பொருள் புதிது 18: சமையலை எளிதாக்கும் ஸ்மார்ட் அடுப்பு

By முகமது ஹுசைன்

வீடு என்பது வெறும் சுவர்களும் தரையும் கூரையும் மட்டும் கொண்டதல்ல. அதனுள் இருக்கும் வீட்டு உபயோக சாதனங்களையும் உள்ளடக்கியது. வீட்டில் வசிக்கும் மனிதர்களைப் போன்று இந்தச் சாதனங்களும் வீடுகளுக்கு இன்றியமையாதவை. அங்கு வசிக்கும் மனிதர்களைப் போன்று அங்கிருக்கும் சாதனங்களும் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதும் பேசிக்கொள்வதும் சாத்தியமற்றதாகத்தான் இருந்தது.

இதனால் நம் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் இந்தச் சாதனங்களின் மூலம் தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொள்ளும் வீடுகள் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று. ஆனால், ஸ்மார்ட் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய நவீன வீடுகள் அந்தக் கற்பனை வடிவத்துக்கு உயிர் கொடுத்துள்ளன.

ஸ்மார்ட் தொழில்நுட்பம் கொண்டு சமையல் போன்ற நம் வீடுகளின் சிக்கலான பணிகளை நிறைவேற்ற முடியுமா என்று பெரும் நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அதற்காக இன்று விஞ்ஞானிகளால் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் திறனுக்குச் சவால் விடப்படுகிறது. ஸ்மார்ட் தொழில்நுட்பமும் அதற்குச் சளைக்காமல் தன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டேயுள்ளது. அந்த விரிவாக்கத்தின் சிறு வெளிப்பாடுதான் இந்த ஸ்மார்ட் அடுப்பு.

ஸ்மார்ட் அடுப்பு என்பது என்ன?

வீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளில் மிகவும் சிக்கலானது சமையலாகத்தான் இருக்கும். ஸ்மார்ட் அடுப்பு அந்தச் சமையல் பணியின் சிக்கல்களை முழுவதும் களைந்து அதை மிகவும் எளிதானதாக மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் அடுப்பு ஒரு ஸ்மார்ட் சாதனம். இது வயர்லெஸ் இணைப்புமூலம் நம் வீட்டின் ஸ்மார்ட் ஹப்புடன் இணைந்திருக்கும்.

அந்த ஸ்மார்ட் ஹப்புடனான இணைப்பின் வழியாக வீட்டிலிருக்கும் மற்ற அனைத்துச் சாதனங்களுடன் அது தன்னை இணைத்துக்கொள்ளும். இந்த ஸ்மார்ட் அடுப்பு தன்னகத்தே கொண்ட உணரிகள் (சென்சார்) மூலம் என்ன சமைக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தன் செயல்களை மாற்றியமைத்துக்கொள்ளும். இந்த அடுப்புக்குக் கேட்கும் திறனும் பேசும் திறனும் உண்டு. இதன் செயலியின் மூலம் இதை நாம் நம் வீட்டிலிருந்தும் வெளியிலிருந்தும் எளிதாக இயக்கலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த ஸ்மார்ட் அடுப்பு செயற்கை நுண்ணறிவின் மூலம் செறிவூட்டப்பட்ட அடுப்பு. இந்தச் செயற்கை நுண்ணறிவு பலவித சமையல் குறிப்புகளையும் அதன் தயாரிப்பு முறைகளையும் சமைக்கும் முறைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.

முதலில் எத்தனை நபர்களுக்குச் சமைக்கப் போகிறோம் என்பதை இதற்கு நாம் உணர்த்த வேண்டும். அதன் பிறகு நாம் என்ன சமைக்கப்போகிறோம் என்பதை அதிலிருக்கும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அது உடனே அதற்குத் தேவையான சமையல் பொருட்கள் நம் கைப்பேசியில் ஒளிரச்செய்யும்.

அதே நேரம் நம் வீட்டிலிருக்கும் கூகுள் ஹோம் ஸ்பீக்கரிலோ அமேசான் எக்கோ ஸ்பீக்கரிலோ அதை ஒலிக்கச் செய்யும். அவற்றை எடுத்துவிட்டதை நாம் உறுதி செய்தபின் அது அடுத்தபடியாக அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று நமக்கு விளக்க ஆரம்பிக்கும்.

