புதிய கட்டிடங்கள் சிலவற்றில் சில அசவுகரியங்களை உணரலாம். உடல்நலம் பாதிக்கப்படுவதும் உண்டு. என்ன காரணம் என்பதே தெரியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடும். என்ன காரணத்தால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியாத நிலையிலான இத்தகைய நோய்களை சிக் பில்டிங் சிண்ட்ரோம் (sick building syndrome) என்று அழைக்கிறார்கள். அதே நேரத்தில் கட்டிடங்களின் மாசுபட்ட காற்றால் குறிப்பிட்ட நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிய முடிந்தால் அதை பில்டிங் ரிலேட்டட் இல்னெஸ் (building related illness) என்கிறார்கள்.
1984-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில், இண்டோர் ஏர் குவாலிட்டி, அதாவது அறைகளில் உலவும் காற்று தொடர்பான உலக அளவிலான புகார்களில் 30 சதவீதப் புகார்கள் புதிய கட்டிடங்களையே குற்றஞ்சாட்டி இருந்தது. எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக இந்தச் சிக்கல் தற்காலிகமானது என்றாலும் சில கட்டிடங்களில் அது நீடித்த பிரச்சினையாகிவிடுகிறது.
பெரும்பாலும் கட்டிடத்தை முறைப்படி பராமரிக்காததாலேயே இண்டோர் ஏர் குவாலிட்டி பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்தக் கட்டிடத்தில் புழங்குவோரது தவறான நடவடிக்கைகளாலும், கட்டிடத்தின் வடிவமைப்பு சரியில்லாவிட்டாலும் காற்றின் தரம் பாதிப்புக்குள்ளாகும்.
அறைகளில் உலவும் காற்று தரமற்றது என்பதை எப்படிக் கண்டறிவது? குறிப்பிட்ட கட்டிடங்களில் வசிக்கும்போது, தலைவலி, கண், மூக்கு, தொண்டை போன்றவற்றில் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் தீவிரமாக இருக்கும். தோலில் அரிப்பு காணப்படும், மயக்கம் வரக் கூடும், குமட்டும் உணர்வு ஏற்படும், எதிலும் கவனம் செலுத்த முடியாதபடியான சோர்வு தோன்றலாம். இவை எல்லாம் இருந்தால் அந்தக் கட்டிடம் சிக் பில்டிங் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த அறிகுறிகளுக்கான முறையான காரணங்களைக் கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கும். இத்தகைய கட்டிடங்களிலிருந்து வெளியேறியவுடன் இந்த உபாதைகளும் நீங்கிவிடக்கூடும்.
பில்டிங்க் ரிலேட்டட் இல்னெஸ் காரணமாக இருமல், மார்பு இறுக்கம், ஜுரம், தசைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும். இதுவும் கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிட்டால் குணமாகிவிடுகிறது என்கின்றனர்.
இத்தகைய பிரச்சினைகள் வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கட்டிடத்தின் அருகே உள்ள சுகாதாரக் கேடான சூழல் உடல்நிலையைப் பாதிக்கலாம். ஒவ்வாமை காரணமாக நோய்கள் உருவாகலாம். வேலை காரணமான மன அழுத்தம் சிக்கலை உருவாக்கலாம். வேறு உளவியல் பிரச்சினைகளால் உடல் உபாதை உருவாகலாம். இவற்றையும் கட்டிடத்தால் ஏற்படுகிறது என முடிச்சிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆனாலும் மேற்கொண்ட நோய் அறிகுறிகள் கட்டிடத்தின் காற்றின் தரத்துடன் நேரடியாக தொடர்புகொண்டுள்ளது எனப் பல ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சிக் பில்டிங் சிண்ட்ரோமுக்கான காரணங்கள்
போதுமான வெண்டிலேஷன் இல்லாமல் இருப்பது. சாதாரணமான அலுவலகக் கட்டிடத்தில் உள்ள ஒரு நபருக்கு ஒரு நிமிடத்திற்கு 15 கன அடி காற்று வெண்டிலேஷனுக்குத் தேவை. ஆனால் பல கட்டிடங்களில் அதில் புழங்குவோரின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவைப்படும் இந்த வெண்டிலேஷனுக்கான காற்று போதுமானதாக இல்லை என்கின்றனர். அறையில் பொருத்தப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதி அமைப்பு முறையாகக் காற்றை விநியோகிக்கவில்லை என்றால் கூட வெண்டிலேஷன் பிரச்சினை ஏற்படும்.
கட்டிடங்களுக்குள் காணப்படும் பெயிண்ட், மர வேலைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்கள், ஜெராக்ஸ் இயந்திரம் போன்றவை உமிழும் ஃபார்மால்டிஹைடு உள்ளிட்ட ஆவியாகக் கூடிய கரிமப் பொருள்கள் காரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம். கேஸ் ஸ்டவ் போன்ற உபகரணங்கள் வெளியேற்றும் எரியும் தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்றவையும் சிக்கலை உருவாக்கும்.
சில இடங்களில் கட்டிடங்களின் சுற்றுப்புறத்தில் உள்ள மாசுபாடான காற்று கட்டிடத்தில் புகுவதாலும் சிக்கல் உருவாகும். கட்டிடத்தின் உள்ளே காணப்படும் தேங்கிய நீரால் உருவாகும் பாக்டீரி யாக்கள், வைரஸ்கள் போன்ற உயிரியல் மாசு காரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கட்டிடப் பரிசோதனை
கட்டிடங்களின் உள்ளே உலவும் காற்றின் தரத்தைக் குறித்து அறிவதற்கு கட்டிடங்களில் முறையான பரிசோதனை நடத்த வேண்டும். இதற்கெனப் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு அவசியமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கட்டிடத்தின் காற்றில் கலந்துள்ள வேதிப்பொருள்கள், ஈரப்பதம் தொடர்பாக ஆய்வகத்தில் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவர்கள் மேற்கொள்ளப் பரிந்துரைக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். கட்டிடத்தின் காற்றை மாசுபடுத்தும் சூழல் இருந்தால் அதை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும். ஆவியாகக்கூடிய கரிமப் பொருள்களை உமிழும் வேதிப் பொருள்களை முறையான வெண்டிலேஷன் உள்ள இடத்திலேயே சேமித்துவைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் காற்றின் தரம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. கட்டிடத்தின் வெண்டிலேஷன் நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம். சில கட்டிடங்களில் உள்ளே வரும் காற்றைச் சுத்தப்படுத்தி அனுப்பும் அமைப்பை ஏற்படுத்திக்கொள்தல் அனுகூலம் தரும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கட்டிடத்தில் வசிக்க வருபவர்களுக்குக் காற்றின் தரம் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்; ஆரோக்கியமான வாழ்வு நடத்த ஆரோக்கியமான காற்றுதானே அடிப்படை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
39 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago