பொருள் புதிது 10: ஸ்மார்ட் விளக்குகள்

By முகமது ஹுசைன்

 

கா

லையிலும் மாலையிலும் கதிரவன் மேகத்தில் நிகழ்த்தும் வண்ணஜாலங்களை நாம் பலமுறை மெய் மறந்து ரசித்திருப்போம். இயற்கைக்கு மட்டுமே சாத்தியமான அந்த வண்ணஜாலத்தை இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் நம் குரலுக்கும் கொடுத்து இருக்கின்றன. ஆம் இன்றைய ஸ்மார்ட் விளக்குகள் நம் குரலுக்குக் கட்டுப்பட்டு ஒளிர்வதும் அணைவதும் மட்டும் அல்லாமல் தன் வண்ணத்தையும் மாற்றிக்கொள்ளும். சூரியன் மறையும்போது கடற்கரை எப்படி ஒளிருமோ அதே வண்ணத்தில் நம் வீட்டையும் ஒளிரவைப்பதும் இப்போது சாத்தியம்தான். ஸ்மார்ட் வீடுகள் இப்போது பரவலான பேசு பொருளாக உள்ளன. அதனுள் நுழைவதற்கு இந்த ஸ்மார்ட் விளக்குகள் நமக்கு எளிய வழி ஆகும். ஏனென்றால், இதை நிறுவுவதும் எளிது, உபயோகிப்பதும் எளிது.

இது சாதாரணக் குமிழ் விளக்குகளைப் போன்று மாட்டியவுடன் ஒளி தராது. இந்த ஸ்மார்ட் விளக்குகள் நம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் ஹப் உடன் வயர்லெஸ் அல்லது புளுடூத் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கணினியில் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிமூலம் நாம் செயல்பட வைக்கலாம். ஸ்மார்ட் விளக்குகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன. இதன் செயலி மிகவும் திறன் மிக்கது. நாம் தூங்கும்போதும் வாசிக்கும்போதும் சாப்பிடும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவற்றுக்குத் தேவையான ஒளியைத் தேவையான அளவில், தேவையான வண்ணத்தில் நம் கண்களுக்கு இதமாக அவை அளிக்கும்.

என்ன வசதிகள் தேவை?

மிகவும் முக்கியமானது என்று பார்த்தால், நம் வீட்டில் ரவுட்டருடன் இணைக்கப்பட்ட வயர்லெஸ் இணைய வசதி இருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக முக்கியமானது ஸ்மார்ட் ஹப். நம் வீட்டில் கூகுள் ஹோம், அமேசான் எகோ, ஆப்பிள் கிட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்குமேயானால், குரல் வழியாக அதை இயக்குவது மிகவும் எளிது.

எப்படி வேலை செய்கின்றன?

நம் கைப்பேசி அல்லது கணினியில் உள்ள செயலியின் மூலமோ கூகுள் அமேசான் ஆப்பிள் போன்ற நிறுனங்களின் ஸ்பீக்கர்களில் உள்ள குரல்வழி சேவை மூலமோ இதை நாம் ஒளிரச் செய்யலாம். மேலும், ஸ்மார்ட் ஹப் உடன் இந்த விளக்குகள் இணைக்கப்பட்டிருப்பதால் நாம் அதில் உள்ள IFTT (இப்போது இது ஒளிர்ந்தால் அடுத்ததாக அது ஒளிர வேண்டும்) வசதியைப் பயன்படுத்த முடியும், உதாரணத்துக்கு நம் கைப்பேசியில் குறுஞ்செய்தி வரும்போது வீட்டின் குறிப்பிட்ட விளக்கின் வண்ணம் மட்டும் மாறி மாறி ஒளிர்வது. இது எப்படி என்று பார்ப்போம். இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள நம் வீட்டில் எல்லா மின்னணுச் சாதனங்களும் ரவுட்டர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தவுடன் ஸ்மார்ட் ஹப் அதனில் உள்ள IFTT வசதியைப் பயன்படுத்தி அந்தக் குறிப்பிட்ட விளக்கின் வண்ணத்தை மாற்றி ஒளிரச் செய்யும். மேலும் குட்நைட் அல்லது குட்மார்னிங் என்று சொன்னால் குரல்வழி சேவைமூலம் ஸ்மார்ட் ஹப் அதை உணர்ந்து விளக்கின் ஒளி அளவையும் வண்ணத்தையும் மாற்றியமைக்கும்.

எத்தனை வகைகள் உள்ளன?

ஸ்மார்ட் விளக்குகள் மூன்று முக்கிய வடிவங்களில் கிடைக்கின்றன. அவை வழக்கமான குமிழ் விளக்குகள், குச்சி விளக்குகள், குவி விளக்குகள். பொருத்துவதற்குக் குமிழ் விளக்குகள் பயொனெட் இணைப்பையும் குச்சி விளக்குகள் எடிசன் திருகுகளையும் குவி விளக்குகள் GU10 இணைப்பையும் பயன்படுத்துகின்றன. ஸ்மார்ட் விளக்குகள் என்பவை இழைகள் சூடாவதால் ஒளிவீசுகின்ற வழக்கமான விளக்குகள் அல்ல. இவை லெட் (LED) வகை விளக்குகள். எனவே, இது மிகக் குறைந்த அளவு மின்சாரத்தையே ஒளிர்வதற்கு எடுத்துக்கொள்ளும். வழக்கமான விளக்குகள் 60W மின்சாரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த ஸ்மார்ட் விளக்குகள் 5.5W முதல் 9.5W வரைதான் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

இது தவிர வண்ணத்தின் அடிப்படையில் இவை இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. அவை வெள்ளை வண்ண விளக்குகள், நிறம் மாறும் தன்மை கொண்ட வண்ண விளக்குகள். வெள்ளை என்று எடுத்துக்கொண்டால் அவை தூய வெள்ளை, மஞ்சள் கலந்த நிறங்களில் கிடைக்கிறது. நிறம் மாறும் தன்மை கொண்ட வண்ண விளக்குகள் சற்று மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு இருப்பதால் அதன் விலையும் சற்று அதிகம்தான்.

விளக்குகளின் விலை

ஸ்மார்ட் விளக்குகளின் விலையை மட்டும் கருத்தில் கொண்டால் அது நம் தலையைச் சுற்றச் செய்யும். எனவே, இது நமக்கு அளிக்கும் மின் கட்டணச் சேமிப்பையும் சேர்த்துதான் இதைப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்குச் சந்தையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு முன்னணி ஸ்மார்ட் விளக்கு அமைப்பின் விலையைப் பார்ப்போம்.

இரண்டு வெள்ளை குச்சி விளக்குகளைக் கொண்ட அமைப்பின் விலை ரூ 35,000/- ஆகும். மூன்று நிறம் மாறும் குச்சி விளக்குகளைக் கொண்ட அமைப்பின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய். இரண்டு மீட்டர் நீளம் கொண்ட வண்ணம் மாறும் லைட் ஸ்டிரிப்பின் விலை ரூ 50,000/- ஆகும். ஒரு வெள்ளைக் குமிழ் விளக்கின் விலை ரூ 11,000/- ஆகும். வண்ணம் மாறும் குவி விளக்கின் விலை ரூ 35,000.

நம் வீட்டின் வரவேற்பறைக்கு ஒரு குச்சி விளக்கு, மூன்று குவி விளக்குகள், தொலைக்காட்சி பெட்டி பின்புறம் ஒரு லைட் ஸ்டிரிப் தேவைப்படும். மேலே உள்ள விலையின் அடிப்படையில் இதற்கு ஆகும் மொத்த செலவு ரூ 1,90,000/- ஆகும். இது தவிர மற்ற அறைகளுக்கென்று ஆறு குவி விளக்குகளைச் சேர்த்தால் மொத்த செலவு சுமார் நான்கு லட்சம்வரை வந்து விடும்.

இது அவசியமானதா?

வெறும் பத்து ரூபாய் விலையில் சாதாரணக் குமிழ் விளக்கு கிடைக்கும்போது இவ்வளவு செலவு செய்து இந்த விளக்கை ஏன் பொருத்த வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டியது நமது தேவையும் வசதியும் விருப்பமும்தான். அந்தப் பதில் எப்படி இருப்பினும் ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு நவீனத் தொழில்நுட்பம். இதன் விலை வருங்காலத்தில் கண்டிப்பாகக் குறையும். அப்போது சூரிய ஒளியின் வண்ணஜாலம் நம் அனைவரின் வீட்டிலும் நிகழும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்