டீக்கடை இல்லாத தெருவோ ஊரோ நம் மாநிலத்தில் கிடையாது. இன்று மட்டுமல்ல; அன்றும் அவ்வாறுதான் டீக்கடை எங்கும் நிரம்பி இருந்தது. தேநீர் போடுவது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. கொதிக்கும் தண்ணீரில் தேயிலையைப் போட்டு அதனுடன் சிறிது பாலையும் தேவைக்கேற்ப சர்க்கரையையும் போட்டுக் கலக்கினால் சுவையான தேநீர் ரெடி. இருந்தும் எல்லா டீக்கடைகளிலும் ஒரே சுவையுடன் தேநீர் இருப்பதில்லை. இந்தக் கூற்று வீடுகளுக்கும் பொருந்தும். சில கடைகளில் மட்டுமே தேநீர் எப்போதும் ஒரே மாதிரியான சுவையுடன் ருசியாக உள்ளது. அதனால்தான் என்னவோ ஒவ்வோர் ஊருக்கும் அடையாளமாக ஒரு டீக்கடை இன்றும் உள்ளது.
முன்பு எல்லாம் டீக்கடையில்தான் ஊரில் உள்ள பெரியவர்களும் இளைஞர்களும் கூடி கதை பேசுவார்கள். பெரியவர்களும் இளைஞர்களும் எப்படி ஒரே இடத்தில் கூட முடியும் என்று யோசிக்க வேண்டாம். அவர்கள் கூடும் நேரம் மாறுபடும். பெரியவர்கள் கூடும் நேரத்தில் இளைஞர்கள் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். அதேபோன்று இளைஞர்கள் கூடும் நேரத்தில் பெரியவர்கள் அந்தப் பக்கம் வராமல் இருந்து, தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வார்கள்.
ஒவ்வொரு டீக்கடைக்கும் முன்பாக, ஒன்றை ஒன்று பார்த்தபடி இரண்டு பெஞ்சுகள் இருக்கும். அந்த பெஞ்சுகளின் மேல் நாளிதழ்கள் கிடக்கும். அது பறக்காமல் இருக்க அதன் மேல் கல் ஒன்று இருக்கும். பேப்பர் வருவதற்கு முன்பே அதை எதிர்பார்த்து, இரண்டோ மூன்றோ டீயைக் குடித்துவிட்டுப் பெரியவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த காலம் அது. இப்போதுபோல அன்று பெரும்பாலான வீடுகளிலும் நாளிதழ் வாங்கும் பழக்கம் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் நாளிதழ்கள் இன்றைக்கு இருப்பதைப் போன்று தவிர்க்க முடியாததாக இல்லாமல், ஆடம்பரமானதாகவே கருதப்பட்டன.
இப்போது தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விவாதங்களுக்கு முன்னோடி என டீக்கடை பெஞ்சுகளில் நடந்த விவாதங்களைச் சொல்லலாம். அரசியல் கட்சியினுடைய கொள்கையின் சரியும் தவறும் அந்த பெஞ்சில்தான் அலசி ஆராயப்படும். அரசியல் தலைவரின் நம்பகத்தன்மை அங்கேதான் முடிவு செய்யப்படும். சினிமாவின் வெற்றியும் தோல்வியும் அங்கேதான் தீர்மானிக்கப்படும். அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் நடத்தப்படும், சினிமா விவாதங்களும் விளையாட்டு விவாதங்களும் இளைஞர்களால் நடத்தப்படும்.
டீக்கடைகள் பெரும்பாலும் பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய ஜன நடமாட்டம் மிகுந்த இடத்தில்தாம் இருக்கும். ஊருக்கு வருவோர் போவோர் என எவரும் டீக்கடை மாஸ்டரின் கண்களிலிருந்து தப்ப முடியாது. டீக்கடை உரிமையாளர்களும் மாஸ்டர்களும் முற்றிலும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்தனர். தந்தையும் மகனும் தம் தம் நண்பர்களுடன் கூடும் இடம் அது. இருந்தும், தந்தையைப் பற்றி மகனிடமோ மகனைப் பற்றித் தந்தையிடமோ அவர்கள் ஒருபோதும் கூறியது இல்லை. அதுதான் அவர்களின் வெற்றியின் ரகசியமும்கூட.
