வீடு கட்டப் பெரும்பாலானோர் வங்கிக் கடனைத்தான் சார்ந்திருக்கிறார்கள். அதனால் வங்கிக் கடன் குறித்த சந்தேகங்களும் அதிகம். வங்கிக் கடன் திட்டங்கள் பலவற்றில் இல்லாத சில அம்சங்கள், வீட்டுக் கடன் திட்டத்தில் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம்.
சாதாரணமாக வீட்டுக் கடனை 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. சொல்லப்போனால் வீட்டுக் கடனுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகை தருவதற்கான முக்கியக் காரணம் வங்கிக்குக் கிடைக்கக்கூடிய பாதுகாப்புதான். வாங்கக்கூடிய வீட்டின் உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் கடன் அளிப்பார்கள். வாகனக் கடன் அல்லது தொழிற்சாலைகளுக்குத் தேவையான தளவாடங்கள் வாங்குவதற்குக் கடன் வாங்கினால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். ஏனென்றால், அவற்றின் தேய்மானம் அதிகம்.
கடனைத் திருப்பிச் செலுத்தாதபோது அந்தத் தளவாடங்களை விற்று வங்கிக்குரிய தொகையைத் திரும்பப் பெற முடியாது. அதே நேரத்தில் வீட்டு மனையைப் பொறுத்தவரை பல ஆண்டுகள் கழித்து விற்றாலும், அவற்றின் மதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் போகும். குறையாது. உலக அளவிலும் இதே நிலைமைதான். மிக அரிதாகச் சில கால கட்டங்களில் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அது விதிவிலக்கு. உலகில் உள்ள நிலப்பரப்பு அதிகரிப்பதில்லை. ஆனால், மக்கள் தொகை அதிகரிக்கிறது. வீடுகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கடனைத் திருப்பிக் கட்டுவதற்குப் போதிய அவகாசம் கொடுத்தாலும், சில நிபந்தனைகள் உண்டு. கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் தவணை. முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கின்றன. ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தவணை செலுத்துவதற்கான வருமானம் இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயது வரைகூடக் கடனை அடைக்கும் அவகாசத்தை வங்கிகள் தரும். ஆனால் கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இணை விண்ணப்பதாரர், அதற்கான உத்தரவாதத்தை வங்கிக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கின்றன. நமது மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான தவணை, பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, நாம் நமது சம்பளத்தில் குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகே வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது. காரணம், தவணை கட்டுவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது, குடும்பச் செலவுக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படக் கூடாது என்பதுதான்.
கூடுதலாகக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் இணை விண்ணப்பதாரரை இணைத்துக்கொள்ளலாம். வீட்டுக் கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது முதலில் கடன் கேட்பவரின் வருவாயைத்தான் வங்கிகள் பரிசீலிக்கும். ஈட்டும் வருவாய், வயது எனச் சில விஷயங்களைக் கருத்தில்கொண்டுதான் வீட்டுக் கடனை நிர்ணயிப்பார்கள். கணவன் மட்டுமே ஈட்டும் வருவாயைக் கொண்டு வழங்கப்படும் வீட்டுக் கடன் போதுமானதாக இல்லை என்று கருதினால், மனைவியை இணைத்துக்கொண்டும் கூடுதல் வீட்டுக் கடன் கேட்கலாம். ஆனால், அதற்கு மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும். ஒரு வேளை மகன் வேலைக்குச் சென்றால் தந்தை - மகன் வருவாயைக் காட்டி கூடுதல் வீட்டுக் கடன் கேட்கலாம்.
கணவன்-மனைவி அல்லது தந்தை-மகன் எனக் கூட்டாகச் சேர்ந்து கடன் வாங்கினால் விரைவாகத் தவணையைச் செலுத்த வேண்டும் என்றில்லை. கூட்டு வீட்டுக் கடனை தவணையாகச் செலுத்த 5 முதல் 25 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. வயது, பொருளாதார நிலைமை, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வருடம் என இதையும் கணக்கில் கொண்டு
தவணையைச் செலுத்தக் கால அவகாசம் வழங்குவார்கள். 25 வயதில் கடன் வாங்கினால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரைகூடக் கால அவகாசம் கிடைக்கும். ஆனால், 50 வயதில் கடன் வாங்கினால், அதை வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, இந்தச் சூழ்நிலையில் செலுத்தும் மாதத் தவணைத் தொகை அதிகமாகிவிடும்.
ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகமாக இருக்கின்றன என்பதற்காக சாவகாசமாகத் தவணையைச் செலுத்த நினைக்கக் கூடாது. தவணைத் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதில் மொத்தமாகச் செலுத்தும் தவணைத் தொகையைச் சேர்த்துப் பார்த்தால் அதிகத் தொகை கட்ட வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் தேவையில்லாமல் நீண்ட காலத் தவணையைத் தேர்வு செய்யாமல் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பது நல்லது.
வீட்டுக் கடன் விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்கள் அவசியம். விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடம் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகிய ஆவணங்களுடனும் பூர்த்திசெய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago