தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை

By முகமது ஹுசைன்

நகரின்  பெயருக்குப் பின் இருக்கும் காரணத்தைக் கண்டறிய முயல்வது, ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளைக் கொண்டிருக்கும் புதிருக்கு விடை காண முயல்வதுபோலச் சவாலான காரியம். சில நகரங்களின் பெயர்களுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். சென்னை நகருக்குப் பல காரணங்கள் மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களும் உள்ளன.

சென்னை தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று. மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட அந்த நகரம், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1996 ஜூலை-16-ல் இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பை அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அதன் மூலம் நம் மீதான ஆக்கிரமிப்பை நினைவூட்டும் மெட்ராஸ் என்ற அந்தப்  பெயர் இல்லாமல் ஆனது.

இரு கிராமங்கள்

மெட்ராஸ் என்ற பெயர்தான் அந்த நகரின் அடையாளம் என்று அன்றைய காகலட்டத்தில் மக்களால் நினைக்கப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல. சென்னை என்ற பெயர் நமக்கோ அந்த நகருக்கோ அந்நியப்பட்டதல்ல. வரலாற்று ஆய்வுகளும் அதன் முடிவுகளும் அந்த நகருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கின்றன.

portugaljpg

மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராஸப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்துதான் தோன்றியது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. சொல்லப்போனால், அந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான பரப்பைத்தான் இன்று நாம் சென்னை என்று வரையறுத்துள்ளோம், இந்த இரண்டு பெயர்களுக்குக் காரணங்கள் எனப் பல வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அரசாங்க அறிக்கைகளும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் வாய்வழி க்கதைகளும் அதன் ஒவ்வொரு வாதத்துக்கும் முட்டுக் கொடுக்கின்றன.

அதில் பிரதானமானது, சின்னப்ப நாயக்கர்பற்றிய வாதம். புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி ஆலயம், துறைமுகம், அவற்றை ஒட்டியிருந்த குடியிருப்புப் பகுதிகள் போன்றவை அமைந்த இடங்கள் சின்னப்ப நாயக்கர் உடையவை. தெலுங்கு பேசிய செல்வந்தரான அவரிடமிருந்து அந்தப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் வாங்கியுள்ளனர். அதற்கான ஆவணங்கள் எழும்பூரில் இருக்கும் சென்னை அரசுக் காப்பகத்தில் இன்றும் உள்ளது.

அவரது நினைவாக அந்தப் பகுதி, அன்றைய காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களால் சென்னப்பட்டினம் என்று 300 ஆண்டுகளுக்கு மேலாக அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆங்கிலேயர்கள் எதற்காக அந்த நகரை மெட்ராஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள் என்பதைப் பற்றியோ ஒட்டுமொத்த பகுதியும் எவ்வாறு மெட்ராஸ் பிரெசிடென்ஸி ஆக உருமாறியது என்பதைப் பற்றியோ இந்த வாதத்தில் தெளிவான விளக்கம் இல்லை.

சென்னை பட்டினக் கோட்டை

சென்னை - மெட்ராஸ் என்ற பெயர்களுக்குக் காரணமாக மற்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்தக் காரணம் நம்மை 1639-ம் ஆண்டுக்கு அழைத்துச் செல்கிறது. கிழக்கிந்திய கம்பெனி தாங்கள் குடியமர்வதற்காகத் தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன.

மதராஸப்பட்டினம் அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்குத் வடக்கு பக்கமாக இருந்துள்ளது. 1600-களில் நிகழ்ந்த ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பாகவே மதராஸப்படினம் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் அதைச் சுவீகரித்து தாங்கள் ஆளும் பகுதியை மெட்ராஸ் என அழைக்கத் தொடங்கினார்கள் என்பதே இந்த வாதத்தின் சாரம்.

