உயிர் கொடுத்து உருவான கால்வாய்

By ஜி.எஸ்.எஸ்

உழைப்பாளர் நாள்: மே1

வீடு கட்டுவது, ஆலயம் எழுப்புவது போன்ற எல்லாக் கட்டுமானங்களிலும் உழைப்பாளர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. இப்படியான அரிய, அர்ப்பணிப்பான உழைப்புடன் உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய். அது கட்டப்பட்டபோது அதன் உழைப்பாளர்கள் பட்ட பாடும் உயிரிழப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இந்த உழைப்பாளர் தினத்திலும் அவை நிச்சயம் நினைவுகூரத்தக்கவை.

பனாமா எனும் நாடு வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பகுதியில் ஒரு கால்வாய் அமைந்தால் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக இருக்கும் என எண்ணியது அமெரிக்கா.

காரணம் அதன் ஒரு பகுதியான சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மறுபகுதியான நியூயார்க்குக்கு ஏதாவது பொருளை கப்பலில் அனுப்ப வேண்டுமென்றால் தென் அமெரிக்காவை வலம் வந்துதான் செல்ல வேண்டியிருக்கும். பனாமா பகுதிக்குள்ளே கால்வாய் வெட்டப்பட்டால் கப்பல் பயணத்தில் சுமார் 8,000 மைல் தொலைவைக் குறைக்க முடியும். நேரம், பணம் இரண்டுமே நிறைய மிச்சமாகும். இந்தக் கால்வாய் பசிபிக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கக்கூடியது.

இப்போதைய பனாமா நாடு அப்போது கொலம்பியாவின் ஒரு பகுதியாக இருந்தது. கொலம்பியாவுக்கு ஒரு பயம். “ஏதாவது வல்லரசு பனாமா பகுதியை ஆக்ரமித்துக் கொண்டு கால்வாயையும் வெட்டி, அது தனக்கே சொந்தம் என்று கூறிவிட்டால் என்னாவது? எனவே 1846-ல் கொலம்பியா அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

பனாமா பகுதியில் நடைபெறும் அனைத்து வணிகத்திற்கும் அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும்.

பனாமா பகுதியில் கால்வாயை நிறுவ லூசியனட் நெப்போலியன் என்பவருக்கு அனுமதி அளித்தது. அவர் அந்த உரிமையை வேறொருவருக்கு விற்று விட்டார்.

பனாமா என்பது மிகப் பரந்த பகுதியாக இல்லை. பார்ப்பதற்கு மிக மெலிதாக இது இருக்கும். ஆனால் இதை மனதில் கொண்டு ‘இங்கு கால்வாய் தோண்டுவது சுலபம்’ என்று எண்ணினால் அது அந்த உழைப்பாளிகளுக்குச் செய்யும் துரோகம்.

கால்வாய் என்றதும் ஏதோ நடுவிலுள்ள மண்ணை நீக்கி கடலின் இருபகுதிகளையும் இணைப்பது என்பதல்ல. பனாமா கால்வாய் மிக மிக பிரம்மாண்டமான திட்டம். பனாமா கால்வாயை ஒரு கப்பல் கடக்க எட்டிலிருந்து பத்து மணி நேரம் ஆகும். சில இடங்களில் கடல் மட்டத்தைவிட 85 அடி மேலே கூட இது அமைக்கப்பட்டிருக்கிறது. கப்பலின் மாலுமிகள் தாங்களாகவே இந்தக் கால்வாயைக் கடக்க முடியாது. இதற்கென்றே தனிப்பயிற்சி பெற்ற ஒருவரைத்தான் பனாமா கால்வாய் நிர்வாகம் அனுமதிக்கும்.

அந்தக் காலத்தின் தலைசிறந்த பொறியியல் திட்டமாக இது கருதப்பட்டது. (இப்போதும் கூடப் பல பொறியியல் வல்லுனர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்). உரிமை பெற்ற பிரெஞ்ச் நிறுவனம் கால்வாயிலிருந்து ஏழு கோடி க்யூபிக் யார்டு மண்ணைத் தோண்டி எடுத்த பிறகு அந்த நிறுவனமே திவாலாகிவிட்டது (கணக்கில் தில்லுமுல்லு நடந்ததாகக் கூறப்பட்டு அதன் பல நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்).

பனாமா கால்வாய் கட்டுமானத்தின்போது மொத்தம் 20,000க்கும் அதிகமான கட்டுமானப் பணியாளர்கள் இறந்தனர். இதில் கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தினால் இறந்தவர்கள் பலரும் உண்டு. போதாக்குறைக்கு மஞ்சள் காய்ச்சல் மற்றும் மலேரியா காரணமாகவும் இறந்தனர். கட்டுமானத்தின்போது அங்கு நிலவிய மோசமான சூழலும் அசுத்தக் காற்றும் இதற்குக் காரணம்.. போதாக்குறைக்கு கொசுக்களின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவிய பிறகு அவசர அவசரமாக தேங்கிய நீரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இல்லையேல் கொசுக்கள் மேலும் தங்களைப் பெருக்கிக் கொள்ளுமே!

1901ல் அமெரிக்க நிறுவனம் ஒன்று இதற்கான கட்டுமானப் பணிகளை ஏற்றுக் கொண்டது. 1907ல் மாதம் பத்து லட்சம் க்யூபிக் யார்டு மண் தோண்டி எடுக்கப்பட்டது. உச்ச நேரத்தில் இது 30 லட்சத்துக்கும் அதிகமானது.

நான்கு அணைகளும் கட்டப்பட்டன. ஒவ்வொன்றின் நீளமும் 150 மீட்டரிலிருந்து 2,300 மீட்டர் வரை. இவற்றுக்கான பூட்டுகள் (அதாவது தண்ணீரை வரவிடாமல் தடுக்கும் பகுதிகள்) கட்டுவதற்குப் பெரும் சவாலாக விளங்கின. இவற்றுக்கு 10 லட்சம் கன மீட்டர் அளவு கொண்ட உறுதியான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது. பல பகுதிகளை இடித்துத் தள்ள வேண்டியிருந்தது.

தினமும் 10 மணி நேரம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இப்படி 40,000 பணியாட்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர். ஐம்பது நாடுகளைச் சேர்ந்த உழைப்பாளர்கள் பனாமா கால்வாய் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

டைனமைட் வைத்துத் தகர்ப்பது, உடையும் பாறைகள் இவற்றின் காரணமாகவும் பலவித நோய்கள் ஏற்பட்டன. ஐம்பது பவுண்டு எடை கொண்ட டைனமைட் பெட்டிகளை நூற்றுக்கணக்கான முறை சுமந்து செல்வது, எதிர்பாராமல் சற்ற முன்னதாகவே பாறையைத் தகர்த்துவிட்டால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவை வேறு.

இனவேறுபாடுகள் வேறு தலை காட்டின. அதிக சிரமமான வேலைகள் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து வந்திருந்த கறுப்பர் இன மக்களுக்கு அளிக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை அள்ளிச் செல்வதற்கென்றே சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. (கால்வாய்க்கு அருகில்தான் ரயில் பாதை இருந்தது). சரிந்து விழுந்திருந்த மண் பகுதிகளிலிருந்து பின்னர் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 27,000 பேர் இறந்ததாகக் கணக்கெடுக்கிறார்கள்.

1914 ஆகஸ்ட் 14 அன்று பனாமா கால்வாய் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. 48 மைல் நீளம் கொண்ட கால்வாய்!

உலக வரைபடத்தைப் பார்க்கும்போது கிழக்கு மேற்காக இந்தக் கால்வாய் கட்டப்பட்டிருக்கும் என்று நினைப்பார்கள். இல்லை. தெற்காகச் சென்று, பிறகு கிழக்குப் பகுதியில் திரும்பிச் செல்கிறது இந்தக் கால்வாய்.

இன்று 13,000க்கும் அதிகமான கப்பல்கள் தினந்தோறும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துகின்றன. 160 நாடுகள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. 10,000 ஊழியர்கள் இன்று இந்தக் கால்வாயை நிர்வகிக்கிறார்கள். 24 மணி நேரமும் இயங்குகிறது இந்தக் கால்வாய். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாக பனாமா கால்வாய் மதிக்கப்படுகிறது. இதை வடிவமைத்த மேதைகளுக்கும்,

பெரும் சவால்களுக்கிடையே உழைத்த கட்டுமானப் பணியாளர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் செய்வதுதான் முறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்