அதன்படி நாம் அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்துக் கொள்ளலாம். இவ்வாறு நாம் அரைப்பதை இது ஸ்மார்ட் ஹப் மூலம் உணர்ந்து கொள்ளும். இந்த ஆரம்ப கட்ட தயாரிப்புப் பணிகள் நிறைவு பெற்றவுடன் நாம் சமையலுக்குத் தயாராகிவிட்டதை அதற்குச் செயலியின் மூலமோ ஸ்பீக்கரின் மூலம் அதற்கு உணர்த்த வேண்டும்.

அதன் பின் இந்த ஸ்மார்ட் அடுப்பு சமையல் செய்வதற்கு நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும். நாம் தேர்ந்தெடுத்துள்ள உணவுக்குத் தேவையான வெப்பத்தை அளிக்கும்வண்ணம் அது அடுப்பை இயக்கிக்கொள்ளும். பின்பு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும், பின்பு எந்தெந்த பொருட்களை எந்தெந்த நிமிடங்களில் சேர்க்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கும். அதன்படி பொருட்களை நாம் சேர்ப்பதை உறுதி செய்த பின்புதான் இந்த அடுப்பு தன் அடுத்த செயல் நிலைக்குச் செல்லும்.

இதன் இந்தத் தன்மையால் நாம் அடுப்பினருகே எந்நேரமும் நின்றுகொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது நம்மை ஸ்பீக்கரின் வழியோ கைப்பேசியின் மூலமோ அழைத்தபின் நாம் அங்கே சென்றால் போதும். எல்லா நிலைகளும் முடிந்தவுடன் உணவு தயாராகிவிட்டதை இது நமக்கு அறிவிக்கும். சில எளிய உணவு வகைகளை நம் குறுக்கீடு எதுவுமின்றி அதுவே தயாரித்துக்கொள்ளும். இதை ஸ்மார்ட் அடுப்பு என்பதைவிட ஸ்மார்ட் சமையல்காரர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

இதன் விலை

இந்த வகை அடுப்புகளின் வடிவமைப்பு இன்னும் முழுமையடையவில்லை. Inirv, Klov போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் எரிவட்டுகளும் ஸ்மார்ட் திருகுக் குமிழ்களும் ஸ்மார்ட் கிச்சன் கண்காணிப்புக் கருவிகளும் தனித்தனியாகச் சந்தையில் கிடைக்கின்றன. அதே போன்று சாம்சங், பானசோனிக் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் வைஃபை இணைப்பு வசதி கொண்ட மைக்ரோ ஒவென்கள் சந்தைகளில் பிரத்தியேகச் செயலியுடன் கிடைக்கின்றன. ஆனால், இவை எல்லாம் இணைந்த ஒரே அமைப்பாக ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது.

அந்த நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் அடுப்புகளின் வடிவமைப்பு மட்டுமே தற்போது சற்று முழுமையடைந்த நிலையில் உள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் அடுப்புகளின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய்வரை உள்ளது. இன்றைய தேதியில் இதன் தயாரிப்பின் அளவும் சந்தையின் அளவும் மிகச் சிறியதாக இருப்பதால் இதன் விலை மிக அதிகமாக உள்ளது. மற்ற நிறுவனங்களும் தயாரிப்பில் குதித்தவுடன் இதன் விலை வெகுவாகக் குறையுமென்று எதிர்பார்க்கலாம்.

கற்பனையை விஞ்சும் இன்றைய தொழில்நுட்பம்

இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக உள்ளது. அந்த வளர்ச்சி நம் கற்பனைகளின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதால் நம் கற்பனை வடிவங்களின் ஆயுள் வெகுவிரைவாகக் குறைந்துகொண்டேயிருக்கிறது. நம் கற்பனை வடிவங்களுக்கும் அது சாத்தியமாகும் நாளுக்கும் இடையே இடைவெளி என்ற ஒன்றே இல்லை என்ற நிலை ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இதை நிரூபிக்கும் வண்ணம் இன்றைய தொழில்நுட்பம் நம் கற்பனைகளின் வேகத்தை மெல்ல முந்த ஆரம்பிக்கிறது. இந்த ஸ்மார்ட் அடுப்பை அதற்கு ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இனி நாம் இட்லி என்று கேட்டவுடன் இட்லி தானாக நம் முன் வருவதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்த ஸ்மார்ட் அடுப்பின் செயல்பாடு நமக்கு உணர்த்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்