எ
ல்லாத் தெருக்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றில் பல தலைமுறையினரின் வாழ்வு அடங்கியிருக்கும். சென்னையிலிருக்கும் அரண்மனைக்காரன் தெரு என அழைக்கப்படும் ஆர்மேனியன் தெருவும் இதற்கு விதிவிலக்கல்ல.
அந்தத் தெரு வட சென்னையில் மண்ணடியையும் சைனா பஜாரையும் இணைக்கிறது. அன்றும் இன்றும் அது வணிக மையமாகவே திகழ்கிறது. அன்று என்பதில், 365 வருடங்களும் சுமார் 20 தலைமுறையும் அடங்கியுள்ளன. அதன் தொன்மைக்கும் பெருமைக்கும் சான்றாகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் இன்றும் அங்கு உள்ளன.
சென்னையிலிருந்து சுமார் 4,500 கி.மீ.க்கு அப்பால் ஆர்மேனியா நாடு உள்ளது. 1650-ம் ஆண்டில் அங்கிருந்து வந்தவர்கள் இங்கே குடியமர்ந்த காரணத்தால், இந்தத் தெரு இன்றும் ஆர்மேனியன் தெரு என்று அழைக்கப்படுகிறது.
ஆர்மேனியர்கள் இந்தியாவுக்கு எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே வந்துவிட்டனர். 780-ம் ஆண்டு கேரளாவின் மலபார் கடற்கரையில் தாமஸ் கானாதான் இந்தியாவில் கால் பதித்த முதல் ஆர்மேனியத். ஆனால், அங்கிருந்து சென்னைக்குள் நுழைவதற்கு ஆர்மேனியர்களுக்கு சுமார் எட்டு நூற்றாண்டுக் காலம் பிடித்தது. ஒருவேளை கூகுள் மேப் போன்று ஏதேனும் ஒன்று அன்று இருந்திருந்தால், அவர்களின் நுழைவு ஒரு வருடத்துக்குள் நிகழ்ந்திருக்கும்.
சென்னையில் ஆர்மேனியர்கள் 1600-களில் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. சென்னை பரங்கிமலைக்கு அருகில் 1663-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட கோஜா டேவிட் மார்கர் என்பவரின் கல்லறை அதற்குச் சான்று. ஹுர்பெர்டா வோன் வோஸ் என்பவரின் புத்தகத்தின்படி, ஆர்மேனியர்கள்தாம் போர்த்துகீசியர்களை இங்கு அழைத்து வந்துள்ளனர். பரங்கிமலைக்கு மேலிருக்கும் தேவாலயம்தான் ஆர்மேனியக் கப்பல்களுக்கும் போர்த்துகீசிய கப்பல்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்துள்ளது.
இன்று சென்னை உயர் நீதிமன்றம் இருக்கும் இடத்தில்தான் அவர்கள் முதல் தேவாலயத்தைக் கட்டியுள்ளனர். கிழக்கிந்திய கம்பெனியிடம் முறையாக அனுமதி பெற்று, முழுவதும் மரத்தாலேயே அதைக் கட்டியுள்ளனர். அந்தத் தேவாலயப் பராமரிப்புக்காக அங்கு வசித்த ஆர்மேனியர்களுக்கு 50 பவுண்டுகளைக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியுள்ளது. அது பிற பகுதிகளில் வசித்த ஆர்மேனியர்களையும் அங்கு வசிக்கத் தூண்டியுள்ளது.
ஆர்மேனியன் தெருவில் இன்று இருக்கும் ஆர்மேனிய தேவாலயம் 1712-ம் ஆண்டு கட்டப்பட்டது. பிரெஞ்சு முற்றுகையின்போது சிதிலமடைந்த அந்த ஆலயம் 1772-ம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் மிகவும் புகழ்பெற்ற ஆர்மேனியராக கோஜா பெட்ரஸ் உஸ்கானைச் சொல்லலாம். 1723-ம் ஆண்டு மணிலாவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு வணிகர். சிறந்த வள்ளலாகவும் விளங்கினார். இன்று சென்னையில் இருக்கும் பல ஆர்மேனியக் கட்டிடங்களையும் மத வழிபாட்டுத் தலங்களையும் கட்டியதோடு மட்டுமல்லாமல், அதைத் தானமாகவும் அவர் கொடுத்துள்ளார். இந்தத் தெருவில்தான் புகழ்பெற்ற கோகுலே ஹால் உள்ளது.
சென்னையில் வசித்த கடைசி ஆர்மேனியரின் பெயர் மைக்கேல் ஸ்டீபன். அவரும் சென்னையை விட்டுச் சென்று பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அன்று சென்னையில் கொடிகட்டிப் பறந்த ஆர்மேனியர்களின் நினைவாக இன்று அவர்களின் பெயரிலிருக்கும் இந்தத் தெருவும் கட்டிடங்களும்தாம் உள்ளன.
இன்று காலம் மாறிவிட்டது. நகரமும் மாறி விட்டது. அன்று வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அந்தத் தெரு இன்று தெருவோரக் கடைகளால் நிரம்பி வழிகிறது. பாதையை அடைத்தபடி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்கும் வாகனங்களுக்கும் இடையே புகுந்து கார்களும் ஆட்டோக்களும் காதைக் கிழிக்கும் ஒலி எழுப்பிச் செல்கின்றன. இன்றும் அபூர்வமாக இந்தத் தெருவினுள் ரிக்ஷாக்கள் மனிதர்களைச் சுமந்து செல்கின்றன.
பாதையற்ற இந்தத் தெருவில் மனிதர்கள் நசுங்கியபடியே பரபரப்பாக நுழைந்து செல்கின்றனர். இந்தத் தெருவில் ஆர்மேனியர்கள் வடிவமைத்திருக்கும் தொன்மையான நுழைவு வாயில் மக்களின் பார்வையில் படாதவாறு துரித உணவகம் ஒன்று மறைத்து நிற்கிறது. அந்த வாயிலின் பெருமை அந்த உணவகத்துக்கோ அதைக் கடந்துசெல்லும் மனிதர்களுக்கோ தெரியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago