காதல் என்றவுடன் இதுவரை பலரின் மனதில் தாஜ்மகால் நினைவில் வந்துகொண்டிருந்தது. இனி தாஜ்மகால் என்றவுடன் பலரின் மனதில் யோகி ஆதித்யநாத்தான் நினைவுக்கு வரலாம். அப்படி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதற்கான முதல் சுழி, இந்த ஆண்டு ஜுன் மாதம் போடப்பட்டுவிட்டது. அந்த மாதம் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில், உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இப்படிச் சொன்னார்: “தாஜ்மகால் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவில்லை!”
தொடர்ந்து, ஜூலை மாதத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களைப் பராமரிப்பதற்காக, மாநில அரசால் ஒதுக்கப்படும் பட்ஜெட்டில், தாஜ்மகாலுக்கு ஒரு காசுகூட கொடுக்கப்படவில்லை.
மேற்கண்டவற்றின் தொடர்ச்சியாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘உத்தர பிரதேச சுற்றுலா தளங்கள்’ எனும் கையேட்டில், தாஜ்மகால் பற்றி எந்தக் குறிப்பும், படமும் வெளியிடப்படவில்லை. அது, முழுவதுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
முகலாய பாணியின் உச்சம்
தனது காதலி மும்தாஜின் நினைவாக, தாஜ்மகாலைக் கட்டினார் ஷாஜகான். உண்மையில், இது ஒரு கல்லறைதான். ஆனால் அதன் மீது குடிகொண்டிருக்கும் முடிவற்ற காதல்தான், உலகக் காதலர்களை ஒவ்வொரு நாளும் இங்கு வரவைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், தாஜ்மகாலை, ‘அமரத்துவ முகத்தில் வழியும் கண்ணீர்’ என்கிறார். யமுனை நதியின் கரையில், பூங்காக்கள் சூழ, பரிசுத்தத்தின் முகமாக வெண்மை நிறத்தில் வீற்றிருக்கும் தாஜ்மகால், காதலின் சின்னமாக இருக்க இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?
தாஜ்மகால், காதலின் சின்னமாக மட்டும் இருக்கவில்லை. இந்தியக் கட்டிடக் கலையின் சின்னமாகவும் இருக்கிறது. அதிலும் முகலாய பாணி கட்டிடக் கலையின் உச்சம் இது என்று சொல்லலாம். தாஜ்மகாலின் தனித்துவமான கட்டிட வடிவமைப்பு, இதை ‘உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று’ என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது. மேலும் 1983-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அங்கமான யுனெஸ்கோவால் இது ‘உலக பாரம்பரியச் சின்ன’மாக அறிவிக்கப்பட்டது.
பூங்காவைப் போற்றும் கட்டிடம்
அக்பரின் அரசவையில் படைத் தளபதியாக இருந்த ராஜா மன் சிங்கின் பேரன் ராஜா ஜெய் சிங்கிடமிருந்து, பெற்ற நிலத்தில், தாஜ்மகாலைக் கட்டினார் ஷாஜகான். தான் கட்டிய செங்கோட்டையிலிருந்து பார்த்தால், தன்னுடைய காதலியின் கல்லறை தன் கண்களுக்குத் தென்பட வேண்டும் என்ற காரணத்தால்தான், தாஜ்மகாலைக் கட்ட, ஷாஜகான் இந்த இடத்தைத் தேர்வு செய்தார். தாஜ்மகாலின் வருகைக்குப் பிறகுதான், இந்தியாவில் ‘சமாதி கட்டிடக் கலை’ அறிமுகமாகத் தொடங்கியது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
செங்கல், சிவப்பு மணல் கற்கள், மார்பிள் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. ‘தர்வாசா’ (நுழைவாயில்), ‘பகீச்சா’ (பூங்காக்கள்), ‘மஸ்ஜித்’ (மசூதி), ‘நக்கர் கனா’ (ஓய்வறை) மற்றும் ‘ரவுசா’ (கல்லறை) என ஐந்து பிரிவுகளைக் கொண்டதாக இது கட்டப்பட்டிருக்கிறது.
தாஜ்மகாலின் நுழைவாயிலில், ‘காலிகிராஃபி’ எழுத்து வடிவத்தில் குர்ஆன் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கு உள்ள ‘சார்பாக்’ பூங்காக்கள், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ‘சொர்க்கப் பூங்கா’வைப் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 400-க்கும் அதிகமான தாவர வகைகள் உள்ளன.
தாஜ்மகால் கண்களுக்கு மட்டும் இனிமையானது அல்ல. காதுக்கும் இனிமையானது. மும்தாஜுக்காக ஏற்படுத்தப்பட்ட கல்லறையில், அவரின் ஆன்மா சாந்தியடைவதற்காக ‘ஹஃபீஸ்’ ஓதப்பட்டது. அந்த ஒலி அலைகள் எதிரொலித்து, அமைதியாக சுமார் 28 நொடிகள் ஆகின்றன. அதனால், ஹஃபீஸ் வசனங்கள் காற்றில் நீண்ட நேரம் கலந்திருந்து, ஒரு வகையான மன அமைதியை ஏற்படுத்தும்.
காதலைப் போலவே தாஜ்மகாலும் மாயத் தோற்றம் கொண்டது. உதாரணத்துக்கு, கல்லறையிலிருந்து மும்தாஜின் சமாதியைப் பார்க்கும்போது, மிகவும் தூரமாக இருப்பது போலவும், சிறிதாக இருப்பது போலவும் தோற்றமளிக்கும். ஆனால், அருகில் செல்லச் செல்ல அது பிரம்மாண்டமாகத் தெரியும்.
சுமார் 22 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனது. இது அனைவருக்கும் தெரியும். தெரியாத விஷயம் இது: நாம் இன்று தாஜ்மகாலுக்குள் நுழையும் வழியை ஷாஜகான் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. நதியின் வழியாகவே, அவர் தாஜ்மகாலை அணுகினார்.
இப்படிப் பல பெருமைகள் கொண்ட தாஜ்மகால் மீது, சமீபகாலமாக காற்று மாசு காரணமாக கறுப்புத் துகள் படிந்து வருவதைப் பற்றியும், அதிலிருந்து தாஜ்மகாலை மீட்பதைப் பற்றியும் பலரும் பேசி வருகிறார்கள். அதே நேரம் அதன் புகழை வரலாற்றில் குறைத்துவிட முடியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago