பொருள் புதிது 08: சாவியில்லா ஸ்மார்ட் பூட்டு

By முகமது ஹுசைன்

ஸ்மார்ட் வீடு இப்போது பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. அலுவலகத்திலிருந்தே வீட்டின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி, வீட்டைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் பாதுகாப்புச் சாதனம், பாடல்களை ஒலிபரப்பும் மீடியா பிளேயர் எனப் பல ஸ்மார்ட் உபகரணங்கள் இப்போது வீடுகளில் இடம்பிடித்துவிட்டன. இதன் தொடர்ச்சியாகச் சாவி இல்லாத ஸ்மார்ட் பூட்டுகள் வீட்டுக் கதவுகளில் பொருத்தப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் பூட்டுகள் எப்படி வேலை செய்கின்றன?

மின்னணுப் பூட்டு

ஸ்மார்ட் பூட்டு என்பது ஒரு மின்னணுப் பூட்டு. இது கம்பியில்லா இணைப்பையோ புளுடூத் இணைப்பையோ பயன்படுத்தி மற்ற சாதனங்களுடன் தொடர்புகொள்கிறது. இது தனக்கென்று செயலியைக் கொண்டிருக்கும். இதை நிறுவும்போது ஸ்மார்ட் ஹப் அல்லது ஸ்மார்ட் கைப்பேசியில் அதற்குரிய செயலியைத் தரவிறக்கம் செய்து இணைக்க வேண்டும். அதன் பின் இது தானாகவே திறந்து மூடும் வண்ணம் இயங்கும்.

சொல்லப்போனால் இந்த ஸ்மார்ட் பூட்டுதான் ஸ்மார்ட் வீடுகளில் முக்கியமானது. இது நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களை வெறுமனே வீட்டுக்குள் செல்லவும் வெளியேறவும் மட்டும் அனுமதிப்பதில்லை, நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் வருவோர் போவாரைக் கண்காணிக்கும். உங்கள் கைப்பேசி மூலம் இதைத் திறக்கலாம்; மூடலாம். இது தவிர உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வந்தால் தானாகவே திறக்கும் வசதியையும் இதில் ஏற்படுத்திக்கொள்ளலாம். மேலும், சில குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் விரும்பும் சில குறிப்பிட்ட மனிதர்களைத் தானாகவே அனுமதிக்கும் வசதியும் இதில் உண்டு. கைப்பேசி மூலம் மட்டும் அல்லாமல் இதைக் குரல் வழியாகவும் இயக்கலாம், சில ஸ்மார்ட் பூட்டுகள் உங்கள் தோற்றத்தை உணர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை.

இதை ஸ்மார்ட் ஹப் உடன் இணைத்துக்கொண்டால், நீங்கள் கதவைத் திறக்கும் போது, வீட்டினுள் விளக்குகளும் மின்விசிறியும் வெப்பநிலை சீராக்கியும் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.

ஸ்மார்ட் பூட்டு வகை

இதில் உங்கள் தேர்வு எது என்பது உங்களின் தேவைகளையும் பல காரணிகளையும் பொருத்து உள்ளது. முக்கியமாக அதன் விலையும் ஒரு தவிர்க்க முடியாத காரணி. இந்த இரண்டிலும் உள்ள சாதக, பாதகங்களைத்தெரிந்துவைத்திருந்தால் நம் தேர்வு குறித்து பின்னால் வருந்தும் நிலை ஏற்படாது. சில ஸ்மார்ட் பூட்டுகள் வைஃபை, புளுடூத் வசதியைக்கொண்டிருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக வைஃபை ஸ்மார்ட் பூட்டு தன்னகத்தே நிறைய சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். இதை உங்கள் வீட்டு வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்க முடியும். இதனால் இதைத் தொலைதூரத்திலிருந்தும் இயக்க முடியும். ஆனால், இதை இணையத்துடன் இணைத்திருப்பதால் சில விஷமத்தனமான ஊடுருவல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த இணையம் சார்ந்த பாதுகாப்புக் குறைபாடுகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

புளூடூத் ஸ்மார்ட் பூட்டு மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால், இதை நாம் இணையத்துடன் இணைப்பதில்லை. இது குறிப்பிட்ட கைப்பேசிக்கும் ஸ்மார்ட் பூட்டுக்கும் இடையே உள்ள நம்பகமான இணைப்பைக் கொண்டுதான் இயங்கும். புளூடூத் ஸ்மார்ட் பூட்டை வெகு தொலைவிலிருந்து இயக்க முடியாது என்பது ஒரு குறை.

