இகனவு இல்லத்தை வடிவமைப்பதற்கான சரியான கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பது என்பது சுலபமான விஷயமல்ல. ஒருவேளை, அந்தச் சரியான கட்டிடக் கலைஞரைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவரிடம் கட்டுமானம் தொடர்பாகக் கேட்க வேண்டிய விஷயங்களைப் பற்றி நமக்கு விரிவாகத் தெரியாது. ஆனால், அவரிடம் கட்டுமானம் தொடர்பாகக் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே நமது கனவு இல்லத்தைச் சரியாக வடிவமைக்க முடியும்.
ஒரு வீட்டைக் கட்டுமான நேர்மை, பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற அம்சங்களை இணைத்து வாழ்வதற்குத் தகுதியான இடமாக மாற்றுவது கட்டிடக் கலைஞரின் பொறுப்பு. அத்துடன், கட்டப்படும் கட்டிடம் சட்ட வரையறைக்குள் கட்டப்படுவதை உறுதிசெய்வதும் அவரது பொறுப்புதான்.
ஒரு கட்டிடக் கலைஞர் இந்த இரண்டு பொறுப்புகளையும் நேர்மையாகவும் திறமையாகவும் செய்கிறாரா என்பதை ‘கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர்’ (Council of Architecture) என்ற அமைப்புக் கண்காணிக்கிறது. 1972-ஆம் ஆண்டு கட்டடிக் கலைஞர்கள் சட்டத்தின்படி இந்த அமைப்பு இந்திய அரசால் அமைக்கப்பட்டது. கட்டிடக் கலைஞர்களின் நன்னடத்தைக் கோட்பாடுகளைக் கண்காணிப்பது, சட்ட உரிமம் வழங்குவது போன்றவற்றை இந்த அமைப்பு கையாள்கிறது.
கட்டுமான அறிவு, அழகியல் போன்ற விஷயங்களைப் பிரதானமாக வைத்தே ஒரு கட்டிடக் கலைஞர் பணியாற்றுகிறார். உங்கள் வீட்டை எப்படிப்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்க விரும்புகிறீர்கள் என்பதை அவரிடம் சரியாக விளக்க வேண்டும். உங்கள் கனவு இல்லத்தின் கற்பனை வடிவமைப்பை அவரிடம் முதலில் விரிவாக எடுத்துரைப்பது சிறந்தது. உங்களது கற்பனை வடிவமைப்பை எவ்வளவுக்கு எவ்வளவு அவர் உள்வாங்கிக்கொள்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் வீட்டை மனதுக்கு நெருக்கமாக உணர்வீர்கள்.
எழுதுவது நல்லது
கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், வீட்டைப் பற்றிய உங்கள் விருப்பங்களை விரிவாக எழுதுவது நல்லது. ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு பகுதியும் எப்படியிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை விரிவாக எழுதுங்கள். அறைகளின் பயன்பாடுகளை மட்டுமல்லாமல் எல்லா விஷயங்களையும் எழுதுங்கள்.
எந்த அறையில் எந்த மாதிரியான கட்டுமானப் பொருள், வடிவமைப்புப் பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற உங்கள் விருப்பத் தேர்வுகளையும் எழுதுங்கள். இணையத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்த வீட்டின் வடிவமைப்புப் படங்களைச் சேகரித்து வைத்துக்கொள்வது சிறந்தது. உங்களுக்கு ஏன் அவை பிடித்திருக்கின்றன என்பதற்கான குறிப்புகளையும் எழுதிவைத்துக்கொள்வது கூடுதல் சிறப்பு. வீட்டின் இடம், வெளிச்சம், அமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும்.