1980,1990 களில் வாழ்ந்த இளைஞர்களின் வாழ்வில், டீக்கடையுடன் தொடர்புடைய மறக்க முடியாத சம்பவம் நிச்சயம் இருக்கும். சிலருக்கு அது தங்கள் மனைவியை அடையாளம் கண்ட இடமாக இருக்கலாம், சிலருக்கு அது முதல் காதல் தோன்றிய இடமாக இருக்கலாம், சிலருக்கு அது திருட்டு தம் அடித்த இடமாக இருக்கலாம், சிலருக்கு அது தர்ம அடி வாங்கிய இடமாகக்கூட இருக்கலாம்.
இன்று அந்த பெஞ்களுக்குப் பதில் மேஜை நாற்காலிகள் உள்ளன. அந்தக் கடைகள் இன்று நவீனமாகி, பளபளப்பான பெயர்ப் பலகையைத் தாங்கி நிற்கின்றன. அதன் பெயர்களும் வாயில் நுழையாதபடி கடினமாக உள்ளன. சிலவற்றின் பெயர்கள் எந்த மொழியைச் சார்ந்தது என்று கண்டுபிடிப்பதுகூடக் கடினமே. உதாரணத்துக்குச் சென்னை ஆதாம் மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கும் பாபிலோன் எனும் டீக்கடை. சென்னைக்கோ நம் மாநிலத்துக்கோ ஏன் அதன் உரிமையாளருக்கோ கூட பாபிலோன் என்ற பெயருடன் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை பாபி என்பவரிடம் லோன் வாங்கிக் கடை வைத்திருப்பார்களோ என்னவோ.
வடைகளும் பஜ்ஜிகளும் முட்டைகோஸ்களும் தேங்காய் பிஸ்கட்டுகளும் மட்டும் இருந்த நிலை மாறி இன்று டீக்கடைகளில் பானி பூரி, சமோசா, சென்னா மசாலா போன்ற வேற்று மாநில நொறுக்குத் தீனிகள் மலிந்து கிடக்கின்றன. முன்பு நமக்குக் காய்ச்சல் வந்தால் மட்டுமே பன்னையும் பிரெட்டையும் சாப்பிடுவோம். இன்றோ அவற்றுக்கிடையில் பச்சை காய்கறிகளை வைத்து சாண்ட்விச், பர்கர் எனச் சாப்பிடுவது ஃபேஷனாகிவிட்டது. இரண்டு பிரெட் துண்டுகள் மட்டுமே கொண்ட சாண்ட்விச்சின் விலை ஒரு முழு பிரெட் பாக்கெட்டின் விலையைவிட அதிகம். இருந்தாலும் அதைப் பற்றி யோசிப்பதற்குக்கூட இன்றைய ‘ப்ரோ’க்களுக்கு நேரமும் மனமும் இல்லை.
எது எப்படியோ, இன்றைய நவீனக் கடைகள் இளைஞர்கள் மட்டுமே கூடி மகிழும் இடமாக மாறிவிட்டன. கடைகளின் பெயர்களோ அதன் நவீனமயமான தோற்றமோ அதில் நிலவும் அந்நியமயமோ, எதுவென்று சரியாக அறுதியிட்டுக் கூற முடியவில்லை, பெரியவர்கள் இன்று அங்குக் கூடுவதில்லை. அவர்கள் தொலைக்காட்சிகளில் விவாதங்களைப் பார்த்தபடி தங்கள் நினைவுகளை அசை போடுகிறார்கள்.இளைஞர்களின் வாழ்வில், டீக்கடையுடன் தொடர்புடைய மறக்க முடியாத சம்பவம் நிச்சயம் இருக்கும். சிலருக்கு அது தங்கள் மனைவியை அடையாளம் கண்ட இடமாக இருக்கலாம், சிலருக்கு அது முதல் காதல் தோன்றிய இடமாக இருக்கலாம், சிலருக்கு அது திருட்டு தம் அடித்த இடமாக இருக்கலாம், சிலருக்கு அது தர்ம அடி வாங்கிய இடமாகக்கூட இருக்கலாம்.வாழ்க்கை வண்ணம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago