அடுக்குமாடி வீடுகள்: எப்படிப் பார்த்து வாங்குவது?

By நீரை மகேந்திரன்

 

சொ

ந்த வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லோரும் தனி வீடு வாங்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் சென்னை,கோவை போன்ற பெரு நகரங்களில் எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. இதனால் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அடுக்குமாடி வீடுகளை வாங்குகிறார்கள். இதனாலேயே கட்டுமானத் துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களைத் தொடங்குகின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கிய பின்னர் அது சரியில்லை, இது சரியில்லை என அவஸ்தைப்படுவதைவிட முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிறுவனமா, பொறியாளரா ?

நீங்கள் வாங்கும் வீடு அல்லது வாங்கப்போகும் வீடு நேரடியாகப் பொறியாளரால் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் கட்டப்படுகிறதா அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் நிறுவனம் மேற்கொள்கிற திட்டம் வழியே கட்டப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

பொறியாளர் நேரடியாக மேற்கொள்ளும் திட்டம் என்றால் தொழில்நுட்ப விவரங்களை நமக்கு நேரடியாக விளக்குவார். புதிய தொழில்நுட்பங்களோடு திட்டங்களை மேற்கொள்கிறார் என்றால் அது குறித்த அனுபவ அறிவு கொண்டவராக இருக்கிறாரா என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும் திட்டம் என்றால் நிறுவனத்தின் சார்பாக அவர்களது பிரதிநிதிகளோடுதான் பேச முடியும். அவர்களது வாக்குறுதிகள் அனைத்தும் உண்மை என்று சொல்ல முடியாது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும் பேசுவார்கள்.

நம்பகத்தன்மை

சிறிய அளவிலான அடுக்குமாடிக் குடியிருப்போ பெரிய குடியிருப்புத் திட்டமோ எதுவாக இருந்தாலும் அதை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, அனுபவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எத்தனை வருடமாக இந்தத் துறையில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது இந்தத் துறையில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்கு முன் கட்டியுள்ள கட்டிடங்கள், எந்தப் பகுதியில் கட்டியுள்ளார் அதன் தற்போதைய நிலை, அங்கு வசிப்பவர்களின் அனுபவம் போன்றவற்றையும் நேரடியாகக் கேட்டறிய வேண்டும். அவரால் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானம் என்ன என்பதைக் கேட்டறிந்து அதையும் பார்த்துவரவேண்டும்.

நிலத்தின் தன்மை

கட்டிடம் அமைந்துள்ள நிலத்தின் தன்மை என்ன என்பதை நாம் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த இடத்தில் ஏற்கெனவே கட்டிடம் அமைந்திருந்ததா இப்போதுதான் முதன்முறையாகக் கட்டப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே கட்டிடம் இருந்த இடமாக இருந்தால் மண் கெட்டிப்பட்டுக் கடினத்தன்மை கொண்ட தரையாக இருக்கும். இப்போதுதான் முதன்முறையாகக் கட்டப்படும் இடங்களில் மண் இளகியதன்மை கொண்டதாக இருக்கும். என்றாலும் கட்டிடம் கட்டப்படுவதற்கு முன் மண் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பல்லடுக்குக் கட்டிடம் என்றால் தளம் அமைய உள்ள பகுதிகளில் சராசரியாக ஆறு இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பரிசோதனை அறிக்கையில்தான் அந்தப் பகுதி மண்ணின் அடர்த்தி, எடை தாங்கும் தன்மை, எத்தனை அடிக்குக் கீழே உறுதியான மண் அடுக்கு உள்ளது, அதில் கட்டப்பட வேண்டிய கட்டுமானம், தூண்கள் அமைக்கப்பட வேண்டிய விவரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அறிக்கையின் விவரங்கள் நமக்குப் புரிகிறதோ இல்லையோ அந்த அறிக்கையை கேட்டு வாங்கி நமக்குத் தெரிந்த பொறியாளர்களிடத்தில் காட்டி விவரங்களைக் கேட்கலாம்.

கட்டுமான வடிவமைப்பு

மண் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தில் எந்த வகையான கட்டுமானம் அமைக்கலாம் என்பதைக் குறிப்பிடும் அறிக்கை இது. இதன் அடிப்படையில்தான் திட்ட வரைபடத்துக்கான அனுமதி கிடைக்கும். இந்த அறிக்கையில் கட்டிடத்தின் எடைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டிய தொழில்நுட்ப விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக நீர்பிடிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்தால், அதற்கு என்ன வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்கிற ஆலோசனைகள் இந்த அறிக்கையின்படிதான் முடிவு செய்யப்படும். எத்தனை அடி ஆழத்தில் பில்லர்கள் அமைக்கப்பட வேண்டும். அது என்ன வகையான தொழில்நுட்பம், அவற்றின் சுற்றளவு, பயன்படுத்த வேண்டிய கம்பிகள், கான்கிரீட், ஜல்லிகள் அளவு, அவற்றின் அடர்த்தி குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இருக்கும்.

சட்ட விவரங்கள்

திட்ட அனுமதிபடியின்படி வரைபட அனுமதி வாங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் இந்த அனுமதி காலாவதி ஆகாமல் அமலில் உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அனுமதியில் உள்ளபடிதான் கட்டப்பட்டுள்ளதா? எத்தனை அடுக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது அதன் படிதான் கட்டியுள்ளார்களா? விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். விதிமுறைகள் மீறப்படுள்ளது தெரியாமல் வாங்கியிருந்தாலும், சட்டரீதியான சிக்கல்கள் வந்தால் அது நம்மையும் பாதிக்கும்.

கட்டுமான முழுமைச் சான்றிதழ்

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளிடம் குடியிருக்கத் தகுதியானது, விதிமுறைகள் மீறப்படவில்லை என்ற சான்றிதழ் வாங்கப்பட்டிருக்க வேண்டும். இதைக் கேட்டு வாங்க வேண்டியதும் நமது கடமை. திட்ட வரைபடத்தின்படி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்னும் இந்தச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு அளிக்கப்பட வேண்டும். நடைமுறையில் இப்படியான சோதனைகள் செய்வது குறைவுதான். ஆனால், இந்தச் சான்றிதழ் இல்லாமல் வீட்டில் குடியேறுவது சிக்கல்களை உருவாக்கலாம்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் தற்போது நகர்ப்புற மக்களின் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. இதனால்தான் நிறுவனங்களின் அனுபவம், அரசின் முறையான அனுமதி போன்றவற்றைக் கவனிக்க வேன்டியது அவசியமாக உள்ளது. கட்டிட அனுமதி வாங்கியதில் தொடங்கி, வீட்டை ஒப்படைப்பதுவரை எந்த இடத்திலும் தவறு நிகழாமல் இருந்தால்தான் அந்த வீட்டில் நாமும் நிம்மதியாக வாழ முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்