ம
ருத்துவர்கள் என்றால் ‘பிரிஸ்கிரிப்ஷன்’ எழுதுவதோடு சரி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், மருத்துவர்களில் சிலர் எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் புத்தகங்கள், அவர்கள் எழுதும் பிரிஸ்கிரிப்ஷனை விட, நன்றாகவே விற்பனையாகின்றன. சிறந்தவையாகவும் இருக்கின்றன.
சிலருக்கு வீட்டில் சிக்கல் இருக்கும். சிலருக்கு வீடே சிக்கலாக இருக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள், ‘கல்யாணத்தைப் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்’ என்றார்கள். இரண்டுமே சிக்கல் நிறைந்தவை.
மருத்துவர் வி.ஸ்ரீனிவாஸ் எழுதியிருக்கும் ‘எ டேல் ஆஃப் டூ ஹோம்ஸ்’ எனும் புத்தகம், ‘வீடே சிக்கலாக இருக்கும்’ அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறது. அது அவரது சொந்த அனுபவம்.
மலையில் ஒரு மனை
வேலூரில் மருத்துவக் கல்வி பயின்ற ஸ்ரீனிவாஸ், சிறுநீரகப் புற்றுநோய் மருத்துவராக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார். அவரும் அவருடைய மனைவியும் மலைப் பிரதேசம் ஒன்றில், சுற்றுலாப் பயணிகளுக்கான ‘ஹோம்ஸ்டே’ ஒன்றைக் கட்ட விரும்புகிறார்கள்.
தன் பள்ளிக் கல்வியை நீலகிரி மாவட்டத்தில் முடித்த ஸ்ரீனிவாஸுக்கு, அங்கேயே ‘ஹோம்ஸ்டே’ கட்ட விருப்பம். அதற்கு அவருடைய மனைவியும் சம்மதம் தெரிவிக்கிறார்.
நீலகிரி போன்ற ஒரு மலைப் பிரதேசத்தில் வீடு கட்டுவது என்பதே பெரிய விஷயம். காரணம், கட்டுமானப் பொருட்களை எல்லாம் ‘ப்ளெய்ன்ஸி’ல் (நீலகிரிவாசிகள், மேட்டுப்பாளையம், கோவை போன்று மலைக்குக் கீழே உள்ள பகுதிகளை ‘ப்ளெய்ன்ஸ்’ என்றுதான் அழைப்பார்கள்!) இருந்து கொண்டுவர வேண்டும். அதற்கான போக்குவரத்து இடர்கள் (மழைக் காலத்தில் அங்கு நிலச்சரிவு, மரம் விழுவது போன்ற விஷயங்கள் ஏற்படுவதெல்லாம் சகஜம். அதைத் தாண்டி ‘லோடு’ ஏற்றி வருவது என்பது மிகவும் கடினம்!), மின்சாரம், குடிநீர் வசதி போன்றவற்றைப் பெறுவதற்கான அரசு அனுமதி என மலையில் வீடு கட்ட நினைப்பவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் அநேகம்.
வசிப்புக்கு ஒரு சான்று
மருத்துவருக்கும் இப்படியான சிக்கல்கள் எல்லாம் ஏற்படுகின்றன. அதை எப்படி அவர் சமாளித்தார் என்பதை ஒரு ‘ட்ராக்’கில் சொல்ல, இன்னொரு ‘ட்ராக்’கில், மும்பையில் தான் வசித்து வரும் ‘ரெய்ஸ் ரெய்ன் ரெஸிடென்ஸி’ (ஆர்.ஆர்.ஆர். காம்ப்ளெக்ஸ்) எனும் அடுக்குமாடிக் கட்டிடத்தைக் காப்பாற்றிய கதையைச் சொல்கிறார். அந்தக் கட்டிடத்தை, விதிகள் மீறிக் கட்டியிருப்பதாகக் கூறி இடிக்க முடிவெடுக்கிறது மும்பை நகராட்சி. அதற்கு எதிராக, அந்த அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
அது குறித்து அவர் பேசும்போது, ‘ஆக்குபேஷன் சர்டிஃபிகேட்’ எனும் ஒரு விஷயத்தைப் பதிவுசெய்கிறார் மருத்துவர். அந்தச் சான்றிதழை, அரசிடமிருந்து பெற்று, அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளுக்கு வழங்க வேண்டியது, அதைக் கட்டும் ‘டெவலப்பர்’களின் கடமை. அந்தச் சான்றிதழைப் பெறாமல், அதில் குடியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. ஆனால், ஆர்.ஆர். ஆர்.காம்ப்ளெக்ஸைக் கட்டியவர்கள், குடியிருப்பு வாசிகளுக்கு அந்தச் சான்றிதழைத் தராமல் இழுத்தடித்தார்கள். ஏன் என்றால், அவர்கள், அரசிடம் சமர்ப்பித்த ‘பிளான்’ வேறு. கட்டப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை வேறு. இதனால், எங்கே அந்தச் சான்றிதழை வாங்கச் செல்லும்போது மாட்டிக்கொள்வோமே என்ற அச்சத்தில் அந்த டெவலப்பர்கள் கடைசிவரை சான்றிதழை வாங்கவே இல்லை. இறுதியில், குடியிருப்புவாசிகள் குற்றவாளிகளாயினர்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக, குடியிருப்புவாசிகள் நடத்திய போராட்டத்தால்தான், பின்னாளில் நாடாளுமன்றத்தில் ‘ஆக்குபேஷன் சர்டிஃபிகேட்’ கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக சட்ட மசோதா ஒன்றுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
வீடாகும் கூடு
இவ்வாறு, கட்டுமானம் சார்ந்த பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்து, ஒரே காலத்தில் ‘ஒரு பிறப்பு’ (ஹோம்ஸ்டே உருவாதல்), ‘ஒரு இறப்பு’ (மும்பை அடுக்குமாடி இடிக்கப்படுவது) என்ற இரண்டு எதிரெதிர் விஷயங்களை அவர் எப்படி அணுகினார் என்பதைக் கொஞ்சம் கற்பனை, நிறைய உண்மைகள் கலந்து சொல்லியிருக்கிறார் மருத்துவர்.
கோத்தகிரியில், மருத்துவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து கட்டிய ‘ரேவன்ஸ் நெஸ்ட்’ எனும் ‘ஹோம்ஸ்டே’, சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு அமைப்பது, இயற்கை விவசாய முறையில் காய்கறிகளைப் பயிரிடுவது போன்ற சுற்றுச்சூழலைக் காக்கின்ற விஷயங்களிலும் ஈடுபடுவதால், இதர தங்கும் விடுதிகளிலிருந்து தனித்துத் தெரிகிறது.
கட்டிடம் கட்டுவதை பிரசவத்துடன் ஒப்பிடுகிறார் மருத்துவர். அதனால், இந்தப் புத்தகத்தில் பிரசவம் தொடர்பான மருத்துவச் சொற்களையே ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் மருத்துவர் சூட்டியிருப்பது சிறப்பு. அது சரி… வீடென்பதே அன்பாலே உருவாகும் கூடுதானே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago