிவிட்டுக் காரைக் கிளப்பிக் கூட்டிவந்துவிட்டார்.

நான் அப்பாவிடம் எல்லாவற்றையும் கூறினேன். தனக்கு விருப்பமில்லை என்பதை அவர் சொல்லவில்லை. ஆனால் அவர் முகமே அதைக் காட்டிக் கொடுத்தது.

ஊர்க்கோடியில் போய் வாங்கி என்ன செய்வது என்றார். மயிலாப்பூரில் அரை கிரவுண்ட் கிடைத்தாலும் வாங்கலாம் என்றார்.

ஏதோ தைரியத்தில் மறுநாள் காலை “101 ரூபாயை” வீட்டுக்காரரிடம் அட்வான்ஸ் என நீட்டினேன். அவர் பெரிதாகச் சிரித்துவிட்டு, “அட்வான்ஸ் என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாய்” என்றார்.

ஆனாலும் அவர் என் முழுப்பெயர், வயது, உத்தியோகம் பற்றிய முழு விவரங்கள், அப்பா பெயர் ஆகியவற்றை எழுதி வாங்கிக்கொண்டு இரண்டொரு நாள்களில் மீதி அட்வான்ஸ் தொகையைத் தந்துவிடுமாறு கூறினார்.

எப்படியோ நண்பர்கள், சொஸைட்டி லோன் எனப் புரட்டி அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டேன். அவரும் அக்ரிமெண்டைத் தந்துவிட்டார். மூலப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், பட்டா, அடங்கல் அது இது எனக் கத்தைக் காகிதங்களோடு பிளாட் லோனுக்காக ஆபீசில் விண்ணப்பித்துவிட்டேன்.

இரண்டு மாதத்தில் என் அலுவலகத்தில் இருந்து வீடு கட்டுவதற்கு 12 ஆயிரமும் 3 ஆயிரமும் கிடைத்தது. ஒரு வழியாக பிளாட் பதிவும் முடிந்தது.

நான் பிளாட் வாங்கும்போது இப்போதுள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பெரியார் ரயில்வே மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டிற்கு இணங்கியே வாகனங்கள் செல்ல வேண்டும்.

ஆற்காடு சாலைக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிவரும். வடபழனியில் உள்ள ஸ்டுடியோக்களுக்குச் செல்லும் நடிகர், நடிகைகளின் வாகனங்களும் காத்துக் கிடக்கும். அவர்களைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் அப்போது காத்துக் கிடப்பார்கள்.

பேருந்துப் போக்குவரத்து என்பது வடபழனி வரைதான். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்ல ஜட்கா வண்டிதான். இல்லையெனில் நடராஜா வண்டிதான்.

என் இடத்திற்கு ஜட்கா வண்டியில்தான் செல்ல வேண்டும். இப்படித்தான் என் அப்பாவையும் ப்ளாட் பார்க்கக் கூட்டிப் போனேன். அவருக்கு இந்த ப்ளாட் வாங்குவதில் துளியும் விருப்பமில்லை.

ஆனால் ஒரு வழியாக விடாப் பிடியாக இருந்து ஓரளவு வீட்டைக் கட்டி அங்கேயே குடிபுகுந்தேன். முன்புறத்தில் இருந்த கிணற்றை மூடி, பின் புறத்தில் சிறிய கிணறு தோண்டினோம். அது இன்று வரை அதே சுவையுள்ள நீரைத் தந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு விஷயம். நான் குடியேறிய பிறகுதான் எங்கள் பகுதிக்கு ‘சத்யா கார்டன்’ எனப் பெயர் உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் நான் வாங்கிய இடத்தின் சொந்தக்காரர் மறைந்த முதல்வர் எம்.ஜிஆரின் அண்ணன் சக்கரபாணிதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்