வீட்டை விற்பதில் வில்லங்கம்

By ஜி.எஸ்.எஸ்

ஒரு வீட்டை விற்பவர்கள் பல விஷயங்களைச் சொல்லி வாங்குபவர்களை ஏமாற்றுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வீட்டை வாங்குபவர்களும் வீட்டை விற்பவரை ஏமாற்றுவதும் உண்டு. அதிலும் நூதனமான ஒருவகை சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஒரு வீட்டை நீங்கள் 60 லட்ச ரூபாய்க்கு விற்கத் தீர்மானிக்கிறீர்கள். தெரிந்தவர்களிடமும் இது குறித்து அறிவிக்கிறீர்கள். அப்போது ஒருவர் வருகிறார். “எழுபது லட்சத்துக்கு உங்கள் வீட்டை எனக்கு விற்க முடியுமா?” எனக் கேட்கிறார்.

உங்களுக்கு எப்படியிருக்கும்? நீங்கள் கேட்க நினைத்ததைவிட ரூ. 10 லட்சம் அதிகம். இரண்டாம் கேள்விக்கு இடமே இல்லாமல் சம்மதிப்பீர்கள். உடனடியாக இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் துடிப்பீர்கள்.

முன்பணத் தொகையைக் கொடுக்கும் அந்த நபர் மீதித் தொகையைக் கொடுப்பதற்கு ஒரு மாதம் ஆகும் என்கிறார். நியாயம்தானே. இதன்படி ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு மாதத்துக்குப் பிறகும் மீதித் தொகையைக் கொடுக்காமல் இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை என்கிறார் வீட்டை வாங்குவதாகச் சென்னவர். “தவறில்லை. பெரிய தொகை ஆயிற்றே, புரட்டுவதில் கொஞ்சம் தாமதமாகி இருக்கலாம்” என நினைப்பீர்கள். உண்மையில் நியாயத்தைவிட, அவர் உங்களுக்கு அளிப்பதாகச் சொல்லியிருக்கும் பெரிய தொகை உங்கள் கண்களை மறைக்கும்.

வீட்டுக்கான வரிகள், பராமரிப்புச் செலவு, காப்பீடு எல்லாவற்றையும் நீங்களே தொடர்ந்து செலுத்திக் கொண்டிருப்பீர்கள். அந்த வீட்டில் குடியிருப்பவரையும் நீங்கள் காலி செய்யச் சொல்லியிருப்பீர்கள். இதனால் வீட்டு வாடகையும் நின்று போயிருக்கும்.

அந்த நிலையில் திடீரென்று ஒப்பந்தம் போட்டவர் ஒரு புது குண்டை வீசுகிறார். “நான் முன்பு ஒத்துக்கொண்டபடி அவ்வளவு தொகை கொடுக்க முடியாது. ரியல் எஸ்டேட் வேறு இறங்குமுகத்தில் இருக்கிறது. ஏற்கெனவே ஒரு லட்சம் தந்து விட்டேன். இன்னும் 59 லட்சம் ரூபாயை ஒரேடியாகச்  செலுத்தி விடுகிறேன். இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

உங்களுக்குக் கடுமையான மன உளைச்சல் உண்டாகிறது. வீட்டை அவருக்கு விற்றே ஆக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்றத்துக்குச் செல்வதாகவும் அவர் கூறகிறார். இதுவரை பார்த்திராத ரவுடித்தனமான மறுமுகத்தைக் காட்டுகிறார்.

எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கும் நீங்கள், அவர் கூறுவதற்கு ஒத்துக் கொள்வீர்கள். இந்தக் காலகட்டத்தில் அறுபத்தைந்து லட்சம்வரை தரத் தயாராக இருந்த சிலரையும் நீங்கள் நிராகரித்திருப்பீர்கள்.

தெரிந்தவர்களிடம் எல்லாம் அதிகத் தொகைக்கு வீட்டை விற்க இருப்பதாகப் பெருமையுடன் கூறி இருப்பீர்கள். இத்தனையுமாகச் சேர்ந்து எப்படியோ பிரச்சினை முடிந்தால் சரி என்ற நிலைக்கு உங்களைத் தள்ளிவிடும். அவரது நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டு விடுவீர்கள்.

இதைப் பொருளாதாரத்தில் ‘Bait & Switch’ யுக்தி என்பார்கள். அதாவது தூண்டிலை வீசிவிட்டுப் பிறகு சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாமல் இருப்பது.

இதுபோன்ற சிக்கலில் நீங்கள் விழுந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டை வாங்குபவர் குறித்த அடிப்படை விவரங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முன்பணத் தொகை மிகக் குறைவாக இருக்கக் கூடாது. தவிர முன்பணம் அளிக்கப்பட்ட காலத்துக்கும் மீதித் தொகையை அளிக்கவுள்ள காலத்துக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கக் கூடாது.

முன்பணத் தொகையைச் செலுத்தினாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் மீதித் தொகையைச் செலுத்தாவிட்டால் முன்பணம் திருப்பித் தரப்படும் அல்லது திருப்பித் தரப்படாது என்பதைத் தெளிவாக எழுத்தில் கொண்டு வாருங்கள்.

தொகை அதிகம் என்பதற்காகப் பணத்தைச் செலுத்துவதற்கு அளவுக்கு அதிகமான காலத்தை அளிக்க வேண்டாம். இது போன்ற விஷயங்களைக் கையாளும்போது விவரம் தெரிந்த ஒருவரின் வழிகாட்டலை கடைபிடியுங்கள். பரிவர்த்தனைகளின்போது அவரைக் கூட வைத்துக்கொள்ளுங்கள். அவரைச் சாட்சிக் கையெழுத்து போட வையுங்கள்.

முக்கியமாகக் கறுப்புப் பணம் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரூ.70 லட்சத்தில் ரூ.15 லட்சம் ‘கறுப்பு’ என்றால் சிக்கல் நேரும்போது அந்தக் கறுப்புப் பணம் உங்களுக்கு வந்து சேராமலே போகலாம். (தவிர இது சட்ட மீறல் என்பதும் முதன்மைக் கோணம்).

ஒப்பந்தத்தை உருவாக்கும்போது எந்த காலக் கட்டத்துக்குள் முழுத் தொகையும் அளிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறீர்களோ, அதைவிட அதிக காலச் சலுகையை அளிக்க வேண்டாம். இதனால் அதிகத் தொகைக்கு ஆசைப்பட்டு சந்தை மதிப்பைவிடக் குறைத்த தொகையை நீங்கள் வாங்கிக் கொள்ள நேரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்