பழைய வீட்டின் மீது ஒரு புதிய வீடு

By ரோஹின்

வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை எப்போது வேண்டுமானாலும் வரலாம். வீடு கட்ட விரும்பினால் அதை எளிதில் செயல்படுத்திவிடலாம். ஆசை மட்டும் இருந்தால் போதுமா அதற்குத் தேவையான பணம் வேண்டாமா என மலைக்காதீர்கள். வீடு கட்ட வேண்டும் என்ற ஆழமான ஆசை உங்களை உந்தித் தள்ளி அதற்குத் தேவையான நிதியைத் திரட்டச் செய்யும். வீடு என்று சொன்னால் எப்படியான வீடு? சிலர் தனி வீடு கட்டுவார்கள். சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவார்கள். சிலர் ஏற்கெனவே இருக்கும் வீட்டின் மீது மாடி எழுப்பத் திட்டமிடுவார்கள்.

இப்படி ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டின் மீது மாடி எழுப்ப கடன் கிடைக்குமா போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கலாம். இதில் ஐயப்படத் தேவையில்லை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டின் மீது மாடி எழுப்ப கடன் கிடைக்கிறது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்..தேவையான ஆவணங்கள் இருந்தால் நீங்கள் எளிதில் கடன் பெற்று வீடு கட்டிவிடலாம். இத்தகைய மாடி வீடு கட்டுவதற்கான சாதாரண நடைமுறைகள் என்னவென்று பார்ப்போமா?

வீட்டை நீங்களே கட்டுமானப் பொருட்கள் வாங்கி கட்டிடத் தொழிலாளிகளை வைத்தும் கட்டலாம். இதில் உங்களுக்குச் செலவு கொஞ்சம் குறையும். ஆனால் வேலையாட்களை வைத்து வேலை வாங்குவதற்குத் தனிச் சாமர்த்தியம் வேண்டும். இல்லை என்றால் ஒரு நல்ல கட்டுமான நிறுவனத்தை அணுகி உங்கள் கட்டிடப் பணிகளை அவர்களிடம் ஒப்படைக்கலாம். இப்படி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் நெருங்கிய நண்பர்களிடமும் உறவுகளிடமும் தீர ஆலோசித்து ஒரு முடிவெடுங்கள். ஏனெனில் பல கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டித் தருவதில் பல சிக்கல்களை உருவாக்கிவிடும்.

அதே நேரத்தில் நேர்மையான சொன்ன படி வாடிக்கையாளருக்கு வீட்டை உருவாக்கித் தரும் நிறுவனங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றை விசாரித்து அறிந்து அவர்களை நாடுங்கள். வீட்டுப் பணிகளை மேற்பார்வையிட தகுந்த ஆட்கள் இல்லாதவர்கள் கட்டுமான நிறுவனத்தில் இந்தப் பணிகளை ஒப்படைத்துவிடுவது நல்லது. இடையிடையே கட்டிடப் பணியை மேற்பார்வை செய்துகொண்டால் மட்டும் போதும்.

தகுந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்றால் அவர்களை அழைத்து உங்களது வீட்டைக் காட்டி அதன் மீது எப்படியான வீட்டை அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்துங்கள். அவர்கள் உங்கள் வீட்டின் ஆயுள், அதன் பரப்பு, அந்த நிலத்தின் தன்மை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து மாடி வீட்டுக்கான ஆலோசனையையும் மாடி வீட்டுக்கான வரைபடத்தையும் உருவாக்குவார்கள். வரைபடத்துக்கு உரிய அனுமதி பெற்ற பின்னர், வீடு கட்டத் தேவைப்படும் பணத்துக்கான கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டிட நிறுவனங்கள் ஒரு சதுர மீட்டருக்கு இவ்வளது தொகை என்று நிர்ணயித்திருப்பார்கள். தரைத் தளத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயித்திருக்கிறார்களோ அதே அளவுக்குத் தான் மாடி வீட்டுக்கும் நிர்ணயிப்பார்கள். தரைத் தளத்துக்கு அஸ்திவாரம் போன்ற பணிகள் உள்ளன ஆனால் மாடி வீட்டுக்கு அது கிடையாதே என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், அவர்களைப் பொறுத்தவரை மாடி வீட்டுக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கூறி அதே தொகை ஆகும் என்று கூறுவார்கள். ஆகவே, உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்து கட்டுமானத்துக்கான ஒப்பந்தத் தொகையைப் பேசிக் கொள்ளுங்கள். அத்துடன் எழுத்துபூர்வமான ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளுங்கள். அது தான் இருவருக்குமே நல்லது.

வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் நிதியுதவிக்கு உங்களுக்கு எந்த வங்கி வசதியோ அந்த வங்கியையோ எல்ஐசி போன்ற வேறு ஏதாவது நிறுவனங்களையோ நீங்கள் அணுகலாம். அவற்றிலிருந்து நீங்கள் கடனைப் பெற்றுக் கொள்ளலாம். கடனுக்கான அவர்களது நடைமுறைகளை அறிந்து உரிய விதத்தில் அவற்றைப் பின்பற்றினால் கடன் கிடைப்பது சுலபமாகும்.

கடனை மொத்தமாகத் தராமல் ஒவ்வொரு நிலையாகத் தருவார்கள். வீடு கட்ட ஆகும் தொகை முழுவதும் உங்களுக்குக் கிடைக்காது. அதில் எழுபது எண்பது சதவீதம் மட்டுமே கிடைக்கும். ஆகவே, எஞ்சிய தொகைக்கு ஏதேனும் ஏற்பாட்டை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கும். வீடு கட்ட ஆகும் செலவைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் நீங்களே குறித்துவைத்துக்கொள்ளுங்கள். இதற்காக ஒரு தனி நோட்டுப் புத்தகத்தையோ டைரியையோ வைத்து அதில் ஒவ்வொரு செலவையும் தனியே எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

சிறு சிறு செலவையும் விடாமல் எழுதி வைத்துவிடுங்கள். அது உங்களுக்குப் பல வகையிலும் உதவியாக இருக்கும். வீடு கட்ட ஆன செலவை நீங்கள் பிறருக்குத் துல்லியமாகத் தர முடியும். அதே நேரத்தில் கட்டுமான நிறுவனத்துக்குக் கொடுத்த பண விஷயங்களும் இதில் துல்லியமாகப் பதிவாகிவிடும். எனவே நிதி விவகாரத்தில் ஏதேனும் சர்ச்சை உருவாக வழியில்லை.

வீட்டைக் கட்டத் தொடங்கிய பிறகு வீட்டில் பலவித வாக்குவாதங்கள் எழும். அத்தனையையும் சற்றுப் பொறுமையாக எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் வீடு கட்டுவது என்பது சாதாரணப் பணியல்ல. அதில் எல்லாவற்றையும் பொறுமையாக எதிர்கொண்டால் தான் வீட்டின் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும். சின்ன சின்ன விஷயங்களில்கூட வீட்டில் உள்ள உறுப்பினர்களின் ஆலோசனையுடன் முடிவெடுங்கள். அது தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கும். தனிப்பட்ட ஒருவரே முடிவெடுப்பது என்பது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும். அவை அனைத்தையும் பரிசீலிக்கும்போது ஒரு விஷயம் குறித்த ஒரு முழுமையான பார்வை கிடைக்கும். அதனடிப்படையில் முடிவு செய்யும்போது அந்த முடிவில் பெரிய சிக்கல்கள் எழ வாய்ப்பில்லாமல் போய்விடும்.

நிதி வரத்து, கட்டுமானப் பொருட்கள் கிடைப்பது, வேலையாட்கள் ஒத்துழைப்பது, இயற்கையின் ஒத்துழைப்பு போன்றவை ஒழுங்காக அமைந்துவிட்டால் ஆறு மாதங்களிலிருந்து எட்டு மாதங்களுக்குள் உங்கள் வீடு தயாராகிவிடும். உங்கள் கற்பனையில் மட்டுமே கண் சிமிட்டிய உங்கள் வீடு இப்போது உங்கள் கண்ணெதிரே கம்பீரமாக உங்களைப் பார்த்துக் கையசைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்