வீடு என்பது வெறும் வசிப்பிடம் அல்ல; அது உறவுகளுடன் வாழ்வதற்கான இடம். தமிழகத்தில் வாழ்ந்த நம் முன்னோர் ஆதி முதலே வீடுகள் மீது உணர்வுபூர்வமான பிணைப்பு கொண்டிருந்தார்கள்.
வீடு வாங்க மனை பார்ப்பதிலிருந்து மனையை முடிவுசெய்து பூஜை போட்டு வீடு கட்டி, புதுமனை புகுவிழா நடத்திக் குடிபோவதுவரை அது ஓர் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
அதன் அத்தனைச் சிக்கல்களையும் கடந்து புதுமனைக்குள் குடிபோகும்போது கிடைக்கும் நிம்மதிக்காக, அவர்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். வீடு கட்ட மேற்கொள்ளும் பயணத்துடன் சேர்ந்ததுதான் வீடு.
அப்போதுதான் அது முழுமை பெறும். அப்படி முழுமை பெற்ற செட்டியார் வீடுகள் போன்ற பல வகை பாரம்பரிய வீடுகள் தமிழகத்தில் இருந்தன.
அந்தப் பாரம்பரிய வீடுகளின் மாடல்கள் சென்னைக்கருகே அமைந்திருக்கும் தஷின்சித்ராவில் நிர்மானிக்கப்பட்டுள்ளன. நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கைக்கான ஆதாரமாக அவை விளங்குகின்றன.
நாட்டுக்கோட்டை செட்டியார் இல்லம், காஞ்சிபுரத்து நெசவாளர் இல்லம், சாத்தனூர் வீடு, மாயவரத்தில் வாழ்ந்த விவசாயிகளின் வீடு, பாய் முடையும் தொழிலாளர்களின் வீடு, மண்பாண்டங்களை உருவாக்கித் தந்த குயவர்களின் வீடு, கூடை முடைபவர்களின் வீடு, சிரியன் கிறித்தவர்கள் வீடு எனப் பல வகை வீடுகள் உள்ளன.
செட்டியார் வீடுகள்
தமிழ்நாட்டின் பாரம்பரிய வீடுகளில் செட்டியார் வீடுகளுக்கு பிரதான இடம் உள்ளது. சென்னை தக்ஷின் சித்ராவில் 19-ம் நூற்றாண்டின் செட்டி நாட்டு வியாபாரியின் வீட்டின் மாடல் இடம்பெற்றுள்ளது.
காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்னும் இந்த வீடுகளைக் காண முடியும். வியாபார நிமித்தமாக உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தவர்கள் பர்மா தேக்கு, ஐரோப்பாவின் டைல்ஸ், முட்டை சுண்ணாம்புக் கலவை, இத்தாலியின் மார்பிள் ஆகியவற்றை வீடு கட்டப் பயன்படுத்தியுள்ளார்கள்.
தொடக்கத்தில் செட்டி நாட்டு வீடுகளில் களிமண்ணாலான செங்கல், மூங்கில், ஓலைக் கீற்று ஆகியவை தான் பயன்படுத்தப்பட்டுள்ளன மேலும் இவை மாடிகள் இன்றி தரைத் தளத்தை மட்டுமே கொண்டிருந்தன.
நாளாவட்டத்தில் வீட்டின் இரு புறங்களிலும் இரண்டு அடுக்குகளைக் கொண்ட சதுர வடிவக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உருவானது. இந்தக் கோபுரத்தின் கூரைக்கு டைல் பயன்படுத்தப்பட்டது.
இரண்டு தளங்களைக் கொண்ட வீடுகளையும் பிற்காலத்தில் கட்டிக்கொண்டனர். வீட்டின் முகப்பில் நீளமாகக் காணப்படும் திண்ணையும், ஆஜானுபாகுவான மரத் தூண்களும், அலங்கார வேலைப் பாடுகள் கொண்ட முகப்புக் கதவும் செட்டிநாட்டு வீடுகளுக்கு தனிக் கவனத்தை அளித்தன.
கூட்டுக் குடும்ப முறை வழக்கத்திற்கு உகந்த வீடாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டவை செட்டி நாட்டு வீடுகள்.
நெசவாளர்கள் வீடுகள்
காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் தங்களுக்கென பிரத்யேகமான வீடுகளை வடிவமைத்துக் கட்டியுள்ளனர்.
இதன் ஒரு மாடல் தக்ஷிணசித்ராவில் இடம்பெற்றுள்ளது. இவர்களது வீடுகள் நெசவுக்குப் பயன்படும் தறி அமைப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டன. வீட்டின் உள்ளுக்குள்ளே திறந்தவெளி முற்றம் அமைத்து, அதில் நெசவுக்குத் தேவையான நூல்களை பராமரிக்கப் பயன்படுத்துவார்கள்.
தொழிலையும் வீட்டிற்குள்ளேயே பார்த்துக்கொண்டதால் அதற்கேற்றார்போல் வீட்டையும் அமைத்துக்கொண்டது நெசவாளர் வீடுகளின் சிறப்பு.
விவசாயிகளின் வீடு
தஞ்சாவூர் பகுதிகளில் காணப்படும் விவசாயிகளின் வீடுகளின் திசை அவற்றைத் தனித்துக்காட்டியது. விவசாயிகளின் வீடுகள் பெரும்பாலும் வடக்குத் திசையை பார்த்து அமைக்கப்பட்டது. இதனால் பூஜை அறையை மேற்கு திசையில் இவர்கள் அமைத்துக்கொண்டார்கள்.
முன்பகுதியில் இருந்த அறைகளை தானியங்களைச் சேமித்துக்கொள்ளவும், உறங்கவும் பயன்படுத்திக்கொண்டார்கள். பசுக்கள் முதலான கால்நடைகளைப் பராமரிக்கும் தொழுவத்தை வீட்டின் பின்புறம் வைத்துக்கொண்டார்கள்.
குயவர் வீடு
திருவள்ளூர் மாவட்டத்தில் காணப்படும் குயவர் வீடுகளைப் போன்ற தோற்றம் கொண்ட குயவர் வீடும் தக்ஷிணசித்ராவில் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக குயவர்கள் வீடுகளும் நெசவாளர் வீடுகளைப் போலவே வசிப்பிடமும் தொழிலும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையிலேயே அமைக்கப்பட்டன. வீடு குடும்பம் வசிக்கும் வகையிலேயே இருந்தாலும் இரண்டு சகோதரர்கள் இங்கே குடும்பத்துடன் வசித்துவருகிறார்கள்.
இங்குள்ள வீட்டில் மண்பாண்டம் புனைவது பற்றிய விளக்கங்களை அளிக்க உதவியாக தனியாக ஷெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அக்ரஹாரம் தெருவின் வீடுகள்
திருநெல்வேலி மாவட்ட ஆம்பூரில் காணப்படும் அக்ரஹாரம் மாதிரியில் அமைந்த பிராமணர்களின் வீடுகளும் இங்கே உள்ளன. வரிசையான வீடுகள் கொண்ட தெருவின் இறுதியில் விஷ்ணு கோயில் ஒன்று உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படும் பிராமண வீடுகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சில வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. பொதுச்சுவர்களைக் கொண்டு, அடுத்தடுத்து அமையும் அகலம் குறைந்த நீளமான வீடுகள் என்பதே பிராமண வீடுகளின் பொதுத் தன்மையாக இருந்தது.
இது தவிர கூடை முடையும் தொழிலாளர்களின் கூரை வேய்ந்த குடிசை வீடுகளும் இங்கே காணப்படுகின்றன. களி மண் சுவர்களால் ஆன வீடு இது. வெவ்வேறு விதமான வீடுகளைக் கொண்ட வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
அவர்களிடையே பெரிய விரோதங்கள் எழவில்லை. ஆனால் இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியாகவே உள்ளன. பெரிய வேறுபாடுகள் இல்லை. தம்மிடம் இருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்றார்போல் வீடுகளை நவீனமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஒரே மாதியான அமைப்பைக் கொண்ட வீடுகளில் வசிக்கும் மனிதர்களிடம் ஒற்றுமை இருக்கிறதா என்றால் மவுனமே பதிலாகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago