வெறும் சுவர் அல்ல 12: கான்கிரீட் கலவை தயாரிப்பது எப்படி?

By எம்.செந்தில்குமார்

கான்கிரீட் கலவையை வேலை செய்யும் இடத்தில் தயாரித்து மேற்கூரை அமைப்பது நாம் பரவலாகச் செய்யும் ஒரு விஷயம். M20 அதாவது MIX 20 என்பதுதான் மேற்கூரை கான்கிரீட் அமைக்கப் பயன்படுத்த வேண்டிய முறையான கலவை. M20 என்பது என்ன என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்

M20 என்பது என்ன?

சிமெண்ட் மணல் மற்றும் ஜல்லி இவற்றை எந்த விகிதத்தில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் கான்கிரீட்டின் வலிமை அமைகிறது. 1 : 1.5 : 3 என்ற விகிதத்தில் முறையே சிமெண்ட் மணல் மற்றும் ஜல்லி கலந்த கலவையே M20. இதில் M என்பது MIX என்ற வார்த்தையைக் குறிக்கிறது. 20 என்பது இந்தக் கலவையைப் பயன்படுத்தி உருவாகும் கான்கிரீட்டின் வலிமையைக் குறிக்கிறது. முறையான நீராட்டுதலின் முடிவில் 28 நாட்களுக்குப் பிறகு கான்கிரீட் எட்டக்கூடிய வலிமையை (CHARACTERISTIC COMPRESSIVE STRENGTH) N / SQ.MM என்ற அளவீட்டில் சொல்வதே இந்த எண்.

இவ்வளவு நாள் நாம் பயன்படுத்தியது என்ன?

M15 அதாவது 1 : 2 : 4 என்ற அளவீட்டையே நாம் இவ்வளவு நாட்களாகப் பயன்படுத்தி வந்தோம். இனி M20 என்பதற்கான கலவை விகிதத்தைப் பயன்படுத்துவதே முறையானது என்று தரக்கட்டுப்பாட்டு விதிகளை முன்னிட்டுப் பெரும்பாலான STRUCTURAL இன்ஜினீயர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த விகிதத்தை எப்படிப் பயன்படுத்துவது?

பொதுவாக, வேலை செய்யும் இடத்தில் முறையான அளவீட்டுக் கருவிகள் (MEASUREMENT BOX) பயன்படுத்துவது வலியுறுத்தப்படுகிறது. இந்தப் பெட்டிகள் 1.25 கன அடி அளவு உள்ளதாகத் தயாரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு சிமெண்ட் மூட்டையில் உள்ள சிமெண்ட்டின் கன அளவு அவ்வளவுதான். அப்படித் தயார்செய்து கொள்வதால் நாம் எளிதாக இந்த அளவீட்டு விகிதங்களைச் செயல்படுத்த முடியும். ஆனால், நாம் உண்மையில் என்ன செய்கிறோம் என்றால் மணல் மற்றும் ஜல்லியை நாம் பயன்படுத்தும் தட்டுகளின் அடிப்படையில் எத்தனை தட்டு என்று வாய்வழிச் செய்திகளின் அடிப்படையில் முடிவெடுத்துப் பயன்படுத்துகிறோம்.

எத்தனை தட்டு பயன்படுத்த வேண்டும் என்ற முறை தவறு என்று சொல்லவரவில்லை. ஆனால், அந்தத் தட்டுகளின் எண்ணிக்கையை எப்படி நாம் முடிவெடுக்கிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும்.

நாம் எந்த அளவிலான தட்டுகளை மணல் மற்றும் ஜல்லி அளவிடப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து ‘எத்தனை தட்டு’ என்பது மாறுபடும். நாம் பயன்படுத்த முடிவெடுத்துள்ள தட்டை வைத்து ஒரு மூட்டை சிமெண்ட் எத்தனை தட்டு பிடிக்கிறது என்பதை நாம் அளக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்து அதைப் போன்று ஒன்றரை மடங்கு மணலும் மூன்று மடங்கு ஜல்லியும் கலக்க வேண்டும்.

இந்த விஷயத்தை இவ்வளவு விரிவாகச் சொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வருகிறது?

நாம் எவ்வளவு சிமெண்ட் பயன்படுத்துகிறோம் என்பது மட்டுமல்ல எந்தெந்த அளவில் மணல், ஜல்லி ஆகியவை பயன்படுத்த வேண்டும் என்ற முறையையும் நாம் உணர்வது அவசியம். அந்த விழிப்புணர்வு ஏற்பட்டாலொழிய நாம் முறைப்படி செய்வதை உணர முடியாது.

மணலின் அளவு: இந்த விகிதத்தில் ஒரு முக்கியமான தொழில்நுட்பத் தகவலையும் உங்களிடம் பரிமாறிக்கொள்வது அவசியம் என உணர்கிறேன். BULKAGE OF SAND என்ற விதியின் படி நாம் மணல் அளவைச் சற்றுக் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒன்றரை பங்கு மணலுக்குப் பதிலாக அதிகபட்சம் இரண்டு மடங்கு வரை மணலி்ன் தரத்தைப் பொறுத்து நாம் கலக்க வேண்டும். விரைவில் இன்னொரு கட்டுரையில் இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி விரிவாக நாம் பேசுவோம்.

தண்ணீர் அளவு: கான்கிரீட் கலவை தன் தன்மையை அடைய நாம் இந்தக் கலவையில் கலக்க வேண்டிய தண்ணீரின் அளவைச் சரிவரக் கண்காணிக்க வேண்டும். WATER CEMENT RATIO என்று இந்தக் காரணியைச் சொல்வார்கள். இதனுடைய முக்கியத்துவம் என்ன, எவ்வளவு லிட்டர் தண்ணீர் கலக்க வேண்டும், கூடுதலாகவோ குறைவாகவோ கலந்தால் ஏற்படும் விளைவுகள் என்ன, இந்த வினாக்களுக்கான விடைகளை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்