கட்டிடங்களும் கலைகளும்

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

இந்தியாவின் முதல் பினாலே( binnale) என்ற பெருமை உடையது கொச்சி சர்வதேச கலைக்காட்சி. வழக்கமான ஓவிய,சிற்பக் கண்காட்சிகளைப்போல இல்லாமல் தனிச்சிறப்பான கலைக்காட்சி இது. ஒவ்வொரு முறையும் டிசம்பரில் தொடங்கி மார்ச் மாத இறுதிவரை இக்கலைக்காட்சி நடைபெறுகிறது.

கொச்சி மற்றும் எர்ணாகுளத்தில் பத்து இடங்களில் கலைக்காட்சி நடைபெறுகிறது. இவற்றுள் பெரியது அஸ்பிரின்வால் இல்லம். 1867-ல் வாசனைப்பொருட்கள் ஏற்றுமதியில் ஈடுபட்ட அஸ்பிரின்வால் நிறுவனத்தால் கட்டப்பட்ட டச்சு பாணிக் கட்டிடம். தங்குமிடங்கள், சேமிப்புக்கிடங்குகள் நிறைந்த மிகப்பெரிய வளாகம் இது. இவ்வளாகம் முழுவதும் உள்ள கலைப்படைப்புகளை நிதானமாகப் பார்க்கவே சில நாட்கள் ஆகும்.

உலகெங்குமிருந்து வந்த ஓவியர்களும் சிற்பிகளும் கலை வடிவமைப்பாளர்களும் தங்களது படைப்புகளை இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். நுண்ணோக்கியில் பார்க்கும் ஓவியங்களில் இருந்து மிகப்பிரம்மாண்டமான ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் என நிறைய இருந்தாலும் இண்ஸ்டலேஷன்  (Installation) என்று அழைக்கப்படும் கலை வடிவமைப்புகளே அதிகம் காணப்படுகின்றன.

இண்ஸ்டலேஷன் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றி இப்போது உலகெங்கும் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. கட்டிடங்களின் உட்புறங்கள், பொதுவெளிகளில் இக்கலை வடிவங்கள் நிறுவப்படுகின்றன. அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்பவும் இவை வடிவமைக்கப்படுகின்றன. பல்வேறு பொருட்களை ஒருங்கிணைத்துக் கலைவடிவமாக உருவாக்குகிறார்கள். சிறியதிலிருந்து பிரம்மாண்டம் வரை பல்வேறு அளவுகளில் இக்கலைப்படைப்புகள் நம்மை வசீகரிக்கும்.

வீடியோ படங்கள் இடம்பெறும் கலைப்படைப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. பிரம்மாண்டமான திரைகளில் கலைவடிவாக எடுக்கப்பட்ட படங்களைப் பார்ப்பது கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து.

இந்த ஆண்டு பெரும்பாலான கலைப்படைப்புகள் குழந்தைகள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளன.

இந்தோனேசிய ஓவியர் ஹெரி டொனோவின் பொம்மைகள் சில அறைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தைக் கதைகள் சார்ந்த பொம்மைகள், பறக்கும் கப்பல்கள் பார்வையாளரைக் குழந்தையாக மாற்றுபவை.

பாழடைந்து இடிந்த கட்டிடங்களும் கலைவடிவங்களாகப் பரிணமித்து நிற்பது ஆச்சரியம். பூச்சு உதிர்ந்த பெரிய சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட ஓவியங்கள் அந்த அறையின் தோற்றத்தையே மாற்றிவிடுகின்றன. சுவரோவியங்கள் பொலிவு சேர்க்கின்றன.

கட்டிடத்தை இடித்து வளர்ந்த ஆலமரமும் கலைவடிவம் பெற்றுள்ளது. சுவர்களைத் துளைத்து வளர்ந்து காய்ந்துபோன வேர்களும் கொடிகளும் சிலந்திவலையாகக் கலைவடிவம் பெற்றுள்ளன. நிறையக் கட்டிடங்களின் சுற்றுச் சுவர்களில் இடம்பெற்றுள்ள எழுத்து வடிவங்கள் காட்சிக்கும் கருத்துக்கும் அணி சேர்க்கின்றன.

ஒரு வீட்டின் பழைய பொருட்கள் எல்லாமே அறையெங்கும் அந்தரத்தில் மிதப்பது போன்ற வடிமைப்புக்குள் நாமும் சென்று பார்க்க முடியும். புத்தகங்கள், வீடு உபயோகப் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே மிதந்துகொண்டிருப்பது புதுமையான அனுபவம்.

டச்சு பாணியிலான வீடுகள், கடைத்தெருக்கள், யூதர்களின் கடைவீதி, வழிபாட்டுத்தலம் ஆகியவற்றின் வழியே ஊரெங்கும் நடந்து சென்று கலைப் படைப்புகளைப் பார்வையிடுவது இனிய அனுபவம்.

நாடக நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான ஓவிய,சிற்பப் பயிற்சிகள், நடனங்கள், திரைப்படங்கள் குறும்படங்கள் திரையிடல்கள், கலந்துரையாடல்கள், கதை சொல்லுதல், காகிதக்கலை எனப் பல்வேறு கலை நிகழ்வுகளும் இந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பல்வேறு இடங்களில் கலை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் இதற்கென வட்ட வடிவமான அரங்கமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊரெங்கும் தெருக்களில், உணவகங்களில், சிற்றுண்டிச்சாலைகளில் என எங்கெங்கு காணினும் கலை வடிவங்களின் ஊடே இருப்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உலகெங்குமிருந்து இக்கலைக்கட்சியைப் பார்வையிட கலை ரசிகர்கள், பலதுறைகளைச் சார்ந்த படைப்பாளர்கள் கொச்சிக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்தக் கொச்சி பினாலே கட்டிடக்கலைக்கும் ஓவியக் கலைக்குமான தொடர்பைப் பறைசாற்றுபவையாகத் தோன்றுகின்றது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: artsiva13@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்