எளிமையே அழகு

தனி வீடுகளைவிட இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் தனி வீடுகள் என்றால் முற்றத்திலோ கொல்லைப்புறத்திலோ செடிகொடிகள் வைத்து இளைப்பாறுவதற்கான இடம் இருக்கும். இட நெருக்கடியுள்ள நகரங்களில் இப்படி விசாலமான வீடு சாத்தியம் இல்லை. வீடு என்பது சிறு சிறு அறைகளைக் கொண்டதாகச் சுருங்கிவிட்டது.

இந்தச் சூழலில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் வசிப்பவர்கள் இளைப்பாறுவதற்கான வெளியை உருவாக்கித் தருவது பால்கனிதான். நகர நெருக்கடியில் சிக்கி வீடு திரும்பும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளுக்கு ஆசுவாசம் தருவதும் இந்தப் பால்கனிகள்தாம். ஆனால், வீட்டின் உட்புற வடிவமைப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பெரும்பாலானவர்கள் பால்கனி வடிவமைப்புக்குக் கொடுப்பதில்லை. பால்கனியை வடிவமைப்பைப் பெரிய செலவில்லாமல் வடிவமைப்பதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன.

elimai-2jpg

இட வசதி

பால்கனியின் இடத்தைப் பொறுத்தே அதன் வடிவமைப்பைத் திட்டமிட முடியும். உங்கள் வீட்டின் பால்கனியில் காஃபி மேசை, இரண்டு நாற்காலிகள் போடும் அளவுக்கு இட வசதியிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். பால்கனியில் சூரிய வெளிச்சம் இருக்கிறதா, பால்கனி தோட்டம் அமைப்பதற்கான வசதியிருக்கிறதா என்பதை இடத்தைப் பொறுத்து திட்டமிடுங்கள்.

அல்லது இவை எவற்றையும் அமைக்க முடியாத அளவுக்கு உங்கள் பால்கனி சிறியதாக இருக்கிறதா? பால்கனியை வடிவமைப்பதற்கு முன்னர், நீள, அகலத்தை அளந்துகொள்வது சரியானதாக இருக்கும். இது பால்கனிக்குத் தேவையான பொருட்கள், செடிகள் வாங்குவதற்கு உதவும்.

பால்கனி அமைப்பதற்கு முன்பு அது அமைய வேண்டிய இடத்தை முதலில் முடிவுசெய்துகொள்ள வேண்டும். பொதுவாக பால்கனி என்பது வீட்டின் வரவேற்பறையை ஒட்டி அமைவது நல்லது. பால்கனியை வீட்டின் வரவேற்பறையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்த முடியும். விருந்தினர்கள் வரும்போது அவர்களுடன் அளவளாவ இந்த பால்கனியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சற்றுப் பெரிய பால்கனியாக இருக்கும் பட்சத்தில் அதில் சிறு விருந்துகூட நடத்த முடியும். அதே நேரம் பால்கனியைப் படுக்கையறைக்குள் அமைத்தால் அது தனிப்பட்ட இடமாகவே இருக்கும்.

பால்கனியை உடற்பயிற்சிக் கூடமாகவும் பயன்படுத்தலாம். அந்தக் கருவிகள் வைத்துக்கொள்ள சிறு அலமாரி அமைக்கலாம். பால்கனிக் கூரையாக சூரிய மின் தகடுகளைப் பயன்படுத்தினால் அதன் மூலம் மின் சேமிப்பு கிடைக்கும்.

வண்ணங்கள்

பால்கனியை வடிவமைப்புக்கு முன்னர் அதன் நிறத்தைத் தீர்மானிப்பது அவசியம். எப்படியும் பால்கனியைச் செடிகளை வைத்து வடிவமைப்போம் என்பதால், பலவகையான பச்சை நிறச் செடி களை வைக்கலாம். இதனுடன் மர மேசை, நாற்காலிகளை அமைப்பது பால்கனியின் தோற்றத்தை மேம்படுத்தும். ஆனால், பால்கனியில் 2,3 வண்ணங்களுக்குமேல் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

elimai-3jpgright

செடிகள் வரிசை

பால்கனியின் வெளிப்புறத்தில் செடிகளை வரிசையாக வடி வமைப்பது இன்னொரு எளிமையான வழி. அத்துடன், செங்குத்து தோட்டம் அமைப்பதும் பால்கனிக்குப் பொருத்தமாக இருக்கும்.

வடிவமைப்பு

ஒருவேளை, உங்கள் பால்கனியின் வடிவமைப்பு சதுரமாகவோ செவ்வகமாகவோ இல்லாமல் ஒழுங்கற்று இருந்தால், அதை வைத்து வித்தியாசமான கோணத்தில் உங்கள் பால்கனியை வடிவமைக்கலாம். இந்த வகையான பால்கனியின் ஓரத்தில், ஊஞ்சல் நாற்காலியைப் பொருத்துவது ஏற்றதாக இருக்கும்.

இயற்கை

பால்கனியில் கூடுமானவரை இயற்கையான அம்சங்களைப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும். மூங்கில் நாற்காலி, ட்ரங்க் பெட்டி, செடிகள், கிளிஞ்சல்கள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கலாம். மரத்தாலான தரையும், சிறிய மீன்தொட்டி போன்றவையும் பால்கனிக்கு ஏற்றவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE