சென்னை ரியல் எஸ்டேட் : எப்படி இருக்கிறது வீடு விற்பனை?

By கனி

நா

ட்டின் 60 சதவீத வாகனம் தொடர்பான ஏற்றுமதிகள் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில்தான் நடைபெறுகின்றன. அத்துடன், பொறியியல், உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், துறைமுகம் தொடர்பான வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்னை மாநகரம்தான் அடையாளமாக இருக்கிறது.

இந்தியாவின் நான்காவது பெரிய பொருளாதார நகரமாகத் தற்போது சென்னை விளங்குகிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆய்வு ஒன்றில், உலகின் வேகமாக வளரும் பத்து நகரங்களில் சென்னையும் இடம்பெற்றிருக்கிறது. சென்னையில் பெருமளவிலான வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.

குடியிருப்புச் சந்தையின் வளர்ச்சி

2017-ம் ஆண்டில் சென்னையில் 4,418 புதிய குடியிருப்புப் பகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 45,000 குடியிருப்புப் பகுதிகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஎம்ஆர், பெரும்பாக்கம், போரூர், ஈசிஆர், பள்ளிக்கரணை போன்றவை விருப்பமான மைக்ரோ சந்தைகளாக இருக்கின்றன. இந்த இடங்களில் குடியிருப்புச் சொத்துகள் ஒரு சதுர அடிக்கு ரூ. 3,500 முதல் ரூ. 8,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. 2013-2017 வரை, 1.2 லட்சம் குடியிருப்புப் பகுதிகள் சென்னையின் குடியிருப்புச் சந்தையில் இணைந்திருக்கின்றன.

தென் சென்னையின் வளர்ச்சி

சென்னையின் நான்கு மண்டலங்களில் (மத்திய சென்னை, மேற்கு சென்னை, வட சென்னை, தென் சென்னை), தென் சென்னை மற்ற மண்டலங்களைப் பின்னுக்குத் தள்ளி வேகமாக வளர்ந்துவருகிறது. 2013-ம் ஆண்டிலிருந்து சென்னையின் 65 சதவீதக் குடியிருப்புத் தேவைகளைத் தென் சென்னை நிறைவேற்றியிருக்கிறது. தென் சென்னையைத் தொடர்ந்து மேற்கு சென்னை, நகரின் குடியிருப்புத் தேவைகளை 27 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறது.

தென் சென்னையின் இந்த வளர்ச்சிக்கான காரணங்களாக ‘ஐடி’ நிறுவனங்களும் உற்பத்தித் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. அத்துடன், வளர்ந்துவரும் உள்கட்டமைப்பு வசதிகளும் ஓஎம்ஆர், துரைப்பாக்கம், பல்லாவரம் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தையை ஏற்றம்காண வைத்திருக்கின்றன.

விற்பனையாகாத குடியிருப்புகள் குறைவு

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் சென்னையில்தான் விற்பனையாகாத குடியிருப்புப் பகுதிகள் குறைவாக இருக்கின்றன. சென்னையில் 17,500 கோடி ரூபாய் (2017 நான்காவது காலாண்டின்படி) மதிப்பில் 27,000 குடியிருப்புப் பகுதிகள் விற்பனையாகாமல் இருக்கின்றன. சென்னையில் விற்பனையாகாத குடியிருப்புகள் 32 மாதங்களில் முதற்கட்ட விற்பனையை முடித்துவிடுகின்றன. டெல்லி (என்சிஆர்), மும்பை (எம்எம்ஆர்) போன்ற நகரங்களில் முதற்கட்ட விற்பனையை முடிக்க முறையே 75 மாதங்கள், 61 மாதங்களாகின்றன. சென்னையில் விற்பனையாகாத குடியிருப்புப் பகுதிகளில் 69 சதவீத விற்பனையாகாத குடியிருப்புகளுடன் தென் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், தற்போது இந்தப் பகுதியில் உருவாகியிருக்கும் தேவைகளால் இந்த குடியிருப்புப் பகுதிகளின் விற்பனை வேகமாக நடைபெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நடுத்தர வருவாய்ப் பகுதிகள்

நடுத்தர வருவாய்க் குடியிருப்புப் பகுதிகளின் விலை ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையாகாத குடியிருப்புப் பகுதிகளில் நடுத்தர வருவாய்ப் பகுதிகள் 44 சதவீதம். இந்தப் பகுதிகள்தாம் சென்னையின் குடியிருப்புச் சந்தையின் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதைத் தொடர்ந்து குறைந்த விலை குடியிருப்புப் பகுதிகள் (ரூ.40 லட்சத்துக்கும் குறைவு) சந்தையில் 29 சதவீதமாக

இருக்கின்றன. அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’ போன்ற திட்டங்களின் அறிவிப்பால்

குறைந்த விலை குடியிருப்புப் பகுதிகளுக்கும் நடுத்தர வருவாய்ப் பகுதிகளுக்குமான

இந்த வித்தியாசம் உருவாகியிருக்கிறது.

விளைவுகளும் காரணங்களும்

சென்னையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தை 2015 வெள்ளம், அரசியல் நிலையற்ற தன்மை போன்றவற்றால் தொடர்ச்சியாகச் சரிவை எதிர்கொண்டது. அதனால், 2017-ம் ஆண்டில் குறைவான குடியிருப்புப் பகுதிகளே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. குறைவான விநியோகம், நிலையான தேவை என 2017-ம் ஆண்டில் குடியிருப்புச் சந்தை மேம்பட ஆரம்பித்திருக்கிறது. 2017 நான்காவது காலாண்டில் விற்பனையாகாத குடியிருப்புகள் 24 சதவீதமாகக் குறைந்திருக்கின்றன.

இந்திய குடியிருப்புச் சந்தையின் தற்போதைய மந்த நிலையையும் மீறி, சென்னையின் குடியிருப்புச் சந்தை நிதானமாகப் புதிய ஏற்றத்தைச் சந்தித்துவருகிறது. புதிய உள்கட்டமைப்பு வசதிகள், பெருகிவரும் பணிபுரியும் மக்கள்தொகை காரணமாகச் சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்