செலவைக் குறைக்கும் முன்னேற்பாடுகள்

By ஓவியா அர்ஜுன்

வீ

ட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துபார் என்பதற்கான காரணம் இரண்டும் அவ்வளவு எளிதானதல்ல என்று குறிப்பிடுவதற்குத்தான். சொல்வது எளிதாக இருக்கும், வேலையைத் தொடங்கியதும்தான் மலைபோல பிரச்சினைகள் வந்து முன் நிற்கும். அதைச் சமாளித்துத் தாண்டி வந்துவிட்டால் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ளலாம் என்பதே அனுபவசாலிகள் முன்வைக்கும் உண்மை.

அதிலும் வீடுகட்டும் வேலை தொடங்கிவிட்டால், அப்போதுதான் சின்னச் சின்ன தடங்கல்கள் முதற்கொண்டு, பெரிய பெரிய இடையூறுகள் வரை நம்முன் வந்து வரிசைகட்டி நிற்கும். இதற்கு எதற்கும் அசராமல் ஒவ்வொன்றையும் நிதானமாக எதிர்கொண்டு தாண்டிச் செல்லும் மனநிலை கட்டாயம் வேண்டும். அதாவது, வீடு கட்டுவதைக் கிட்டத்தட்ட தவம் மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் அந்தத் தவத்தைக் கலைத்துவிடக் கூடாது.

நம்மால் என்ன முடியும், எந்தெந்த வகையில் நமக்கு உதவிகள் கிடைக்கும் என எல்லாவகையிலும் யோசித்த பிறகே வீடு கட்டும் முடிவை எடுத்திருப்போம். எனவே, இந்தத் திட்டத்துக்குள் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் நமது சாமர்த்தியம்.

மனத் திருப்தியோடு ஒரு முழுநிறைவான வீட்டைக் கட்டிமுடிப்பதா கட்டும், அல்லது வாங்குவது என்றாலும் முதல் நாளிலிருந்து, கிரஹப்பிரவேசம் செய்வது வரை நமக்குத் தேவையான ஆதாரம் பணம். நமது கையில் எவ்வளவு உள்ளது, வெளியிலிருந்து எவ்வளவு திரட்ட முடியும், வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும், அதற்கான வழிமுறைகள் என்ன? என எல்லாவற்றையும் திட்டமிட வேண்டும்.

நமது மொத்த பட்ஜெட் எவ்வளவு என்ற தெளிவு கிடைத்தவுடன்தான் வேலையில் இறங்க வேண்டும். அல்லது எத்தனை சதுர அடியில் நமக்கு வீடு தேவைப்படும், அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு வேலையில் இறங்க வேண்டும். அது நம்மால் சமாளிக்கக்கூடிய வரம்புக்குள் இருக்க வேண்டும்.

வீடு கட்டுவதில் முதல்கட்டமான வேலை, வீட்டுக்கு வரைபடம். ஏனெனில், இதைக் கொண்டுதான் வங்கிக் கடனுக்கு முயல முடியும். வீட்டுக் கடன் வாங்காமல் வீடு கட்டுகிறோம் என்றாலும் வரைபடம்தான் முக்கியமான அடிப்படைத் தேவை.

தவிர வங்கிக் கடன், வரைபட அனுமதி போன்றவை கிடைத்து வீட்டு வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம். இந்த முன்னேற்பாடுகள்தாம் மளமளவென வேலைகளை முடிக்க உதவும். இல்லையென்றால் காலதாமதம் ஆகலாம். குறிப்பாக மின் இணைப்பும் தண்ணீருக்கான ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும்.

மின் இணைப்புக்கான நடைமுறைகள் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். மனைக்கு அருகிலேயே மின் கம்பங்கள் இருந்தால் அதிக செலவுகள் கிடையாது. உடனடியாக இணைப்பு எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அருகே மின் பாதைகள் இல்லாத இடமாக இருந்தால், நமது இடம் வரை மின் கம்பங்கள் நட்ட பிறகுதான் மின் இணைப்பு கிடைக்கும்.

இப்படி மின் கம்பங்கள் நடுவதற்கான தொகையை நாம்தான் முழுவதுமாகக் கட்ட வேண்டியிருக்கும். அந்தப் பகுதிக்கு மின் பாதை வரும்வரை காத்திருக்கலாம் என்றால் திட்டமிட்டபடி வேலையைத் தொடங்க முடியாது. ஆகவே, சில இடங்களில் இந்தச் சுமை நம்மைச் சார்ந்ததாகவே இருக்கும். இதில் நமது வசதி எப்படியுள்ளது என்பதைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

மின் இணைப்புக்கான விண்ணப்பத்தில் கட்டிட வரைபட அனுமதி வாங்கப்பட்டிருந்தால் அதில் ஒரு ஜெராக்ஸ் இணைப்பது நல்லது. மின் வாரிய ஊழியர்கள் வந்து பார்வையிட்டு, மின் இணைப்புக்கான முன் ஏற்பாடுகளை வலியுறுத்துவார்கள். அதற்கேற்ப நமது இடத்தில் மின் பெட்டியை அமைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தவிர, இதே நாட்களில் செய்ய வேண்டிய இன்னொரு வேலை கட்டிட வரைபட அனுமதியோடு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை அணுகி வீட்டு வரி என்ற வகைக்குள் நமது இடத்தைக் கொண்டுவர வேண்டும்.

அடுத்ததாக, தண்ணீர் வசதி ஏற்படுத்திக்கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். இது சம்பந்தப்பட்ட பகுதி சார்ந்து செலவு வைக்கும். சில இடங்களில் முப்பது அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும். சில இடங்களில் நூறு, இருநூறு அடிகள் கீழே செல்லலாம். ஆனால், எப்படி இருந்தாலும் நமக்கு என்று சொந்தமாக ஒரு போர்வெல் போட்டுக்கொள்ள வேண்டும். கட்டுமான வேலைகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், இந்த வேலையையும் முன்னமே முடித்துக்கொள்ள வேண்டும்.

நிலத்தடி நீர் இல்லாத இடமாக இருந்தால் கட்டுமான வேலைகளுக்குத் தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டும். அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆனால், வாய்ப்பிருக்கும் இடங்களில் போர்வெல் போட்டுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால், இவற்றில் முக்கியமானது ஒவ்வொரு விஷயத்திலும் எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறையாக இருக்க வேண்டும்.

வேலைகளில் சில விதிமீறல்கள் இருந்தால் அது நமக்குத் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கலாம். அல்லது வேலைகளை முடித்துக்கொண்டு போய் நின்றால், அனுமதிகள் கிடைப்பதற்கோ ஆவணங்கள் மாற்றுவதற்கோ காலதாமதம் ஆகும். தவிர வேறு வகைகளில் உங்களுக்குப் பண விரயம் வைக்கும். விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தால் சட்டரீதியாக நமக்குப் பாதுகாப்பு. வீடு கட்டுவதற்கு முன்பு இந்த முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டு இறங்கினால் மளமளவென வேலைகளை முடிக்கலாம்.செலவுகளைக் குறைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்