இப்படி நீங்கள் எழுதிவைத்திருக்கும் குறிப்புகளை உங்களுடைய வீட்டின் அடிப்படையான ‘அவுட்லைன்’ திட்டம் என்று அழைக்கலாம். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு, வீட்டைப் பற்றிய உங்களது எண்ணங்களுக்கு இறுதிவடிவம் கொடுப்பது சிறந்தது. நீங்கள் கொடுக்கும் விரிவான வடிவமைப்புக் குறிப்புகளைவைத்து கட்டிடக் கலைஞர் உங்கள் விருப்பத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
திட்டம் முக்கியம்
வீட்டைக் கட்டுவதற்காக எவ்வளவு காலத்தை நிர்ணயம் செய்கிறீர்களோ அதைவைத்து பட்ஜெட்டையும் நேரத்தையும் திட்டமிட வேண்டும். வீட்டைக் கட்டுவதற்கான பட்ஜெட்டை முழுமையாக ஏற்பாடு செய்த பின்னர்தான் வீட்டின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். வீட்டின் வடிவமைப்புத் திட்டத்துக்கான காலம், கட்டுமானத் திட்டத்துக்கான காலம் இரண்டையும் சரியாகத் திட்டமிட வேண்டும்.
வீடு கட்டப்படும்போது ஏற்படும் எதிர்பாராத பணவீக்கத்தைச் சமாளிக்கும்படி உங்களது பட்ஜெட்டைத் திட்டமிடுங்கள். வீட்டின் வடிவமைப்பு, பொறியாளர் ஆலோசனைகள் போன்றவை கட்டுமானச் செலவில் பத்து சதவீதம் வரை இருக்கும். அதனால், அவற்றைத் தவிர்த்துவிட்டு பட்ஜெட் போடுவது இறுதி நேரத்தில் நிதிச் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
தேடல் சிறந்தது
கட்டிடக் கலைஞரைத் தேடுவதற்குப் போதுமான நேரம் எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. உங்களுடைய நட்புவட்டத்திடம் விசாரிப்பதுதான் கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழி. உங்கள் நண்பர்களில் யாராவது ஒருவர் வீட்டை வடிவமைத்த நேரடியான கட்டிடக் கலைஞராக இருந்தால் கூடுதல் சிறப்பு. கட்டிடக் கலைப் பத்திரிகைகளிலும். இணையதளங்களிலும் கட்டிடக் கலைஞரைத் தேடுவது இன்னொரு வழி.
ஒரேயொரு கட்டிடக் கலைஞரிடம் மட்டும் பேசிவிட்டு முடிவெடுக்காமல், குறைந்தபட்சம் நான்கைந்து பேரிடமாவது ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுக்க வேண்டும். அத்துடன், கட்டிடக் கலைஞரின் பழைய பணிகளைப் பார்த்து மட்டும் தீர்மானிக்காமல், அவர்களது திட்டத்துக்கான பட்ஜெட், நேரம், பணிமுறை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
மாற்றங்களை வரவேற்கலாம்
கட்டிடக் கலைஞர்களை முதல்முறை பார்த்துபேசும்போது உங்களுடைய வீட்டின் திட்டத்தைப் பற்றிச் சுருக்கமாக விவரியுங்கள். உரையாடலின்போது திட்டத்தில் ஏதாவது நியாயமான மாற்றங்களைக் கட்டுமானக் கலைஞர் அதை ஏற்றுக்கொள்வதுதான் சரியானதாக இருக்கும். சட்டபூர்வமான ஒப்பந்தம் போடுவதற்கு முன், நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டிடக் கலைஞரின் பழைய பணிகளை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வருவது நல்லது.
தேவையற்ற தலையீடு நல்லதல்ல
வீட்டின் கட்டுமானப் பணிகளைக் கட்டிடக் கலைஞரிடம் ஒப்படைத்த பிறகு, அவரைச் சுதந்திரமாகச் செயல்படவிடுவதுதான் சிறந்தவழி. உங்களது வடிவமைப்பு ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மட்டும் தொடர்ந்து மேற்பார்வை செய்துகொள்வது மட்டும் போதுமானது. முக்கியமாகப் பெரிய கட்டுமான மாற்றங்களைத் திட்டம் தொடங்கிய பிறகு செய்யச் சொல்வது நல்லதல்ல.
கனவு இல்லத்தை முழுமையாக உருவாக்கும்வரை கட்டிடக் கலைஞரிடம் சுமுகமான நட்புறவைக் கடைப்பிடிப்பது நல்லது. கூடுமானவரை, சட்டப்பூர்வமான ஒப்பந்தமுறையில் கட்டுமானக் கலைஞருக்கும் உங்களுக்குமான தொடர்பு இருப்பது சிறந்தது. இந்தச் சட்டபூர்வமான ஒப்பந்தம், பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago