வெறும் சுவர் அல்ல 06: கம்பி வரைபடம் அவசியமா?

By எம்.செந்தில்குமார்

கம்பி வரைபடம்  (STRUCTURAL DRAWING) என்றால் என்ன?

புவியீர்ப்பு விசையை எதிர்த்து நம் கட்டிடங்கள் விண்ணை நோக்கி வளர்ந்து நிற்கின்றன. தலைமுறைகள் காண வேண்டிய நம் வீடு அப்படி நிற்க வேண்டுமென்றால், அந்த வீட்டின் ஒட்டுமொத்த பாரமும் முறையாக மண்ணுக்குக் கடத்தப்பட வேண்டும். அதற்கு முறையாகப் பாரம் கடத்தும் திறன் வடிவமைக்கப்பட வேண்டும். அதுதான் STRUCTURAL DRAWING என்ற கம்பி வரைபடம்.

கான்கிரீட்டின் அடிப்படை அறிவியல் கருத்து:

இன்றைய சூழலில் வீடு கட்டுவதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் அரிய இரண்டு கண்டுபிடிப்புகள் கம்பியும் கான்கிரீட்டும். இவற்றைக் கொண்டு எவ்வளவு உயரமான கட்டிடங்களையும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உயர்த்திக் கொண்டே போக இயலும். அடிப்படையில் இரண்டு விசைகளை நாம் சமாளிக்க வேண்டும் இழுப்பு விசை (TENSILE FORCE) மற்றும் அழுத்தும் விசை (COMPRESSIVE FORCE). முறையே கம்பி மற்றும் கான்கிரீட் இந்த விசைகளைச் சமாளித்து நம் விருப்பப்படி கட்டிடங்கள் கட்ட உதவுகின்றன.

உண்மையில் இந்த STRUCTURAL DRAWING என்பது கம்பி மற்றும் கான்கிரீட் இரண்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இவை இரண்டும் இணைந்து RCC எனப்படும் REINFORCED CEMENT CONCRETE என்ற ஒரே பொருளாக மாறுகிறது.

மண்ணின் தன்மை

கட்டிடத்தைச் சரியாக வடிவமைக்க நாம் அந்தக் கட்டிடம் கட்டக்கூடிய மண்ணின் தன்மை பற்றி அறிந்திருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு விதமான மண்ணின் தாங்குதிறனும் (BEARING CAPACITY) வெவ்வேறானது. பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பாக அந்த இடத்தில் உள்ள மண்ணின் தன்மையைப் பரிசோதித்து அதற்குத் தகுந்தாற்போல் கட்டிடங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

பயிர் வளர்க்கும் முன்பு அந்த மண்ணைப் பரிசோதிப்பதைப் போல் கட்டிடம் கட்டும் முன்பு அந்த மண்ணைப் பரிசோதிப்பதும் முக்கியமே. அந்தப் பரிசோதனையில் நமக்குக் கிடைக்கும் தாங்குதிறன் அளவைக் கொண்டுதான் நாம் சரியாகக் கட்டிடத்தை வடிவமைக்க இயலும்.

ஆனால், சராசரியான தாங்குதிறன் மதிப்பைக் கொண்டு கட்டிடத்தை வடிவமைக்கும் வழக்கம் பெரும் பாலான இடங்களில் வழக்கத்தில் உள்ளது. வீடு கட்டும் ஒவ்வொருவரும் இந்த வழக்கத்தை மாற்றி மண் பரிசோதனை செய்து முறையாகக் கட்ட முன்வர வேண்டும்.

உண்மையான சூழல் என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் என் 20 வருட அனுபவத்தில் பார்த்தவரை, முறையாகக் கம்பி மற்றும் கான்கிரீட் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்படுவது 30 சதவீதக் கட்டிடங்கள் மட்டுமே. வீடு கட்டுவதைக் கனவாகக் கொண்டு தம் வாழ்நாளில் பெரும் பொருட்செலவைக் கொண்டு வீடு கட்டும் மக்கள்திரளில் பெரும்பாலானோர் ஒட்டு மொத்தச் செலவை மட்டுமே கணக்கில் கொண்டு எந்தெந்தத் தகவல்களையெல்லாம் கேட்க வேண்டும் என்பதை அறியாத வகையிலேயே இருக்கிறார்கள்.

அனுபவத்தின் அடிப்படையில் இடக்கூடிய கம்பி மற்றும் கான்கிரீட் அளவு முறையாக இருக்காது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானது. இரண்டு காலங்களுக்கு (COLUMN) இடைப்பட்ட தூரம்,

கட்டிட உயரம், பயன்படுத்தும் கான்கிரீட்டின் கிரேடு (GRADE) உள்ளிட்ட பலவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனுபவத்தின் அடிப்படையில் மட்டும் தங்கள் விருப்பத்துக்கு COLUMN அமைக்கும்போது, எல்லா COLUMN களும் ஒரே எண்ணிக்கையிலும் ஒரே கனத்திலும் கம்பிகளைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக வீட்டின் மையத்தில் வரும் COLUMN, ஓரத்தில் வரும் COLUMN கொண்டிருக்கும் கம்பியைவிடக் கூடுதலான கம்பியைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஓரத்தில் வரும் COLUMN தாங்கி கடத்தக்கூடிய பாரத்தின் அளவு நிச்சயமாக மையத்தில் அமைவதைவிடக் குறைவு.

என்ன செய்ய வேண்டும்?

முறையாக வடிவமைக்கப்படாமல் கட்டிடம் கட்டும்போது நாம் தேவையைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கம்பி, கான்கிரீட் இவற்றைப் பயன்படுத்த நேரிடும். இந்த இரண்டுமே கட்டிடத்திற்கு நன்மை பயக்காது.

முறையாக மண் பரிசோதனை செய்து, அந்த முடிவுகளின் அடிப் படையில் நம் கட்டிட வரை படத்துக்கு ஏற்ப கம்பி மற்றும் கான்கிரீட் எப்படி அமைய வேண்டும் என்று வடிவமைப்பது தலைமுறைகள் காண நாம் கட்டப்போகும் வீட்டுக்கு நல்லது.

புவியீர்ப்பு விசைக்கு எதிராக நாம் எவ்வளவு உயரமாக வேண்டு மானாலும் செல்வோம். நம் வேர்கள் பலமாக இருப்பதை உறுதி செய்வோம்.

தொடரும்…

- கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்