புனித ஜார்ஜ் கோட்டைக்குத் தெற்கு பக்கமாகச் சென்னப்பட்டினம் கிராமம் இருந்துள்ளது. விஜயநகர சாமராஜ்யத்தில் சந்திரகிரியை ஆண்ட ஸ்ரீ ரங்க ராஜாவின் ஆட்சியில் வெங்கடாத்திரி நாயுடு தளபதியாக இருந்துள்ளார். வெங்கடாத்திரி தன்னுடைய தந்தை, ‘சென்னப்ப நாயுடு’வின் நினைவாக அந்தப் பகுதிக்குச் சென்னப்பட்டினம் என்று பெயர் சூட்டியுள்ளார். வெங்கடாத்திரியின் முதல் அரசாணையில் மதராஸப்பட்டினம் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

சென்னை என்றால் அழகு

ஆனால், சிலர் சென்னப்பட்டிணத்தில்தான் கோட்டை கட்டப்பட்டுள்ளது என்று நம்புகிறார்கள். அந்தக் கோட்டையைச் சுற்றி புது நகரம் வேகமாக வளர்ந்தது என அவர்கள் நம்புகிறார்கள். வெங்கடாத்திரியின் உத்தரவால்தான் அந்தப் பகுதி சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே அது அவ்வாறுதான் அழைக்கப்பட்டதா என்பதைப் பற்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

எது எப்படியோ, சென்னப்பட்டினம் மதராஸப்பட்டினம் என இரண்டு பகுதிகள் இருந்துள்ளன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வடக்கில் இருந்த மதராசப்பட்டினம் தெற்கு நோக்கியும் தெற்கில் இருந்த சென்னப்பட்டினம் வடக்கு நோக்கியும் விரிந்து பரவி ஒன்றுடன் ஒன்று இணைந்து தங்களது அடையாளத்தை இழந்துள்ளன. நாளடைவில் ஒன்றாக மாறிப் போன அந்தப் பகுதியை எப்படி அழைக்க வேண்டும் என்ற அடையாளச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதராஸப்பட்டினம் என்ற பெயர் ஆங்கிலேயர்களுக்குப் பிடித்திருந்ததால், இந்த அடையாள சிக்கலைக் களையும் விதமாக, ஒட்டுமொத்தப் பகுதியையும் மெட்ராஸ் என அழைக்கத் தொடங்கினர். ஆனால் மக்கள் அந்தப் பகுதியைச் சென்னப்பட்டினம் என்றே அழைத்துள்ளனர். சென்னப்பட்டினம் என்ற பெயர் திராவிடத்தோடு தொடர்புடையது. தெலுங்கு மொழியில்  ‘சென்னு’ என்றால் ‘அழகு’ என்று அர்த்தம்.

1600 வரை பின்னோக்கி செல்லும்போதுதான் சென்னை என்ற பெயருக்கான காரணம் நமக்கு ஓரளவுக்குப் புலப்படுகிறது. ஆனால். மெட்ராஸ் என்ற பெயருக்கான காரணத்தை அறிய, 1500-ம் ஆண்டுவரை நாம் பின்னோக்கி செல்ல வேண்டியுள்ளது. மெட்ராஸ் என்ற பெயர் நம் நாட்டோடு தொடர்புடையது அல்ல, அது போர்ச்சுக்கல் நாட்டுடன் தொடர்புடையது. ஆம், 1500-களில் சென்னையில் போர்ச்சுக்கல் நாட்டவர்கள் குடியேறியுள்ளார்கள். அப்போது அங்கு வாழ்ந்த போர்ச்சுக்கல் நாட்டின் உயரதிகாரியான ‘மேட்ரே டி சோய்ஸ்’ என்பவரின் நினைவாகவே ’மெட்ராஸ்’ என்ற பெயர் உருவானதாகச் சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மெட்ராஸ் எனும் அந்நியப் பெயரை, நாம் சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னே நாம் நீக்கியுள்ளோம். நாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர்கள் நம் நாட்டு ஆளுமைகளின் பெயரால் நாடு முழுவதுன் இன்று மாற்றப்பட்டு வருகின்றன. ’மெட்ராஸ்’ சென்னை என மாறி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் மெட்ராஸ் என்ற பெயர் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாமல் இருக்கிறது. அடிமைத்தனத்தைத் தாங்கி நிற்கும் அந்தப் பெயர், கால ஓட்டத்தில் மக்கள் மனத்திலிருந்து முற்றிலும் மறையக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்