நிறுவுதல்

எல்லா ஸ்மார்ட் பூட்டுகளையும் நிறுவுவது எளிது என்றாலும் சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மிகவும் எளிதாக இருக்கின்றன. இவை பொதுவாக இரண்டு பாகங்களைக்கொண்டிருக்கும். ஒரு பாகத்தைக் கதவின் முன் புறமும் இன்னொரு பாகத்தைக் கதவின் பின்புறமும் பொருத்த வேண்டும். வெளிப் பகுதி பொதுவாகத் தொடு உணர்ச்சி கொண்ட திரையைக் கொண்டிருக்கும். பின் புறப் பகுதி தாழ்ப்பாளைக் கொண்டதாக இருக்கும். வீட்டின் கதவில் உள்ள பழைய பூட்டை அகற்றிவிட்டு இதைப் பொருத்த வேண்டும்.

சந்தையில் கிடைக்கும் தயாரிப்புகள்

வழக்கமான பூட்டுகளுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட் பூட்டுகளுக்கு நிறைய தயாரிப்புகள் இல்லைதான். ஆனாலும் ஆகஸ்ட், யாலே,டனாலாக் போன்ற சில நல்ல தயாரிப்புகள் அமேசான் போன்ற இணையத்தில் கிடைக்கின்றன.

விலை

வழக்கமான பூட்டைத் தவிர்த்து ஸ்மார்ட் பூட்டைத்தேர்வு செய்யும்போது நம் மனத்தில் தோன்றும் முதல் எண்ணம் அதன் விலை பற்றியதாகத்தான் இருக்கும். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட் பூட்டின் விலை சாதாரணப் பூட்டின் விலையைவிடப் பன்மடங்கு அதிகம்தான். சில ஸ்மார்ட் பூட்டுகள் சந்தையில் ஏழாயிரம் ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. வைஃபை வசதி, குரல் வழி சேவை, மின்னஞ்சல் வசதி, அலாரம் வசதி போன்ற சிறப்பியல்புகளைப் பொருத்து அதன் விலையும் அதிகரிக்கும். இதன் அதிகபட்ச விலை ரூபாய் இருபதாயிரம்.

திறந்திடு சீசே

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருவது மாதிரி திறந்து விடு சீசே என்று சொன்னவுடன் திறக்கும் இந்த ஸ்மார்ட் பூட்டுகள் நம் வீட்டின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. காகிதம் இல்லாத பணம் போன்று இப்போது சாவி இல்லாத பூட்டின் உபயோகமும் மிகவும் பரவலாகிவருகிறது. பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இதன் விலையும் வரும் நாட்களில் குறைந்து அனைவரும் உபயோகிக்கும் வண்ணம் மாறலாம்.

# கம்பியில்லா இணைப்பையோ புளுடூத் இணைப்பையோ பயன்படுத்தித் திறக்கக்கூடியது ஸ்மார்ட் பூட்டு.

# ஸ்மார்ட் ஹப் அல்லது ஸ்மார்ட் கைப்பேசியில் ஸ்மார்ட் பூட்டுக்குரிய செயலியைத் தரவிறக்கம் செய்து இணைக்க வேண்டும்.

# உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வந்தால் தானாகவே திறக்கும் வசதியையும் இதில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

# இந்தப் பூட்டை ஸ்மார்ட் ஹப் உடன் இணைத்துவிட்டால், கதவைத் திறந்ததும் விளக்குகளும் மின்விசிறியும் வெப்பநிலைச் சீராக்கி போன்ற சாதனங்களைத் தானாக இயக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்