தெருவாசகம்: சென்னையின் பழமையான சாலை

By ச.ச.சிவசங்கர்

செ

ன்னை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணா சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துசெல்லும் காட்சி. இந்தச் சாலைக்கு அருகிலுள்ள ஒரு சாலைதான் பாரதி சாலை. அதன் பழைய பெயர் பைகிராப்ட்ஸ் சாலை. எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் இருக்கும் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்புக்கும் மெரினா கடற்கரை காமராஜர் சாலை கண்ணகி சிலை சந்திப்புக்கும் இடையே நீண்டிருக்கிறது இந்தச் சாலை.

யார் இந்த பைகிராப்ட்ஸ்?

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தனது கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணியில்தான் கழித்தார். இங்குள்ள பார்த்தசாரதி கோயிலில் இருந்த யானை தாக்கி நோய்வாய்ப்பட்ட பாரதி, இறந்தும் போனார். அவரது நினைவைப் போற்றும் விதத்தில் தமிழ்நாடு அரசு பைகிராப்ட்ஸ் சாலை என்று இருந்த பெயரை பாரதி சாலை என்று மாற்றியது. ஆனாலும், இன்றும் இந்தச் சாலையைப் பலர் பழைய பெயரிலேயே அழைக்கிறார்கள்.

பைகிராப்ட்ஸ் என்ற பெயர் ஆங்கிலேயே அதிகாரி ஒருவருடையது. செயின்ட் தாமஸ் பைகிராப்ட்ஸ், 1807 டிசம்பர் 4 அன்று இங்கிலாந்தில் ஹாம்ஸ்டீட் என்னும் இடத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை பாத் கிராமர் பள்ளியிலும், பட்டப் படிப்பை ட்ரினிட்டி கல்லூரியிலும் முடித்தார். கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் 1829-ம் ஆண்டு சென்னையில் பணிபுரிய வந்தார். எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கியவர் படிப்படியாகப் பதவி உயர்வுபெற்றார். தென்னார்க்காட்டில் வருவாய்த் துறையிலும் நீதித் துறையிலும் 1829-லிருந்து பத்தாண்டுகள் பணியாற்றினார். 1839-ல் பிரிட்டனுக்குத் திரும்பிச் சென்றவர் மீண்டும் 1843ல் இந்தியாவுக்குத் திரும்பியதும் சென்னை மாகாணத் தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டார்.

முதலில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பின் 1845-ல் வருவாய்த்துறைச் செயலாளராகப் பதவி உயர்த்தப்பட்டார். அதே ஆண்டில் சென்னை மாகாண அரசின் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் செயலாற்றினார். பின்னாளில், 1855 முதல் 1862 சென்னை மகாணத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்த்தப்பட்டார். இவர் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். பணி ஓய்வுக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய பைகிராப்ட்ஸ் 1894, ஜனவரி 29-ல் தனது 84-ம் வயதில் காலமானார்.

சாலையின் சிறப்புகள்

சென்னையின் மிகப் பழமையான இந்தச் சாலையில்தான் ஆற்காடு நவாபின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மஹால் உள்ளது. முன்னோடி மர்ம நாவல் எழுத்தாளரான வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்தச் சாலையில்தான் வீடு வாங்கி வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜாம்பஜார் என்று அழைக்கப்படுகிற இந்தச் சாலையின் மையத்தில் இருக்கும் சந்தை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தக மையமாக இருக்கிறது. இது சென்னையின் மிகப் பழமையான சந்தைப் பகுதிகளுள் ஒன்று. இந்தச் சாலையில் ஒரு பகுதி ராயப்பேட்டையில் இருக்கிறது. ராயப்பேட்டை மெத்தை, திரைகளுக்கான சந்தை. அதனால் அது தொடர்பான கடைகளும் இந்தச் சாலையில் இருக்கின்றன. திருவல்லிக்கேணி பகுதி துணிக் கடைகளுக்கான சந்தையாக இன்று இருக்கிறது. பெல்ஸ் சாலை என அழைக்கப்படும் பாபுஜெகஜீவன்ராம் சாலை சந்திப்புப் பகுதியில் பழைய புத்தகங்கள் விலைக்குக் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்