நாடு முழுவதும் 100 திறன்மிகு நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) அமைக்கப் போவதாக, நிதிநிலை அறிக்கையில் அறிவித்த மத்திய அரசு, அதற்காக ரூ.7,060 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது தெரிந்த விஷயம்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னேரி, மத்திய அரசின் அறிவிப்பால் என்னென்ன மாதிரியான வசதிகளையும், வளர்ச்சியையும் பெறும்... பொன்னேரியில் வீடு அல்லது நிலம் வாங்குவது நல்லதா? என முதலீட்டாளர்கள் பலரும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும், அதிகளவில் நிலம் வாங்க முனைப்புக் காட்டுவதால், பொன்னேரியில் நிலத்தின் மதிப்பு சற்றே உயரத் தொடங்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இணையதளங்களில் மட்டுமின்றி துண்டுப் பிரசுரங்களில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களிலும்கூட, ஸ்மார்ட் சிட்டியாக மாறப் போகும் பொன்னேரியில் முதலீடு செய்வதற்கு இதைவிடச் சரியான நேரம் கிடைக்காது என்ற ரீதியிலான வாசகங்கள்தான் இடம்பெறுகின்றன.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருப்பவர்களும் பொன்னேரியில் வீடு அல்லது நிலம் வாங்க விரும்பும் நிலையை, ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு உருவாக்கியுள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர்.
மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் பொன்னேரி சேர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் பலவும், வடசென்னையில்தான் தங்களின் உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. பொன்னேரிக்கு அருகிலேயே எண்ணூர் துறைமுகம் இருப்பதும், ஜப்பானிய நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்களை, கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல எண்ணூர் துறைமுகம் பெரிதும் உதவிடும். பொன்னேரியின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
புதிதாகத் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் போது, அதற்கான மூலப் பொருட்களைக் கொண்டு வர தரமான சாலை வசதிகள் அவசியம். ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரையில், பொன்னேரியில் ரயில் நிலையம் இருக்கிறது என்பதை சாதகமான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சரக்குப் போக்குவரத்துக்கு தேவையான அளவு அது வசதிகள் கொண்டதாக இல்லை. பொன்னேரிக்கு அதிக அளவிலான மக்கள் இடம்பெயரும் நேரத்தில், அங்குள்ள ரயில் நிலையத்தையும், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
ஸ்மார்ட் சிட்டிக்கான மாஸ்டர் பிளான்
இந்த நிலையில், பொன்னேரியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்காக ஜப்பான் இண்டர்னேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்சி (JICA- ஜிகா) என்ற ஜப்பான் நிறுவனத்தின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. இந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான இஷிகுஷி, சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் சிட்டியில், குடியிருப்புப் பகுதிகள், தொழில் பூங்கா, வர்த்தக நிறுவனங்களுக்கான இடம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும் எனவும் இஷிகுஷி கூறியிருக்கிறார். மார்ச் 2015ல், பொன்னேரியில் அமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டிக்கான மாஸ்டர் பிளான் தயாராகிவிடும் எனவும் கூறப்படுகிறது.
முதல் ஸ்மார்ட் சிட்டி
பொன்னேரியில் அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டி, நகர்ப்பகுதிகளுக்கு இணையான வளர்ச்சியைப் பிற பகுதிகளிலும் ஏற்படுத்திடும் திட்டத்தின் முன்மாதிரியாக அமையும் என ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் நிலவும் அரசியல் போட்டி, ரியல் எஸ்டேட் துறையினரின் ஆதிக்கம் மற்றும் பிற காரணிகளால், இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
சாலைப் போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை, நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை மேற்கொள்ளப்படும் வெளிவட்டச் சாலைக்கு அருகில் பொன்னேரி அமைந்துள்ளது. மற்ற வகையில் பொன்னேரியின் சாலை வசதி, பின்தங்கிய நிலையில்தான் தற்போது இருக்கிறது.
இதனை மேம்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி மற்றும் அதற்குத் தேவையான உயர்தர சாலைகளை அமைக்க தேவையான நிலத்தை அரசு கையகப்படுத்தும்போது, கண்டிப்பாக எதிர்ப்புகள் எழும். விவசாய நிலங்களை நகரமயமாக்க பயன்படுத்தக் கூடாது என்ற போராட்டங்களும் முன்னெடுக்கப்படும். இதன் காரணமாகப் பொன்னேரியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் தடைபடலாம்.
மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் முழுமையான ஆதரவில்லாமல், மத்திய அரசால் பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி விட முடியாது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி உருவானால், தமிழகத்தின் முதல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெருமையைப் பெறும் பொன்னேரியில், ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும்.
இப்போது முதலீடு நல்லதா?
தற்போதைய சூழலில் பொன்னேரியில் முதலீடு செய்வது நல்லதா? என்ற கோணத்தில் பார்த்தால், “அவசரப்பட்டு முதலீடு செய்ய வேண்டாம்” என்றே ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள்
பலரும் கூறுகின்றனர். பொன்னேரியில் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டி, நகரின் எந்தப் பகுதியில் உருவாகப் போகிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பைக் காரணம் காட்டி, விற்பனையாளர்கள் பலரும் நிலத்தின் மதிப்பைக் கணிசமாக உயர்த்திவருகின்றனர். 2015-ம்
ஆண்டு தொடக்கத்தில், ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத் திட்டம் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்த பின்னரே, பொன்னேரியில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
48 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago